Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முருங்கைக்காய் மகிமை! நலம் நல்லது- 46 #DailyHealthDose

நலம் நல்லது

ஒருமுறை மலேஷியாவுக்குச் சென்றிருந்தபோது அது நடந்தது. கோலாலம்பூரில் பூச்சோங் பகுதியில், பக்கத்து வீட்டு மரத்தில் காய்ந்து, உலர்ந்திருந்த முருங்கைக்காய் ஒன்றை, சீனர் ஒருவர் பறித்துக் கொண்டிருந்தார்.

 

"காய்ஞ்சுபோனதை எதுக்கு சார் பறிக்கிறீங்க?’’ என்று கேட்டேன்.

முருங்கைக்காய்

"உயர் ரத்த அழுத்தம் வராமல் இருக்க, முருங்கைக்காய் உள்ளே இருக்கும் உலர்ந்த விதைக்குள் இருக்கும் பருப்பை நாங்கள் சாப்பிடுகிறோம்" என்றார் அவர். இப்படி பாரம்பர்யமான உணவுகளை, கீரைகளை பல நாடுகளில் உள்ளவர்கள் மருந்தாகவே நினைக்கிறார்கள். குட்டியூண்டு தேசமான குவாந்தமாலா மாதிரியான நாடுகளில் இருந்து, ஜெர்மனி முதலான ஐரோப்பிய நாடுகள் வரை, தம் பாரம்பர்ய அறிவுகளையும் உணவு கலாசாரத்தையும் உற்றுப் பார்த்து, அதன் மாண்பை மீட்டிஎடுக்க முழு வீச்சில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர்களோடு ஒப்புநோக்குகையில், பாரம்பர்ய அறிவை எக்குத்தப்பாக ஸ்டாக் வைத்திருக்கும் நம் பயணத்தின் வேகம் மிக மிகக் குறைவு.

 

`காப்புரிமைச் சிக்கல் வருமோ?’ என்ற கார்ப்பரேட் சிந்தனையாலும், 'பழசு காசு தராது’ எனும் அறிவியல் குருமார்களின் தீர்க்கதரிசனங்களினாலும், இந்தியப் பாரம்பர்ய உணவும் மருந்தும் மெள்ள மெள்ள மறதியில் மூழ்கிவருகின்றன.

 

'செறிமந்தம் வெப்பந் தெறிக்குந் தலைநோய்

வெரிமூர்ச்சை கண்ணோய் விலகும்’

- என முருங்கை பற்றி, சித்த மருத்துவம் பாடியபோது, சித்தர்களுக்கு முருங்கை இலையில் உள்ள கண் காக்கும் பீட்டாகரோட்டின்களைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், கண் நோயைப் போக்க முருங்கை அவசியம் என்பதை உணர்ந்திருந்தனர்.

முருங்கை விதை

இன்றைய உணவறிவியல், `கண்ணுக்கு மிக அத்தியாவசியமான அந்த கரோட்டின்களின் அளவு, கேரட்டுகளைவிட முருங்கை இலையில் அதிகம்’ என்று சான்றளிக்கிறது.

 

முருங்கையால் கிடைக்கும் நன்மைகள்...

* பீட்டா கரோட்டின் நிறைந்த தினையரிசி சாதத்துக்கு, முருங்கைக்காய் சாம்பார் வைத்து, அதற்குத் தொட்டுக்கொள்ள முருங்கைக்கீரையைப் பாசிப் பருப்புடன் சமைத்து, சாப்பாட்டுக்குப் பின்னர் பப்பாளிப் பழத்துண்டுகள் கொடுத்தால், நம் நாட்டில் வைட்டமின் ஏ சத்துக் குறைபாட்டினால் வரும் பார்வைக் குறைவை நிச்சயம் சரிசெய்யலாம். செலவும் மிகக் குறைவு.

* முருங்கையில் பொட்டாசியச் சத்து, வாழைப்பழத்தைக் காட்டிலும் அதிகம். புரதச்சத்து, முட்டைக்கு இணையாக முருங்கை இலையில் உண்டு. பாலைக் காட்டிலும், நான்கு மடங்கு கால்சியம் முருங்கையில் உண்டு. ஆரஞ்சைவிட அதிகமான வைட்டமின் சி-யும் முருங்கையில் உண்டு. மற்ற கீரைகளைவிட, முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து அதிகம். மொத்தத்தில், முருங்கை சங்ககாலம் தொட்டு நம்மிடம் இருந்த மாபெரும் வைட்டமின் டானிக்.

முருங்கைக்காய்

 

* சர்க்கரை நோயாளிகள், வாரத்துக்கு இரண்டு நாள் கம்பு, சிறிய வெங்காயம், முருங்கை இலை போட்ட அடை, ரொட்டி அல்லது கேழ்வரகு தோசையில் முருங்கை இலை போட்டுச் சாப்பிட்டாலே, அதிகபட்சக் கனிம, உயிர்ச் சத்துக்கள் கிடைக்கும்; சர்க்கரைநோய் உண்டாக்கும் சோர்வும் தீரும்.

* சித்த மருத்துவப் பரிந்துரைப்படி, முருங்கை, உயர் ரத்த அழுத்த நோய்க்கும் மருந்து. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், சோர்வு, நரம்புத் தளர்ச்சி போன்ற `காம்போ’ வியாதிகள் பலரது வாழ்விலும் கூட்டமாக வந்து கும்மியடிக்கும். அந்த மொத்தக் கூட்டத்தையும் தனியாளாக விரட்டும் இந்த ஒற்றை முருங்கை.

முருங்கைக் கீரை சூப்

 

* நம் குழந்தைகளிடம் முருங்கைக்கீரை பொரியல், தினையரிசி சாதம் பற்றிச் சொல்ல நினைப்பதும், அவற்றை மெல்ல வைப்பதும் சிரமம்தான். ஆனால், எப்படியாவது முருங்கைக்கு குழந்தைகளைப் பழக்கப்படுத்திவிடுவது அவர்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது.

மொத்தத்தில் முருங்கை பல நோய்கள் வராமல் தடுக்கும்... காக்கும்!

 

தொகுப்பு: பாலு சத்யா

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement