Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புற்றுநோயைத் தடுக்கும் எலுமிச்சை! நலம் நல்லது-47 #DailyHealthDose

றைவழிபாடாக இருந்தாலும் சரி, பெரியோரை வணங்கும் விருந்தோம்பலாக இருந்தாலும் சரி, எலுமிச்சைக்கு தமிழர் அளித்திருக்கும் இடம் பெரிது. மஞ்சள், வேம்புபோல எலுமிச்சைக்கும் நம் மருத்துவ மரபில் பெரும் பயன் இருந்திருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக அத்தியாவசியமான வைட்டமின் சி சத்து, எலுமிச்சையில் இருப்பது நமக்குத் தெரியும். ஆனால், வாந்தி, தலைசுற்றல், உயர் ரத்த அழுத்தம் காரணமாக வரும் தலைவலி, மயக்கம் போன்ற பல பிரச்னைகளுக்கும் எலுமிச்சை மருந்து என்பது பலருக்கும் தெரியாத விஷயம். 

எலுமிச்சை

`மந்திரிக்கு மந்திரியாக, மன்னனுக்கு மன்னனாக, தந்திரிக்கு மித்திரனாக...’ என விடுகதையாக சித்தர் தேரன் மருந்து பாரதத்தில் பாடியிருக்கும் பழம் எலுமிச்சை. அதாவது, `மந்திரி’ எனும் `பித்தம்’ அதிகரித்துவரும் நோய்க்கு அரசவையின் மந்திரிபோல் சமயோசிதமாக உடலுக்கு வேறு பிரச்னை எதுவும் வராமல், பக்கவிளைவு இல்லாமல் தணிக்கும் ஆற்றல் கொண்டது; உடலின் மன்னனான  `வாதத்தை’, சரியாக நிர்வகிக்கும் மன்னனாக இருக்கிறது; தந்திரமாக உடலில் சேரும் `கபத்துக்கு’ மித்திரனாக (நண்பனாக) இருந்து அதை வெளியேற்றும் இயல்புகொண்டது. `இந்த மூன்று பணிகளையும் செவ்வனே செய்யும் இது’ எனக் கவித்துவத்துடன் சொல்கிறார் சித்தர் தேரன். 

இனிக்க இனிக்க எலுமிச்சையின் பலன்கள்! 

* ஈராக் நாட்டின் எலுமிச்சையைக் காட்டிலும், நம் ஊர் எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம். `சீமை கமலா ஆரஞ்சு’ எனச் சொல்லி, அதிக விலைக்கு விற்கப்படும் பழத்துக்கு இணையான வைட்டமின் சி சத்து, அதைவிட விலை குறைவான நம் நாட்டு எலுமிச்சையில் உண்டு. 

* புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் உணவு வகைகளில், சீனாவின் புரோக்கோலி போல், காபூல் மாதுளையைப்போல், இதன் பயனும் பேசப்பட்டு வருகிறது. 

லெமன்

* எலுமிச்சையின் தோலில், பழத்தில் உள்ள எரியோசிட்ரின் (Eriocitrin), ஹெஸ்பெரிடின் (Hesperidin), நாரின்ஜின் (Naringin) முதலான ஃப்ளேவோன் கிளைகோசைட்ஸ் (Flavone Glycosides) உடல் எடை குறைப்பில், சர்க்கரைநோய் வராமல் தடுக்க, ரத்தக் கொழுப்பைக் குறைக்க என பல வழிகளில் பயனாவதை நவீன உணவு அறிவியல் உறுதிப்படுத்தியுள்ளது. 

* போர்ச்சுக்கல் நாட்டில் நடந்த ஓர் ஆராய்ச்சி, லெமன் டீயில் தேன் சேர்த்துச் சாப்பிடுவதன் பயனை முழுமையாக விளக்கியிருக்கிறது. முக்கியமான விஷயம்... அந்தத் தேநீரில் பாலோ, வெள்ளைச் சர்க்கரையோ சேர்க்கக் கூடாது. அதைவிட முக்கியமான விஷயம், அந்தத் தேநீரை, `இன்ஸ்டன்ட் லைம் டீ பௌடரை’ வெந்நீரில் கலந்து தயாரிக்கக் கூடாது. அதில் மணம் இருக்கும்... ஆனால், மருத்துவப் பலன் அதிகம் இருக்காது. காரணம், தேயிலையை இன்ஸ்டன்ட் பொடியாக மாற்றும் தொழில்நுட்பத்தில் முதலில் சொன்ன பல மருத்துவக் குணமுள்ள பாலிபீனால்கள் அனைத்தும் சிதைந்துவிடும். உண்மையான லெமன் டீயின் பயன் கிடைக்க வேண்டுமா? தேயிலை போட்ட, கொஞ்சம் எலுமிச்சையைப் பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிடுங்கள். 

லெமன் ஜூஸ்

* ஒரு பக்கம், `எலுமிச்சைச் சாறு சேர்ந்த திரவத்தால் பாத்திரம் கழுவலாம், கழிப்பறை கழுவலாம்’ என நவீன வணிகம் இதை வேறு இடத்துக்குக் கொண்டு செல்கிறது. மறுபக்கம், `எலுமிச்சை, கீமோதெரபியைக் காட்டிலும் பாதுகாப்பான கேன்சர் மருத்துவம்’ எனத் தகவல்கள் பரபரக்கின்றன. எலுமிச்சைச் சாறு, கேன்சர் செல் வளர்ச்சியைத் தடுப்பதைப் பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. ஆனால், எலுமிச்சையின் பயன்கள் முழு மருந்தாக மாறுவதற்குப் பல காலம் பிடிக்கும். காப்புரிமைப் பிடியில் சிக்கியுள்ள மருந்து நிறுவனங்கள், அதற்கெல்லாம் ஆகும் செலவைக் கணக்கிட்டுத்தான் ஆராய்ச்சியையே தொடர்வார்கள். ஒருவேளை, `அதிக லாபம் சம்பாதிக்க முடியாது’ எனக் கணக்காளர்கள் கணக்கிட்டுச் சொல்லிவிட்டால், அந்த நிறுவனங்கள் பயனளிக்கும் மருத்துவ முடிவுகளையே ஓரம் கட்டி வைத்துவிடும். 

எலுமிச்சம்பழம்

* கேன்சர் நோயாளிகள், எலுமிச்சைச் சாற்றில் தேன் சேர்த்தோ, எலுமிச்சைச் சாறு கலந்த பச்சைத் தேநீரில் (Green Tea) தேன் சேர்த்தோ தங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளோடு கூடுதலாகச் சாப்பிடுவதில் தவறு ஒன்றும் இல்லை. 

* மன அழுத்தம், மனச் சோர்வு, மனப் பிறழ்வு போன்ற பல மன நோய்களுக்கு நெடுங்காலமாகப் பயனளித்துவரும் மருத்துவ மூலிகை எலுமிச்சை. எலுமிச்சைச் சாற்றின் குறைந்த அளவு அமிலம் இருந்தால்கூட, அது எளிதில் ஜீரணித்து, உடலின் காரத்தன்மையை அதிகரிப்பதால், புற்றுநோய் வராமல் தடுக்கும் வல்லமை கொண்டது. அத்துடன் சர்க்கரை நோயையும் தவிர்க்க இது உதவிடும். 

எனவே, எலுமிச்சை மீது இச்சைகொள்வோம்!

தொகுப்பு: பாலு சத்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement