​சால்ட் அண்ட் பெப்பர்... ஹேர் ஸ்டைல் அல்ல.. குறைபாடு!

“நம்ம தல மாதிரி `பெப்பர் அண்ட் சால்ட் ஹேர் ஸ்டைல்’ மச்சான்!” என்று மழுப்புவார்கள் சில இளைஞர்கள். “ஏம்ப்பா, என் பின்னலையே உத்து உத்துப் பார்க்குறே..? வெள்ளை முடி ஏதாவது தெரியுதா என்ன?’’ செல்லமாகக் கடிந்துகொள்வார்கள் சில இளம் பெண்கள். பேச்சில் இப்படிப் பூசி மழுப்புவது இருக்கட்டும்... பெண்கள் துப்பட்டாவால் கூந்தலை மூடி மறைப்பது நடக்கட்டும்... ஆண்கள், ஸ்டைலிஷாக தலையில் கேப் மாட்டிக்கொண்டு வலம் வரட்டும்... உண்மை என்பது வேறு, இளநரை. இன்று நம் இளம் வயதுக்காரர்களிடம் நீக்கமற நிறைந்திருக்கும் ‘தலையாய’ப் பிரச்னை.

 

ஹேர் ஸ்டைல்

இளம் வயதிலேயே இளநரை வந்துவிட்டதற்காகக் கவலைபட்ட வேண்டியதில்லை. இளநரை வருவதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு, அதை போக்குவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும்.

இளநரை தோன்றுவதற்கான காரணங்கள், நீக்கும் வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்குகிறார் சித்த மருத்துவர் ரமேஷ்...

இளநரை ஏற்படுவதற்கான காரணங்கள்...

டென்ஷன், மரபியல் காரணம், தூக்கமின்மை, வாழ்வியல் மாற்றம், மனஅழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் பிரச்னை, உடல் உஷ்ணம், உடலில் உப்புச்சத்து அதிகம் இருப்பது, உப்பு நீரில் குளிப்பது, உடலின் வளர்ச்சிதை மாற்றத்தில் பாதிப்பு ஏற்படுவது போன்ற பல்வேறு காரணங்களால் சிறுவயதிலேயே இளநரை ஏற்படுகிறது.


 

இளநரை மறைய சாப்பிடவேண்டிய உணவுகள்...

பாரம்பர்ய உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சிறுதானியங்கள், நாட்டுக் காய்கறிகளைச் சாப்பிட்டாலே போதும், இளநரையைத் தவிர்த்துவிடலாம்.

பேரீச்சம், கறிவேப்பிலை, கீரை போன்ற இரும்புச்சத்து உள்ள உணவுகளை எடுக்க வேண்டும்.

வாரத்துக்கு இரண்டு முறை உணவோடு, நாட்டு பொன்னாங்கண்ணிக்கீரை (சிவப்பு இலைகள்கொண்டது) சாப்பிட வேண்டும்.

அவ்வப்போது, முள்ளங்கி, அவரை, பேரீச்சை, முருங்கைக்காய், பீட்ரூட், கம்பு, கேழ்வரகு, முட்டையின் வெள்ளைப்பகுதி உள்ளிட்டவை எடுக்கலாம்.


 

இளநரை மறைய எண்ணெய்க் குளியல்...

வாரத்துக்கு இரண்டு முறை தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து எண்ணெய்க் குளியல் போட வேண்டும்.

பெண்கள் - செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குளிக்கலாம்.

ஆண்கள் - புதன் மற்றும் சனிக்கிழமைகளில் குளிக்கலாம்.

பாரம்பர்ய முறையான அரப்பு, சிகைக்காய் போன்றவற்றை வாரம் ஒருமுறை தேய்த்துக் குளிக்கலாம்.

வாரத்துக்கு ஒரு முறை, உடல் முழுக்க எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.


 

இளநரையை போக்கும் ஹேர்பேக்

கடுக்காய், நெல்லிக்காய், கஸ்தூரி மஞ்சள், வேப்ப வித்து, வெண் மிளகு ஆகிய ஐந்து மூலிகைகளின் கூட்டுப்பொருட்கள் அடங்கிய பஞ்சகர்ப்ப சூரணத்தை தேவையான அளவு எடுத்து, பாலுடன் சேர்த்து தலைக்குத் தேய்த்து, ஹேர்பேக் போலப் போட்டு குளித்துவந்தால், இளநரை மறையும்.

செம்பருத்தி, மருதாணி, நெல்லி, வெந்தயம், கறிவேப்பிலை, வேப்பிலை, கற்றாழை ஆகியவற்றை அரைத்து ஹேர்பேக் போன்று தடவிக் குளித்தால் இளநரை மறையும்.

இளநரை மறைய எடுத்துக்கொள்ள வேண்டிய மூலிகைகள்...

நெல்லிக்காய், கடுக்காய், இரும்புச்சத்து அதிகம் உள்ள மூலிகைகள், அயச்செந்தூரம், காந்த செந்தூரம் மற்றும் ஹேர்டானிக் போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளலாம். இரும்புச்சத்தை கிரகிக்க வைட்டமின் சி அவசியம் என்பதால், வைட்டமின் சி நிறைந்த உணவுகளையும் எடுக்க வேண்டும்.

 

பலன்கள்...

முடி கருப்பாகும். அடர்த்தியான கூந்தல் கிடைக்கும்.

உடல் குளிர்ச்சி அடையும்.

கண் பார்வைக்கோளாறு சரியாகும்.

தலை நோய்கள் குணமாகும்.

உடலில் உப்புச்சத்து குறையும்.

ரத்தம் விருத்தியாகும். எலும்பு வலுவாகும்.

நினைவாற்றல் அதிகரிக்கும். மனஅழுத்தம், மனச்சோர்வு நீங்கும்.

 

- ச.மோகனப்பிரியா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!