Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வைரமுத்து வெளியிட்ட 'உடலும் உணவும்'! 

எஸ். அமுதகுமார்

* நமது உணவுக் கொள்கையில் கசப்பான உண்மை ஒன்றை பின்பற்ற வேண்டும். அது நமக்கு எது ரொம்ப பிடிக்குமோ அதை அதிகமாக சாப்பிடக்கூடாது. நமக்கு எது ரொம்ப பிடிக்காதோ அதை அதிகமாக சாப்பிட வேண்டும். இது சர்க்கரைக்கு மிகவும் பொருந்தும். சந்தோஷமாக வாழ, முடிந்த அளவு சர்க்கரையை தவிர்ப்போம்! 

* தெளிவுப்படுத்தப்பட்ட வெண்ணெய்தான் நெய். இந்தியாவிலும், பாகிஸ்தானிலும்தான் நெய் முதன்முதலில் உபயோகத்துக்கு கொண்டுவரப்பட்டது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. நெய் கொழுப்பை அதிகரித்துவிடும், ரத்தக்குழாயை அடைத்துவிடும் என்றெல்லாம் பயப்படாமல், குறைவான அளவு நெய்யை உணவில் வாரத்துக்கு ஒருமுறை சேர்த்துக்கொள்வது நல்லது. அளவான நெய்யும் ஆரோக்கியம் தரும். 

* டென்ஷன், மன உளைச்சல், தூக்கமின்மை, தலைவலி, உற்சாகமின்மை, மனச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை ஆகிய பிரச்னைகள் உள்ளவர்கள், கேழ்வரகு உணவுப்பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மன உளைச்சல் குறைந்து, மனது இதமாகி, நிம்மதி கிடைக்க உதவி புரியும்.  

* பாலோடு பேரீச்சம்பழம், பாலோடு தானியங்கள், பாலோடு உலர்ந்த பழங்கள், பாலோடு ஓட்ஸ், பாலோடு பிரெட் பட்டர், பாலோடு வாழைப்பழம் ஆகியவை தூக்கத்தை வரவழைக்கும்.

* பூண்டில் உடலுக்குத் தேவையான 17 அமினோ அமிலங்கள் இருக்கின்றன. உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்திலுள்ள பிரமிடுகளைக் கட்டும்போது, அந்த கட்டுமானத் தொழிலாளர்களின் உடலுக்குத் தெம்பும், உற்சாகமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களுடைய அன்றாட உணவில் பூண்டு அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கிறது. 

* சாப்பிடுவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னால் ஜூஸ் குடிப்பது நல்லது. சாப்பாட்டுக்குப் பிறகு குடிக்கிறீர்கள் என்றால், ஜீரண என்ஸைம்கள் வாயில் நன்றாக சுரந்து, ஜூஸோடு சேரும் வரை காத்திருப்பது நல்லது. சாப்பாட்டுடன் ஜூஸ் குடிப்பது செரிமானத்தை தடுக்கும். மேலும், இரைப்பைக்கு அதிக சுமையாகிவிடும். ஆகவே ஜூஸை தனியாக குடிப்பதே நல்லது. 

* அவிழ்த்துவிடப்படும் கூந்தல் உடலின் அசைவுகளுக்கு தக்கபடி அசைகிறது. அப்படி அசையும் நிலை முடிக்கு நல்லது. கெட்டி வைத்தால் அப்படியே நிலையாக இருக்கும்; அசைவு ஏற்படாது. முடியின் அசைவு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது முடியின் வளர்ச்சிக்கு ஏற்றது. நன்றாக பராமரித்தால் 'லூஸ் ஹேர்' தான் சிறந்தது. அதே சமயம் அதனை நன்றாக சீவி, பராமரிப்பது மிக அவசியம்!

* பட்டினி என்பது விளையாட்டான காரியம் அல்ல. பட்டினி தவிர்க்கப்பட வேண்டும். அதிலும் சர்க்கரை வியாதி போன்ற நாள்பட்ட நோயுள்ளவர்கள் ஒருவேளை, இருவேளை பட்டினியாய் இருப்பது கூட நல்லது கிடையாது. ஒருநாள்தானே... சமாளித்துக்கொள்ளலாம் என்று நினைத்தாலும், வெளியே தெரியாமல் உடலுக்குள் பயங்கர பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.  எனவே தேவையில்லாமல் பட்டினி இருக்க வேண்டாம். 

மேற்கூறிய மருத்துவ தகவல்கள்,  முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிரபலங்களின் மருத்துவ ஆலோசகரும் மருத்துவ எழுத்தாளருமான டாக்டர் எஸ். அமுதகுமார் எழுதிய, 'உடலும் உணவும்' என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளவை. இதுபோன்ற இன்னும் ஏராளமான மருத்துவ தகவல்களுடன்  நாளிதழ் ஒன்றில் வாரம் தோறும் எழுதி, வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற தொடர்தான் தற்போது புத்தகமாக வெளிவந்து, சென்னை புத்தகக் காட்சியிலும் விற்பனைக்கு வந்துள்ளது. 

இப்புத்தகத்தின் முதல் பிரதியை கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட,  எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஏ.சி. சண்முகம் அதனைப் பெற்றுக்கொண்டார். 

மருத்துவம் பயிலும் மாணவராக இருந்தபோதே பல்வேறு வார, மாத, தினசரி இதழ்களில் ஏராளமான மருத்துவக் கட்டுரைகள் எழுதியவர். இதுவரையில் ஐந்து மருத்துவப் புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ள டாக்டர் எஸ். அமுதகுமாருக்கு 'உடலும் உணவும்' ஆறாவது புத்தகம்! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement