குட்நைட் உறக்கம் வரச் செய்யும் நல்ல மெத்தை எது? #10CheckPoints

தூக்கம் என்பது வரமா? நிச்சயமாக! இன்றைக்குப் பலவிதமான உடல் உபாதைகளுக்கு ஆரம்பப்புள்ளியாக இருப்பது தூக்கமின்மைதான். ஆழ்ந்த, நிம்மதியான உறக்கம் என்பது நம் உடல் ஆரோக்கியமாக, எந்த வலியோ உடல் உபாதையோ இல்லாமல் இருப்பதை உணர்த்தும் ஒரு நல்ல அறிகுறி. நல்ல உறக்கம் வரவில்லை என்றால், `மெத்தை வாங்குனேன்... தூக்கத்தை வாங்கலை’ எனப் புலம்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான். நிம்மதியும் மன அமைதியும் தரும் தூக்கத்துக்குத் தேவை, சிறந்த மெத்தை என்பதும் உண்மையே.

 

உறக்கம்

 

எலும்பு முறிவு மருத்துவர் ஆனந்த், நமக்கு நல்ல தூக்கம் தருவதற்கு உதவும் மெத்தைகள், அவற்றைப் பயன்படுத்தும் முறைகள், எதில் தயாரானது சிறந்தது என எல்லாவற்றையும் இங்கே விளக்குகிறார்...

 

* கடினமான பஞ்சினால் ஆன மெத்தையில் படுத்தால், அது முதுகுவலியை ஏற்படுத்திவிடும். எனவே, முதுகுவலி இருப்பவர்கள் பருத்தி இல்லாத, இலவம் பஞ்சில் தயாரான மெத்தையில் படுப்பதே சிறந்தது.

 

* ஏர் மெத்தைகளும் வாட்டர் மெத்தைகளும் நம் உடலுக்கு ஏற்ப வடிவத்தை மாற்றிக்கொள்ளும் தன்மைகொண்டவை. எத்தனை நாட்களுக்கு இதில் படுத்திருந்தாலும், எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாதவை.

* சிலருக்கு தரையில் படுப்பதாலும், பாயில் படுப்பதாலும் முதுகுவலி உண்டாவதற்கான வாய்ப்பு உண்டு. எல்லோரும் சாதாரண இலவம் பஞ்சு மெத்தைகளைப் பயன்படுத்துவதே நல்லது. நிம்மதியான உறக்கத்தைக் கொடுக்க அதுவே போதுமானது.

 

* நீண்ட நாட்கள் படுக்கையில் கிடக்கும் நோயாளிகள் ஏர் பெட் அல்லது வாட்டர் பெட் பயன்படுத்தலாம். கோமா, பக்கவாதம் வந்தவர்களுக்கு, படுத்த படுக்கையாக இருப்பதால், `பெட் சோர்' (Bed Sore) என்று சொல்லப்படும் கிருமித்தொற்று வர வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க இந்த மெத்தைகள் உதவும்.

 

* இலவம் பஞ்சு மெத்தை உடலில் உள்ள சூட்டை மேலும் அதிகரிக்கும். எனவே, வெயில் காலங்களில் அந்த மெத்தைகளைப் பயன்படுத்துவது சிறந்தது.

 

* சில மெத்தைகளை அடிப்பகுதியில் பஞ்சும் அதற்கு மேலே இலவம் பஞ்சும் இருப்பதுபோல் வடிவமைத்திருப்பார்கள். அதைத் தட்பவெட்பத்துக்கு ஏற்றாற்போல் மாற்றி, மாற்றிப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

* ஆஸ்டியோபொரோஸிஸ், ஆத்ரைட்டிஸ் போன்ற பிரச்னைகளுக்கென்றே பிரத்யேகமான மெத்தைகள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.

 

* நாம் படுப்பதற்கு ஏற்ற வகையில் நம் வசதிக்குத் தகுந்தாற்போல் அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் மெத்தைகளும் (Adjustable Beds) உண்டு. இவற்றைப் பயன்படுத்தி, இடை மற்றும் முழங்கால் அழுத்தத்தைக் குறைக்க முடியும்.

 

* மெத்தையைப்போலவே தலையணையிலும் கவனம் செலுத்த வேண்டும். அதிக உயரம் இல்லாத தலையணைகளைப் பயன்படுத்துவதே அனைவருக்கும் நல்லது.

* ஒரு மெத்தையை நீண்டகாலத்துக்குப் பயன்படுத்தக் கூடாது. பத்து வருடங்களுக்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும். வாங்குவதற்கு முன்னர் நன்கு சரிபார்த்து வாங்க வேண்டும்.

 

நல்லுறக்கம் வர, நல்ல மெத்தையைப் பயன்படுத்துவோம்!

 

- செ.சங்கீதா, மாணவப் பத்திரிகையாளர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!