Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எது காயகல்பம்? நலம் நல்லது-48 #DailyHealthDose

நலம் நல்லது

`காயகல்பம்’. இந்த வார்த்தையைப் பல ஆண்டுகளாக நாம் அறிவோம். அது ஒரு நுட்பமான அறிவியல். இன்றைக்கு வணிகத்தின் பிடிக்குள் சிக்கிக்கொண்டு சீரழிகிறது. கட்டுமஸ்தான, சிக்ஸ்பேக் உடல்வாகுடன் ஒருவர், ஒரு பாட்டிலைக் கையில் வைத்துக்கொண்டு விளம்பரம் செய்வதை நாமும் பார்த்திருப்போம். `இந்த காயகல்பத்தைச் சாப்பிட்டதாலதான் என் உடம்பில் இவ்வளவு வலு, அதோட `அந்த’ விஷயத்துல வீரியமும் கிடைக்குது’ என்று உளறிக்கொட்டிக்கொண்டு இருப்பார். சொல்லப்போனால், காயகல்பம் என்றாலே, `ஆண்மைக்குறைவுக்கான மருந்து’ என்ற அர்த்தமற்ற ஒன்றாக்கிவிட்டது, இதுபோன்ற வியாபார உத்திகள்!

அந்தக் காலத்தில், வாழ்வை `இறைவன்’ எனும் புள்ளியில் விரித்துப் பார்த்தவரும் சரி, `இயற்கை’ எனும் புள்ளியில் பார்த்தவரும் சரி, நோயற்று ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழ்வதை மட்டுமே அடிப்படை ஆரோக்கியம் என அறிந்துவைத்திருந்தார்கள்.

உண்மையில் காயகல்பம் என்றால் என்ன?

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, `உடம்பை வளர்த்தேன்... உயிர் வளர்த்தேனே!’ என்ற திருமந்திரமும், `உயிர்க் குருதியெல்லாம் உடம்பின் பயனே... அயர்ப்பின்றி யாதியை நாடு’ எனும் ஔவையின் வரிகளும் கூறின. சுருக்கமாகச் சொன்னால், அந்தக் காலத்திலேயே புழக்கத்தில் இருந்த தடுப்பூசி டானிக்குகள் என்றோ, காயகல்ப அறிவியலைப் புரிந்துகொள்ளலாம்.

காயகல்பம்

சில காயகல்ப மருந்துகளை, நோயில்லா காலத்தில் சில உணவு கட்டுப்பாடுகளுடன் ஒரு மண்டலம் அல்லது குறிப்பிட்ட சில நாட்கள் சாப்பிடும்போது, உடல் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உடல் தோல் சுருக்கம், முடி நரைப்பது நிற்கும் அல்லது தள்ளிப் போகும். ஒரு மருந்து அல்லது நலம்புரிதல், வயோதிகத்தைத் தள்ளிப்போட உதவுகிறது என்றால், இன்றைய விஞ்ஞான புரிதலின்படி செல் அழிவை மீட்டெடுக்கும் பணியைச் செய்யக்கூடிய தாவர நுண்கூறுகள் அதில் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று பொருள்.

காயகல்பம் என்றால், முன்பு சொன்னபடி, `அண்டாகாகஸம்... அபூகா ஹுகும்’ கதையெல்லாம் அல்ல. இஞ்சித் தேனூறல், கற்றாழை, வேம்பு, கரிசாலை, பொன்னாங்கண்ணிக்கீரை, மணத்தக்காளி, மஞ்சள் பூசணி இவற்றைத்தான் நோயற்ற வாழ்வுக்கான கற்ப மூலிகைகளாகக் கருவூரார் சித்தர் சொல்கிறார். கருவூரார், `வாத காவிய’த்தில் சொல்லியிருக்கும் 108 மூலிகைகளில் பல, காய்கறி மார்க்கெட்டிலும், வாய்க்கால் வரப்பு ஓரங்களிலும், கோடை வாசஸ்தல மலைகளிலும் கிடைப்பவை.

மஞ்சள் பூசணி

பொன்னாங்கண்ணி கீரைமணத்தக்காளி கீரை

பயணம் செய்துவிட்டு வந்து காலில் நீர் கோத்திருப்பவருக்கு சுரைக்காய் கூட்டு; தூக்கமில்லாமல் கண்விழித்துப் பணியாற்றியவருக்கு கண் எரிச்சலுடன் உடல் சூடும் அதிகமாகியிருக்கும்.. அவருக்கு கீழாநெல்லியும் மோரும்; மந்தபுத்தி போக சிறுகீரையில் மிளகு சேர்த்துக் கூட்டு; சளி பிடித்தவருக்குத் தூதுவளை ரசம்; மெலிந்திருப்பவருக்கு தேற்றான்கொட்டைப் பொடி; மேகவெட்டைக்கு ஓரிதழ் தாமரை... எனக் காயகல்ப மருந்துப் பட்டியல் தமிழர் மருத்துவப் புரிதலில் ஏராளம்.

வேம்பு

திருவள்ளுவ நாயனாரின் கற்ப பாடல் இப்படிச் சொல்கிறது... `காலமே யிஞ்சியுண்ணக் காட்டினார் சூத்திரத்தில் மாலையதிலே கடுக்காய் மத்தியான சுக்கருந்த...’ அதாவது, காலையில் இஞ்சி, கடும் பகலில் சுக்கு, மாலையில் கடுக்காய் சாப்பிடு’ என்று அர்த்தம். அதற்காக, இஷ்டத்துக்கு எதையும் சாப்பிடலாம், எப்படியும் வாழலாம் என்று அர்த்தம் அல்ல. எந்தக் கற்பமும் முறையான யோகப் பயிற்சியுடன் இருந்தால்தான் பயன் தரும். `வளியினை வாங்கி வயத்தில் அடக்கில் பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்’ எனத் திருமூலர் மூச்சுப் பயிற்சியில் சொன்னதும் இதைத்தான்.

அரிஸ்டாட்டில், கேலன், ஹிப்போகிரட்டஸில் இருந்து இன்றைய நவீன மருத்துவப் புரிதல் வந்ததுபோல, நம் தேரனும், திருமூலரும், அகத்தியரும் சொன்னதை ஆய்ந்தும், அலசியும், விரித்தும் பயனாக்க சமகால விஞ்ஞானிகள் தயக்கம் காட்டவே கூடாது. நம் பாரம்பர்ய தமிழ் மருத்துவம் காட்டும் காயகல்பம் எனும் அருமருந்தின் உண்மையான பொருளை உணர்வோம்... ஆரோக்கியத்துக்கு அடித்தளம் இடுவோம்!

 

தொகுப்பு: பாலு சத்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement