Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போகிப் பண்டிகை காப்புக்கட்டு... உடலுக்கு வலுசேர்க்கும் விழா!

போகிப் பண்டிகை  தும்பையின் முக்கியத்துவம் 

 


ஆடிப்பட்டத்தில் தேடிவிதைக்கும் விவசாயிகள், ஆறு மாத சீரான இடைவேளிக்குப்பின் பூத்துக்குலுங்கும் கதிர்களை அறுவடை செய்யத் தொடங்கும் மாதம் 'தை'  என்றால் அது  மிகையல்ல. ஏனெனில், உழவர் பெருமக்கள் நிலங்களில் தாங்கள் இட்ட, விதைநெல்லுக்குப் போட்ட பணம் மற்றும் உழைப்புக்கான முதலீட்டின் அறுவடையை நிச்சயம் பெற்றுவிடும் மாதமுமாக 'தை மாதம்' விளங்குவதே அதற்குக் காரணம். இத்தகைய பெருமைமிகு தை மாதம் தொடங்குவதற்கு முந்தைய நாளும், கடும்குளிர் நிலவும் மார்கழியின் இறுதி நாளையும்தான் இந்தியா முழுவதும் போகிப் பண்டிகை என மக்கள் கொண்டாடுகின்றனர்.

மேலும்,போகிப் பண்டிகையின்போது மக்கள் வீட்டைச் சுத்தம் செய்து, வெள்ளையடித்து, தேவையற்ற பொருட்களைக் கழித்து, வீடுகளில் 'காப்புக்கட்டு' எனும் மூலிகைக்காப்பான்களைக் கட்டி, தை மாதத்தை வரவேற்பதே  தமிழர்களின் தொன்று தொட்டு மரபாக இருந்துவருகிறது. இதன் மூலம் பண்டிகைகளின்போது வீட்டில் இருப்பவர்களின் உடல்நலம் கெடாமல் பார்த்துக்கொண்டனர். இத்தகைய 'காப்பு' கட்டுதலில் மூலிகைகளான மாவிலை, வேம்பு, ஆவாரம், சிறுபீளை, தும்பை, பிரண்டை, துளசி  ஆகியவற்றின் தண்டு, இலை, பூ ஆகியவை தவறாமல் அங்கம்வகிக்கின்றன.  நாம் சாதாரணமாகப் பார்க்கும் எளிய தாவரங்களான இவை, மிகப்பெரும் பலன்களை உள்ளடக்கியுள்ளன என்பது பற்றி பழந்தமிழர்கள் அறிந்திருந்தார்கள். அத்தகைய மூலிகைகளின் பலன்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

துளசி 

 

துளசியின் பயன்கள் 

துளசி, இந்து சாஸ்திரங்களின்படி, 'லட்சுமியின்' அம்சமாகக் கருதப்படும் தாவரம் இது. பல்வேறு வைணவத் தலங்களில் வழிபாட்டுக்குப் பின்னர் துளசியும் நீரும் கலந்து பக்தர்களுக்கு வழங்கப்படுவது இன்றளவும் இருக்கும் மரபு. இத்தகைய துளசியை நாம் எடுத்துக்கொள்ளும்போது, உடலில் ஜீரணசக்தி, புத்துணர்ச்சி பெருகும்; வாய்துர்நாற்றம், ஆஸ்துமா, வறட்டு இருமல் மற்றும் பிற தொண்டை நோய்கள் எளிதில் குணமடையும்.

வேப்பிலை 


வேம்பு இலை:

'வேம்பு' என அழைக்கப்படும் வேப்பமரத்தின் இலை, காய், பூ, பட்டைகள், பழங்கள் என அனைத்துப் பொருட்களும் மருத்துவக் குணம் மிகுந்தவை. வேப்ப  மரத்தின் இலைகளுக்கு காற்றில்பரவும் கிருமிகளைத் தடுத்து, கிருமிநாசினியாக செயல்படும் திறன் உண்டு. அதனால்தான் அம்மைநோய் தாக்கியவர்களை, வேப்பிலைகளில் ஊறிய நீரில் குளிக்கச் சொல்கிறார்கள். அதேபோல், காற்றில் பரவும் நோய்கள் எளிதில் பரவாமல் தடுக்க, கோயில் திருவிழாக்கள் தொடங்கும்போது ஊரின் பல்வேறு இடங்களிலும் வேப்பிலைகளைக் கட்டும் பழக்கம் இருக்கிறது. இதே மரபு 'போகியின்'போதும் கடைப்பிடிக்கப்படுவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

மாவிலை:

மாமரத்தின் இலைகள் மிகச்சிறந்த மருத்துவப்  பொருட்களாகச் செயல்படுகின்றன. மாவிலைகள் ஒவ்வாமையை எதிர்க்கவும், வைரஸ், பாக்டீரியா எதிர்ப்பு, தொண்டைகரகரப்பு, வாய்க்கொப்புளங்கள், வயிற்றுப்போக்கு ஆகியவற்றிலிருந்து தப்பிக்க மாவிலைவாசம் பக்கபலம் தருகிறது. தவிர, உடல் களைப்பை நீக்க உதவுகிறது.

தும்பை இலை:

தும்பை இலையின் வாசம் இளைப்பு, தலைவலி, நீர்வேட்கை ஆகியவற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகிறது. 

 

சிறுபீலை  


சிறுபீளை (பொங்கல் பூ) 

வெண்மையாக பூத்துக்குலுங்கும் சிறுபீளை, தென் மாவட்டங்களில் 'பொங்கல் பூ' என அழைக்கப்படுகிறது. இது கல்லடைப்பு, நீரடைப்பு, நீர்த்தாரை எரிச்சல் ஆகியவற்றை எளிதில் சரிசெய்கிறது.

பிரண்டை:

'பிரண்டை' என்பது தடித்த தசைப்பகுதி நிரம்பிய கொடிப்பகுதியாகும்.  இது ரத்தமூலம், வாயுப்பிடிப்பு, கைகால் குடைச்சல் ஆகியவற்றுக்கு சிறந்த வலிநிவாரணியாகப் பயன்படக்கூடிய அருமருந்து.

 

பிரண்டை 


ஆவாரம் பூ:

 'ஆவாரை பூத்திருக்க சாவோரைக் கண்டதுண்டோ' என்பது தெக்கத்திப் பகுதிகளில் பெரியோர்கள் சொல்லும் சொலவம். ஆவாரம் பூ முழுக்க முழுக்க உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து, உடலின் வெப்பநிலையைக் குறைக்க உதவுகிறது. தவிர, உடலில் இருந்து வரும் வியர்வை நாற்றத்தை மாற்ற உதவி செய்து வறட்சியை நீக்க வல்லது. மேலும், சிறுநீர்க்கழிப்பதில் ஏற்படும் பிரச்னைகளை நீக்கவல்லது.
பொதுவாக, மார்கழிக் குளிர் முடிந்து தொடங்கும் தை வேனில் காலம் உடலில் உஷ்ணமான நோய்களை உண்டாக்கிவிட்டு விடும். இதையெல்லாம் கணித்தே, நம் முன்னோர்கள் போகியின்போது, 'காப்புகட்டுதல்'எனும் சடங்கு வைத்து பொங்கலில் வீட்டில் இருக்கும் உயிர்களுக்கு நோய் அண்டாமல் வருமுன் காக்கும் யுக்தியைக் கையாண்டிருந்தனர் என்பது  அவர்களின் செயலில் இருந்து புலனாகிறது. பழந்தமிழர்கள் கையாண்ட ஒவ்வொரு காரணத்துக்குப் பின்னரும்  ஆரோக்கியத்துக்கான நடைமுறை இருக்கிறது. அதன்வழி மரபுகளை மதிப்போம். ஆரோக்கியம் பேணுவோம்.    


தொகுப்பு - ம.மாரிமுத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement