வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (15/01/2017)

கடைசி தொடர்பு:18:59 (15/01/2017)

ஒரு காலைப் பொழுதை எப்படித் தொடங்கலாம்? #PositiveThoughts

 

ப்போதுதான் புத்தாண்டு வந்த மாதிரி இருக்கிறது. அதற்குள், கிட்டத்தட்ட ஒரு மாதத்தின் மத்தியில் வந்து நிற்கிறோம். என்ன செய்தோம்... என்ன செய்துகொண்டிருகிறோம் என நிதானமாக யோசிக்கக்கூட அவகாசம் தராமல், தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கின்றன நாட்கள். காலையில் கண்விழிப்பது மொபைல்போனில்... இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக கண்ணாடி பார்ப்பதுபோல் நாம் பார்த்துவிட்டு வைப்பதும் அதே மொபைல்போனைத்தான். இந்த டிஜிட்டல் யுக, அவசர வாழ்க்கைக்கு இடையில் ஒரு காலை பொழுதை எப்படி புரொடக்டிவ்வாகவும் ஆரோக்கியமாகவும் திட்டமிடுவது? சில யோசனைகள்...

காலை

* காலையில் எழுந்ததும் புன்னகையோடு எழுந்திருங்கள். `இன்று நமக்கான நாள். சிறப்பான, நல்ல விஷயங்கள் பல எனக்கு நடக்க போகின்றன்' என்ற எண்ணத்துடன் எழுந்திருங்கள். காலைச் சூரியனுக்கு, `குட் மார்னிங்’ வைக்கலாம். இதனால், கண்களுக்கும் நல்லது. வைட்டமின் டி சத்தும் கிடைக்கும். சீக்கிரம் எழுவதால், வேலைகளைச் சரியான நேரத்தில் செய்ய முடியும்.

 

* மிதமான இளஞ்சூடான நீரை அருந்துங்கள்; நீண்ட நேரம் தூங்கி எழுந்ததும் குடலுக்கு லேசான அசைவைக் கொடுத்து, மலம் கழிக்க உதவியாக இருப்பது இந்த இளஞ்சூடான நீர்தான்.

 

* எழுந்ததும் வேலைதான் செய்ய வேண்டும் என்றில்லை, பிடித்த விஷயத்தைக்கூடச் செய்யலாம். அருமையான இசையைக் கேட்கலாம். அற்புதமான ஒரு கவிதையை எழுதலாம். எது உற்சாகத்தை தருமோ, அந்த விஷயத்தைச் செய்யுங்கள்.

 

* காலையில் வீசும் இளங்காற்றை ஐந்து நிமிடங்களாவது மொட்டை மாடியிலோ அல்லது வெளி இடங்களுக்குச் சென்றோ சுவாசிக்கலாம். அருகில் உள்ள பார்க்கில், அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்வது நல்லது.

 

* வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய ஃபிரெஷ் ஜூஸ், சத்துமாவுக் கஞ்சி, கூழ், காய்கறி சூப், உளுந்தங் கஞ்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம். அந்த நாளை நல்ல உணவோடு தொடங்கும் வாய்ப்பு இது. இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். உடலுக்கு எனர்ஜியைத் தரும்.

 

* பத்து நிமிடங்களாவது தியானம், யோகா போன்ற பயிற்சிகளைச் செய்யலாம். அல்லது கண்களை மூடி வெறும் சுவாசத்தை மட்டும்கூட கவனிக்கலாம்.

 

* கோடை காலத்தில் குளிர்ந்த நீரிலும், மழை மற்றும் பனிக்காலத்தில் வெந்நீரிலும் குளிப்பது நல்லது. இதனால் உடல் ஃபிரெஷ்ஷாக, சுறுசுறுப்பாக இருக்கும்.

 

* ஒரு காகிதத்தில் அல்லது நோட்பேடில் இன்று நாம் செய்யவேண்டியவை என்னென்ன, நாளை நாம் செய்யவேண்டியவை என்னென்ன என்பதற்கான முன்னேற்பாடுகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். நேற்று நாம் முடிக்காத வேலைகள் என்னென்ன என்பதையும் சரிபார்த்து முடித்துவிடுங்கள்.

 

* வேலைக்குச் செல்பவரோ, கல்லூரிக்குச் செல்பவரோ... உங்கள் கையில் ஒரு தன்னம்பிக்கைப் புத்தகம் இருக்கட்டும். நீங்கள் சோர்ந்துபோகும்போது உங்களை உற்சாகப்படுத்தி, தட்டி எழுப்புகிற புத்தகமாக இருந்தால் வெற்றி உங்களுக்குத்தான்.

 

* தவறாமல் காலை உணவைச் சாப்பிட வேண்டும். அதுவும் காலை உணவு விருந்துபோல இருக்க வேண்டும். இதனுடன் மிட் மார்னிங் ஸ்நாக்ஸை உடன் எடுத்துச் செல்லுங்கள்.

 

* அன்றைய வேலையைத் தொடங்கும்போது 'இன்று நான் சிறப்பாகச் செயல்படுவேன்' என்ற உத்வேகத்தோடு தொடங்குங்கள். வேலையில் சீரான வேகம் இருக்கட்டும். காலையில் விரைவாக வேலையைத் தொடங்கி, மதியத்தில் சோம்பலாக மாறிவிடாமல் இருப்பதும் முக்கியம்.

 

* வேலையின்போது இரண்டு பிரேக் வரை எடுக்கலாம். பசிக்கும்போது மதிய உணவை உண்ணலாம். போர் அடிக்கும்போது, காஸிப் செய்வதற்கு எனத் தனித் தனியாக பிரேக் டைமை உருவாக்கிகொள்வதால் வேலையை சிறப்பாகச் செய்ய முடியாது. வேலையைச் சரியாக செய்துவிட்டு, அதனால் ஏற்பட்ட அனுபவத்தை மனதில் தாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றுவிடுங்கள். டென்ஷன், அழுத்தம் போன்றவற்றை அலுவலுகத்தில் இறக்கிவைத்துவிட்டு வீட்டுக்குச் செல்லுங்கள்.

 

* மாலைப்பொழுது உங்களுக்கான நேரம். அதாவது, நீங்கள் குடும்பத்துடன் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதுதான் முக்கியம். டி.வி-யில் நாடகம் பார்ப்பதற்கான நேரம் இது கிடையாது. மாலை நேரப் பொழுதை உறவுகளுடன் அமைத்துக்கொள்ளத் திட்டமிடுங்கள்.

 

* இரவு உணவை 8-9 மணிக்குள் முடித்துவிட முயற்சி செய்யுங்கள். இரவு உணவு முடிந்த பிறகு, ஒரு மணி நேரத்தை உங்களுக்கான நேரமாக மாற்றிக்கொள்ளுங்கள். டைரி எழுதுவது, புத்தகம் வாசிப்பது, இசை கேட்பது என உங்களை எதிலாவது ஈடுப்படுத்திக்கொள்ளுங்கள்.

 

* தூங்கச் செல்வதற்கு முன்னர் இளஞ்சூடான பாலை அருந்திய பிறகு தூங்கச் செல்லலாம். `நிறைவான தூக்கம் வர வேண்டும்; காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும்’ என்ற எண்ணத்தை விதைக்கலாம். `இன்றைய நாள் திருப்திகரமாக இருந்தது’ என மன நிறைவோடு தூங்கச் செல்லுங்கள். அப்படி இல்லையென்றாலும், உங்கள் மனதில் அப்படி நடந்தது எனக் கற்பனை செய்துகொண்டாவது தூங்கச் செல்லலாம். ஏனெனில், நேர்மறை எண்ணங்களின் சக்தி, நினைத்தவற்றை நிறைவேற்ற உதவும்.

 

- வெ.வித்யா காயத்ரி (மாணவப்பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்