சிந்தனையைக் கூர்மையாக்கும் 7 உணவுகள்..! #BrainBoosters

றிவுக்கூர்மை என்பது ஒவ்வொருவரது தனிப்பட்ட  ஐ.கியூ  அளவைப் பொருத்து மாறுபடுகிறது. இதை நாமாக வளர்த்துக்கொள்வது சிரமம் எனச் சிலர் எண்ணுகின்றனர். மறுபுறம், அறிவுக்கூர்மையை மேம்படுத்த, சந்தையில் கிடைக்கும் கேப்ஸியூல், சிரப், மருந்துகள், ஊட்டச்சத்துப் பானங்கள் ஆகியவற்றைத் தேடிச் சாப்பிடும் நபர்களும் உள்ளனர். இவற்றைப் சாப்பிட்டால், தங்கள் குழந்தைகள் புத்திசாலிகளாக மாறிவிடுவார்கள், தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள் எனப் பல பெற்றோர் நம்புகின்றனர். யோகா, தியானம், மூச்சுப்பயிற்சிகள் ஆகியவற்றோடு, அறிவுக்கூர்மையை மேம்படுத்துவதில் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவும் முக்கியப்பங்கு வகிக்கிறது. அறிவைக்கூர்மையாக்கும் 7 உணவுகள் இங்கே...

7 உணவுகள்


ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த முட்டை, மீன், நட்ஸ் ஆகியவற்றை சாப்பிடுவதால் டொகோசஹெக்ஸேனாய்க் ஆசிட் (Docosahexaenoic acid)  எனும்  அமிலச் சுரப்பு அதிகரிக்கிறது. இந்த அமிலம், மூளை நரம்புகளைத் தூண்டி, மூளையின் செயல்திறன் மற்றும் அறிவுக்கூர்மையை அதிகரிக்கிறது. நம் ஊரில் கிடைக்கும் வஞ்சிரம், நெத்திலி மீன்களைச் சாப்பிடுவதன் மூலமாக ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை அதிக அளவு பெறமுடியும். மேலை நாடுகளில் பிரபலமான சால்மன் மீனுக்கு இணையான சத்து இவற்றில் அடங்கியுள்ளது.


முட்டையில் உள்ள கோலின் சத்து, தண்ணீரில் கரையக்கூடியது. இது, மூளை நரம்புகளைச் சுறுசுறுப்பாக்குகிறது. வாரத்துக்கு மூன்று நான்கு முட்டைகள் வரை சாப்பிடலாம். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், மஞ்சள் கருவைத் தவிர்த்து, வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம்.

மூளை செயல்திறன்


காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள ஃபோலிக் அமிலம், மூளையின்  கொழுப்பு அமிலச் சங்கிலியை (Long chain fatty acids)   உறுதியாக்குகிறது. தினமும் இரவு, ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவது நல்லது. ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், அறிவுக்கூர்மையை அதிகரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.


சாக்லெட் சாப்பிட்டால், மூளை நரம்புகளின் செயல்திறனை அதிகரிக்கும் என்டார்ஃபின் (Endorphin) சுரப்பு அதிகரிக்கிறது. வாரத்துக்கு இரண்டு முறை சாக்லேட் சாப்பிடலாம். சாக்லேட்டைத் தேர்ந்தெடுக்கும்போது, சர்க்கரை அளவு  10 கிராமுக்கு மிகாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாக்லெட்டைத் தவிர்க்கலாம்.

சிந்தனை


முழுதானியங்கள், இதய ரத்தநாளங்களைப் பாதுகாப்பதுடன், மூளையின் ரத்தஓட்டத்தையும் அதிகரிக்கிறது. இதனால், அறிவுக்கூர்மை, நினைவுத்திறன் அதிகரிக்கின்றன. சர்க்கரை நோயாளிகள் மட்டும் அல்லாமல், அனைவரும் இவற்றைத் தங்களது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சப்பாத்தி, களி, சம்பா கோதுமை உப்புமா உள்ளிட்ட உணவுகளை இரவு உணவாகச் சாப்பிடலாம்.   


பட்டையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. புற்றுநோயை எதிர்க்கக்கூடியது. அசைவ ரெசிப்பிகள் தயாரிக்கும்போது, பட்டையைச் சேர்க்க வேண்டும். செரிமானத்துக்குப் பயன்படும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். அறிவுக்கூர்மையை அதிகரிக்கும்.

மூளை


மூளை நரம்பு செல்களுக்கு இடையே தகவல் தொடர்பு ஏற்படுத்த உதவுவது, வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மற்றும் புரதச்சத்துக்கள். இவை இரண்டும் யோகர்ட் என்னும் கெட்டித் தயிரில் உள்ளது. இதனை மதியச் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் தேர்வுக்குப் படிக்கும் மானவர்களுக்கு அறிவுக்கூர்மை அதிகரிக்கும். யோகர்ட் செரிமானமாகத் தாமதமாவதால், இரவில் இதனை சாப்பிடக் கூடாது. லாக்டோஸ் இன்டாலரென்ஸ் எனும் பால் ஒவ்வாமை இருப்பவர்கள், இதனைத் தவிர்க்க வேண்டும். இதற்கு மாற்றாக மீன், முட்டை, காய்கறி, பழங்களைச் சாப்பிடலாம்.


- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்.
  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!