Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

களி களிப்பூட்டும்... காப்பாற்றும்! நலம் நல்லது-55 #DailyHealthDose

ம் தேசத்தில் ஒரு உசேன் போல்ட்டோ, கஸ்தூரிரங்கனோ, டெண்டுல்கரோ உருவாக ஐந்து வயது வரையிலான அவர்களின் சாப்பாடுதான் ஊக்கமூட்டும். உடல் உறுதி மட்டுமல்ல, நோய் எதிர்ப்பாற்றல், உளவியல் வலிமை, ஒட்டுமொத்த சுரப்புகள், ஹார்மோன்களின் சீரான செயல்பாடு, புத்திக் கூர்மை, விவாதிக்கும் திறன், ஆளுமைத் தன்மை... என அத்தனைக்கும் சிறு வயதில் சாப்பிடும் `காய் பூவாவும் கீரை மம்மும்’தான் அடித்தளம். அவற்றில் முக்கியமான ஓர் உணவு களி. 

களி களிப்பூட்டும்... காப்பாற்றும்

ஒருமித்த வளர்ச்சி இல்லாத குழந்தைகளை ‘வளர்ச்சிக் குறைபாடுள்ள குழந்தைகள்’ என்று குறிப்பிடுகிறார்கள், உணவியலாளர்களும் குழந்தைகள் நல மருத்துவர்களும். சரியான நேரத்தில், சரியான அளவில், சரியான சூழலில் தேவையான அளவு சரிவிகித சம உணவு கிடைக்காதபோதுதான், குழந்தைகள் வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள். இரண்டு முதல் மூன்று வயதுக்குள் சரியான உணவுக் கலாசாரத்தை குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தராவிட்டால், பின்னாளில் நோய்க்கூட்டத்தின் வலுவான பிடிக்குள் அந்தக் குழந்தைகள் சிக்கிக்கொள்ள வாய்ப்பு உண்டு. அவர்கள், உணவுக்கூறுகளின் குறைபாட்டால், ஒல்லியாக மட்டும் அல்ல; சில நேரத்தில் குண்டாகவும் ஆகக்கூடும். அதோடு, இளம் வயது சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவையும் வரக்கூடும். 

`என் குழந்தையை சூப்பர் சிங்கர் ஆக்கப்போகிறேன், சானியா மிர்சாவாக ஆக்கப்போகிறேன்’ என நம் இயலாமையையும் தோல்வியையும் ஏமாற்றத்தையும் குழந்தைகளிடம் திணிப்பதற்கு முன்னர், நமக்கு இயல்பாகக் கிடைத்த உணவுப் பழக்கத்தை, கொஞ்சம் மெனக்கெட்டாவது அவர்களுக்குப் புகட்டவேண்டியது காலத்தின் கட்டாயம். அந்த வகையில் நம் பாரம்பர்ய உணவான களியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எளிதாகச் செய்யக்கூடியது.  

கேழ்வரகில் தயாரானது

இரும்பு, துத்தநாகம் (Zinc), சுண்ணாம்பு (Calcium) இந்த மூன்றும் வளர்ச்சிக் குறைபாடு ஏற்படாமல் இருக்க மிக அவசியமான நுண் கனிமச் சத்துக்கள். இவற்றுடன் புரதம், சரியான கார்போஹைட்ரேட் மிக அவசியம். சித்த மருத்துவப் பார்வையில், உடலை வளர்க்கப் போதிய அளவிலான இனிப்புச் சுவையும் தேவை. இனிப்பு, என்றால் வெள்ளைச் சர்க்கரை அல்ல. பழங்களில் இருந்து கிடைக்கும் ஃப்ரூக்டோஸ் (Fructose) இனிப்பும், பனங்கருப்பட்டியில் இருந்து கிடைக்கும் இனிப்பும் குழந்தைகளுக்கு அவசியம். இவையெல்லாவற்றையும் இதில் இருந்து பெறலாம்.

இது, ஊட்டம் அளிக்கும் ஓர் உன்னத உணவு. கேப்பை, கம்பு,  உளுந்து, பாசிப்பயறு  என விதவிதமாக இனிப்பு வகைகளாக நம் பாரம்பர்ய உணவு முறையில் களியைச் செய்ய முடியும். அதோடு, இது ஒரு சரிவிகித சம உணவும்கூட. 

ஆரோக்கியம் காக்கும்..! 

* உளுந்தங் களியில் இரும்பு முதலான நுண்கனிமச்சத்துகளுடன் புரதமும் நார்ச்சத்தும் அதிகம். பெண் குழந்தைகளின் கருப்பை வலுப்பெறவும், வயதாகும்போது மூட்டுகளின் `கார்டிலேஜ்’ எனும் தசைநார்கள் வலுப்பெறவும் இது உதவும். திருவாதிரை தினத்தன்று சிவன் கோயிலில் தரப்படும் பாசிப்பயறு களியும், வீட்டுப் பெரியவர்களுக்குத் தரப்படும் வெந்தயக்களியும் அப்படி ஒரு மருத்துவ உணவுதான். 

வெந்தயத்தில் தயாரானது

* சில குழந்தைகள் பிசுபிசுவென இருப்பதாலேயே இதைத் தொட மாட்டார்கள். கையில் ஒட்டும் உணவை உதறும் இந்தப் பிஞ்சுகள்தாம், பின்னாளில் எதிலும் ஒட்டாத வாழ்வியலுக்குத் தயாராகிறார்கள். `சாக்லேட்டிலும் கேன் ஜூஸிலும் இல்லாத சத்து, பணியாரத்துடன் வரும் வெங்காயத் துண்டிலும் கொத்தமல்லிக் கீரையிலும் இருக்கிறது. அது நம் உடம்புக்கு ஹெல்த்தி ப்ளஸ் ஹைஜீனிக்‘ என நாம்தான் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும்.இதை நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்தால், அப்படி ஒட்டாது. இதைக் கொடுத்து, இதன் பெருமையையும் உணர்த்தலாம்.

உண்மையான ஊட்டச்சத்து உணவு இது என்பதைப் புரிந்துகொள்வோம்... நம் சந்ததியினருக்கும் புரியவைப்போம்! 

தொகுப்பு: பாலு சத்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement