Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குளிர்பானம்... வயிற்றைக் குப்பையாக்கும்! நலம் நல்லது-59 #DailyHealthDose

கோடை காலம் நெருங்கிவருகிறது. கோடையை, இப்போதெல்லாம் அன்றில் பறவை வந்து அறிவிப்பது இல்லை; குளிர்பான கம்பெனிகள்தான் கூவிக் கூவி அறிவிக்கின்றன. உண்மையில், இந்த வெப்ப காலத்தில் நமக்குக் கூடுதல் தண்ணீர்தான் அவசியத் தேவையே தவிர, குளிர்பானம் அல்ல. நம் உடலில் இருந்து கழிவாக வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை, நம் ஊரில் களவாடிய தண்ணீரிலேயே கலந்து, அதில் கூடுதல் சர்க்கரை, உப்புடன் கூடுதல் சுவை ஊட்டியாக குடிப்பவர்களுக்குத் தெரியாத, அடிமைப்படுத்தும் ரசாயன ‘வஸ்து’வைக் கலந்து கொடுக்கும் திரவம், இந்தப் புவியையும் நம்மையும் வெப்பப்படுத்துமே தவிர, குளிர்விக்காது. 

குளிர்பானம்

‘வெளியே போ’ என நம் உடல் விரட்டும் வாயுவை, நன்றாக ஏப்பம் வருகிறது என பிரியாணிக்குப் பிறகு குளிர்பானம் அருந்தும் பழக்கம் இருந்துகொண்டே இருக்கும்வரை, நம்மை ஏப்பமிடும் வணிகமும் இருந்துகொண்டேதான் இருக்கும். குளிர்பானம், ஏப்பம் மட்டும் தராது, ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) எனும் எலும்பில் சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டில் இருந்து, ‘ஏன்ஜைனா பெக்டாரிஸ்’ (Angina Pectoris) எனும் இதயவலியையும் தரும் என்கிறது உணவு அறிவியல். 

குளிர்பானம் தவிர்க்க என்ன செய்யலாம்?

* உக்கிரமான கோடை காலத்துக்கு என எண்ணெய்க் குளியலுடன் சம்பா அரிசி வகைகளையும் எள்ளையும் உளுந்தையும் சாப்பிடச் சொல்லிப் பரிந்துரைத்தார்கள் நம் முன்னோர். ஆனால், வளர்ச்சி என்ற பெயரில், சூழல் மீது நாம் நடத்தும் வன்முறைகளால், புவியின் வெப்பம் மேலும் மேலும் உயர்ந்துவருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் `மாலத் தீவுகளைக் காணோம்; நியூசிலாந்தைக் காணோம் என்று சொல்லும் நிலை வரலாம்’ என எச்சரிக்கிறார்கள் சூழலியலாளர்கள். வெப்பத்தில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளும் அதே வேளையில், இந்தப் பூமியையும் காப்பாற்றியாக வேண்டியிருக்கிறது. 

* பதநீர், இளநீர், மோர், நன்னாரி பானங்கள் ஆகியவையே நமக்கான கோடைக் கேடயங்கள். உடல் சோர்வு உடனடியாகத் தீர பானகமோ, கருப்புச் சாறோ போதும். நீர்த்துவம் உடலில் குறைந்து சிறுநீர்ச் சுருக்கு ஏற்படுவதற்கு, லேசான அமிலத் தன்மையுடன் உடலைக் குளிர்விக்கும் புளியைக் கரைத்து பனைவெல்லம் கலந்து உருவாக்கப்படும் பானகம் அருமருந்து. 

பாட்டில் பானங்கள்

* கோடைக்கு புரோபயாட்டிக்காக இருந்து குடல் காக்கும் மோரும், சிறுநீரகப் பாதைத் தொற்று நீக்கும் வெங்காயமும், இரும்பு, கால்சியம் நிறைந்து உடலை உறுதியாக்கும் கம்பங்கூழும் போதும்... எத்தனை உக்கிரமான அக்னி நட்சத்திரத்தையும் சமாளித்துவிடலாம். இந்தப் பொருட்கள், வெம்மையால் வரும் அம்மை நோயையும் தடுக்கும். 

* கோடை காலத்தில் அம்மை, வாந்தி, பேதி, காமாலை, சிறுநீரகக் கல், கண்கட்டி, வேனல் கட்டிகள், வேர்க்குரு... போன்ற வெப்பத்துக்கான பிரதிநிதிகள் விருந்தாளிகளாக வந்து போகலாம். இருந்தாலும், குளியல் முதல் தூக்கம் வரை நாம் க்டைப்பிடிக்கும் சிற்சில நடவடிக்கைகள் மூலம் அவற்றைச் சமாளிக்க முடியும். வாரத்துக்கு இரண்டு நாட்கள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளியல், மீதி நாள் தலைக்குக் குளியல். எள்ளுத் துவையலுடன், தொலி உளுந்து (முழு உளுந்து) சாதம், கம்பங்கூழ் - சிறிய வெங்காயத்துடன் வாழைத்தண்டு, மோர் பச்சடி, வெள்ளைப் பூசணி-பாசிப்பயறு கூட்டு, உளுந்தங் களி, வெந்தயக் களி, முழு உளுந்து போட்டு ஆட்டிய மாவில் தோசை... எனச் சாப்பிடுங்கள். 

* தர்பூசணிச் சாற்றுடன் மாதுளைச் சாறு கலந்து அருந்தி தாகம் தணிக்கலாம். மோருக்கும் இளநீருக்கும் இணையான கனிமமும் வைட்டமினும் கலந்த பானங்கள் செயற்கையில் கிடைக்காது; அதாவது, குளிர்பானம் அந்த அருமை இல்லாதது. 

* உறங்குவதற்கு முன்னர் ஒரு குளியல் போடுங்கள். அக்குள் போன்ற உடலின் மடிப்புப் பிரதேசங்களில் படர்ந்திருக்கும் வியர்வைப் படிமத்தை அழுக்குப் போக தேய்த்துக் குளியுங்கள். 

குளிர்பானம்

பருவத்தை ஒட்டி வாழச் சொன்னது நம் பாரம்பர்யம். பொருளை ஒட்டி வாழச் சொல்வது நவீனம். உணவில் அரை டீஸ்பூன் காரம் அதிகமாகிவிட்டால் நாம் என்ன ஆட்டம் ஆடுகிறோம்? ஆனால், தினமும் சில மில்லியன் ரசாயனங்களை கடலிலும், காற்றிலும், பூமியின் வயிற்றிலும் கொட்டிவிட்டு, உடல் சூடு தணிக்க, `குற்றாலத்துக்குப் போறேன்; குன்னூருக்குப் போறேன்’ என உல்லாச உலா செல்வது நியாயமா? அங்கேயும் போய் வயிற்றைக் குப்பையாக்க, குளிர்பானம் அருந்துவது தகுமா? 

புவி மீதான நம் அக்கறை அதிகரிக்காவிட்டால், நாம் எதிர்பார்க்காத வேகத்தில் அந்த மலை வாசஸ்தலங்களும் மரணித்துவிடும். அதனால், கோடை காலத்தில் கேட்டு வாங்கிப் பருகுவோம் நீர் மோரையும் பானகத்தையும்! குளிர்பானம்..? கோடைக்கு மட்டுமல்ல எந்தக் காலத்துக்கும் அது நமக்கு வேண்டாம். ‘ஆளை விடுறா சாமி...’ என்று அதைத் தலைதெறிக்க ஓடவைப்போம்! 

தொகுப்பு: பாலு சத்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement