அடிக்கடி ஸ்நாக்ஸ் சாப்பிட ஆசையா? உணவு வேட்கைப் பிரச்னை உஷார்..! #FoodAlert | Do You Crave more for snacks

வெளியிடப்பட்ட நேரம்: 13:23 (28/01/2017)

கடைசி தொடர்பு:13:23 (28/01/2017)

அடிக்கடி ஸ்நாக்ஸ் சாப்பிட ஆசையா? உணவு வேட்கைப் பிரச்னை உஷார்..! #FoodAlert

சில நேரங்களில் நாக்கு எதையாவது கேட்டுக்கொண்டே இருக்கும்; எதையாவது அருந்தவோ, ஸ்நாக்ஸ் சாப்பிடவோ தோன்றும். அதற்குக் காரணம் நாக்கு அல்ல; நம் உடல் எதையோ வேண்டுகிறது; ஏதோ ஓர் வேட்கைகொள்கிறது என்று பொருள். அதாவது, உணவு வேட்கை. இதைத்தான் ஆங்கிலத்தில் `ஃபுட் கிரேவிங்’ (Craving) என்று சொல்வார்கள். இதன் வழியாக நம் உடல் தன் ஆரோக்கியம் பற்றிய தகவல்களையும் நமக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது என்றும் புரிந்துகொள்ளலாம். சரியான நேரத்தில், சரியான உணவைச் சாப்பிடுவதன் மூலமாக உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளலாம். 

 

ஸ்நாக்ஸ்

``எனக்கு காரமா ஏதாவது சாப்பிடணும்போல இருக்கு’’, ``சூடா காபி குடிச்சாதான் தெம்பு வரும்’’, ``எனக்கு சாதம் சாப்பிடவே பிடிக்கலை. ஜூஸ் மாதிரி குடிச்சா ஓ.கே’’, ``எப்பவும் சாக்லேட் என் பையில இருக்கும். சாக்லேட் பைத்தியம் நான்’’... இது போன்று நமக்கும் தோன்றுவதுண்டு. இவை அனைத்தும் உடல், உங்களுக்கு அனுப்பும் செய்திகள். இதைத்தான் `உணவு வேட்கை’ என்கிறோம். இதுபோன்ற உணர்வுகள் தோன்றினால், நம் உடலில் ஒரு வகையான சத்து குறைகிறது என்பதை நம் உடல், நமக்கு உணர்த்துகிறது என்று அர்த்தம். 

அது என்ன சத்து... அப்போது நாம் எந்த வகையான உணவுகளை எடுத்துக்கொள்கிறோம்... எதை எடுத்துக்கொள்வது சிறந்தது, எதை எடுத்துக்கொள்ளக் கூடாது? பார்க்கலாம்...

சாக்லேட்

சாக்லேட் பிடிக்காதவர்கள் நம்மில் வெகு குறைவு. சாக்லேட்டைச் சாப்பிடும்போது மூளையில் `எண்டார்பின்’ எனும் ஹார்மோன் சுரப்பதால், நாம் சந்தோஷமாக இருப்பதுபோல நமக்குத் தோன்றும்.

உடல் ஏன் சாக்லேட்டை விரும்புகிறது?!

நம் உடலுக்கு மக்னீசியம் எனும் கனிமம் தேவைப்படுகிறது. இது உடலின் பல செயல்பாடுகளுக்குத் துணைபுரிவதோடு ரத்த நாளங்களை தளர்வாக வைத்துக்கொள்கிறது. எண்ணங்களின் ஓட்டத்தைக் குறைத்து, இரவில் நல்ல உறக்கத்தையும் தருகிறது. மக்னீசியம், சாக்லேட்டில் அதிக அளவில் உள்ளது. 

எந்த சாக்லேட் பெஸ்ட்?

மில்க் சாக்லேட்டுக்குப் பதிலாக டார்க் சாக்லேட்டை எடுத்துக்கொள்வதால் அதிகப்படியான மக்னீசியம் கிடைக்கும். தவிர  டார்க் சாக்லேட் உடலுக்கு ஆரோக்கியமானதும்கூட. அதையும் அளவோடு, (ஒரு கியூப் அளவுக்கு) சாப்பிட வேண்டும். கூடவே பருப்பு வகைகள், உலர்பழங்கள், வாழைப்பழம் மற்றும் அவகேடோ பழங்களையும் எடுத்துக்கொள்ளலாம்.

 

chocolate

காபி

காபியை ஒருநாளைக்கு அதிக அளவில் குடிக்கிறீர்கள் என்றால், அதற்குப் பல காரணங்கள் உண்டு. முக்கியமானது, காபியில் காஃபின் அதிகமாக இருப்பதால், அடிக்கடி காபி குடிக்க வேண்டும் என்னும் உணர்வை நமக்குத் தூண்டும். காலையில் காபி குடிக்கவில்லை என்றால், அந்த நாள் முழுக்க சிலருக்கு தலைவலிகூட வந்துவிடும்.

காபி அருந்தும் வேட்கை எழுவது ஏன்?

ஆற்றல்! காபி குடிப்பதால் நமக்கு உடனடி ஆற்றல் கிடைப்பதாக நாம் நம்புகிறோம். அப்படி அல்ல. நாள் முழுக்க நாம் சுறுசுறுப்பாக இருக்க நமக்கு இயற்கையாகவே பல வழிகள் உள்ளன. `பிராணாயாமம்’ என்னும் மூச்சுப்பயிற்சி செய்வதால்கூட நம் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். வெறும் வயிற்றில் காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

காபிக்கு மாற்று?

பழங்களால் தயாரிக்கப்பட்ட ஸ்மூத்திஸ் எடுத்துக்கொள்ளலாம். காபி குடிக்க வேண்டும் என்கிற உணர்வு அதிகமாக ஏற்படும்போது கிரீன் டீ, மூலிகை டீ, சுக்கு மல்லி காபி, இஞ்சி டீ ஆகியவற்றை பருகலாம். இது உடலுக்கு ஆற்றல் தரும்; உடல் எடை குறைவதற்கும் உதவும்.

 

coffee

ஸ்வீட்ஸ் / சர்க்கரை

சர்க்கரையைக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது ஒரு சவாலான காரியம். குளிர்பானங்கள், இனிப்பு வகைகள், பாலில் அதிகளவு சர்க்கரையைச் சேர்த்துக் குடிப்பது இவையெல்லாம் உடலுக்கு எந்தவிதமான ஆரோக்கியத்தையும் தருவதில்லை.

ஸ்வீட்டை விரும்பக் காரணம் என்ன?

நாள் முழுவதும் சோர்வின்றி இருக்கவும், சர்க்கரை அளவை பராமரிக்கவும் உடலுக்கு குளூக்கோஸ் தேவை. இது சர்க்கரையில் கிடைக்கும். அதோடு கூடுதலாக வைட்டமின், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்தும் தேவை. இவற்றை ஸ்வீட்ஸ் தந்துவிடாது. 

ஸ்வீட்டுக்கு மாற்று?

இனிப்பு வகைகளுக்கு பதிலாக பழங்களைச் சாப்பிடலாம். இதில் குளூக்கோஸ் மற்றும் ஃப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் சத்துக்கள் பல நிறைந்துள்ளதால், இதை ஸ்நாக்ஸுக்குப் பதிலாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

sweets

 

சூப், ஜூஸ், குளிர்பானங்கள்

சில நேரங்களில் நமக்கு திட உணவுகள் சாப்பிடப் பிடிக்காது.  ஜூஸ், சூப், குளிர்பானங்கள், மோர் போன்ற திரவ உணவுகளை மட்டுமே குடிப்பதற்குப் பிடிக்கும். ஜூஸும் சூப்பும் உடலுக்கு நல்லவை என்றாலும், அவற்றையும் அளவுடன்தான் குடிக்க வேண்டும். 

உங்கள் உடல், பானங்களை விரும்புவது ஏன்?

உங்கள் உடலுறுப்புகளுக்கும், செல்களுக்கும் நீர் அதிகமாக தேவைப்படுகிறது என்று அர்த்தம். உங்கள் ரத்தம் 92% நீர் தன்மை உடையது. தண்ணீரை அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலம் மயக்கம் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தைத் தவிர்க்கலாம். ஆரோக்கியமான வாழ்வுக்கும், பளபளப்பான சருமத்துக்கும், நீண்ட கூந்தலுக்கும் நீர் அவசியம்.

நீரை எந்தெந்த வழிகளில் எடுத்துக்கொள்வது?

உங்கள் உடல் எடைக்கு தகுந்தாற்போல் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இளநீர், நீர் மோர் போன்றவை ஆரோக்கியத்துக்கு நலம் பயக்கும். தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் சிறந்தவை. டீ, காபி மற்றும் குளிர்பானங்களை அதிகமாகக் குடிப்பதால் உடலில் உள்ள நீர்த்தன்மை குறையும்.

juice

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள்

பிரெட், கேக், உருளைக்கிழங்கு, மஃபீன்ஸ், சிப்ஸ், பாஸ்தா, நூடுல்ஸ், வெள்ளை அரிசி சாதம் போன்ற ஆரோக்கியம் குறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்று சிலருக்கு அடிக்கடி தோன்றும்.

உடல் ஏன் கார்போஹைட்ரேட் கேட்கிறது?

`உடலுக்குத் தேவையான வைட்டமின் மற்றும் கனிமங்கள் நிறைந்த உணவுகளை நீங்கள் எடுத்துக்கொள்ளவில்லை’ என்று உடல் கூறுகிறது. பொதுவாக `லோ கார்ப் டயட்’ மற்றும் `நோ கார்ப் டயட்’ இருப்பவர்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளத் தோன்றும். இவர்கள் சீரான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளாததும், சரியான ஊட்டச்சத்து பெறாததுமே இதற்குக் காரணம். 

 

cool drinks

எவை எவை நல்லவை?

ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான கார்போஹைட்ரெட் உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். புரோக்கோலி, காலிஃபிளவர், பீன்ஸ், தக்காளி, வெங்காயம், காளான், பயறு வகைகள், தானியங்கள், வெள்ளரிக்காய், பழவகைகள், பால் வகைகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

ஸ்நாக்ஸ் / பொரித்த உணவுகள் / ஹோட்டல் உணவுகள்

வேகவைத்த அசைவ உணவுகள் மற்றும் காய்கறிகளைவிட எண்ணெயில் பொரித்த காய்கறிகளைத்தான் பலரும் அதிகம் விரும்புகின்றனர். தற்போது பாக்கெட் உணவுகள், ஹோட்டல் உணவுகள், ஸ்நாக்ஸ் மீது அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

பொரித்த உணவுகளை விரும்புவது ஏன்?

சோடியம் மற்றும் நல்ல கொழுப்பின் அளவு குறைவாக இருப்பதால், இதுபோன்ற உணவுகளைச் சாப்பிட தோன்றும். 
பாக்கெட் உணவுகளில் அதிகப்படியான உப்பு சேர்க்கப்பட்டிருக்கும். இதனால், உடலுக்குத் தீங்கிழைக்கும் ஒருவகையான திரவம் உடலிலேயே தங்கி, உடல் எடையை அதிகரிக்கும். கெட்ட கொழுப்புகளை நீக்க நல்ல கொழுப்புகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டாலே போதும்.

 

fried items

எவற்றைச் சாப்பிடலாம்?

உடலில் உள்ள தேவையற்ற உப்பை வெளியேற்ற, உடற்பயிற்சி செய்யவேண்டும். சமைக்கும்போது உணவில் இந்துப்பு அல்லது கல் உப்பை சேர்த்துக்கொள்ளலாம். நல்ல கொழுப்புகள் நிறைந்த அவகேடோ, பாதாம், முட்டை, மீன், ஆளிவிதை போன்றவற்றைத் தவறாமல் உங்கள் மெனுவில் சேர்த்துக்கொள்ளுங்கள். 

nuts

பசியே எடுக்கலை!

இப்படியும் சிலர் இருப்பார்கள். காலை முதல் இரவு வரைகூட சிலர் சாப்பிடாமல் இருப்பார்கள். சரியாகச் சாப்பிடாவிட்டால், உடல் உறுப்புகள் சோர்வடைந்துவிடும்.

உடலுக்கு என்ன தேவை?

பசியில்லை என்றால் உடல் நன்றாகச் செயல்படுகிறது என்று அர்த்தம் அல்ல. உடலில் ஜின்க் (Zinc) அளவு குறைந்து இருந்தால், பசி எடுக்காது. ஜின்க் நாக்கில் உள்ள சுவை அரும்புகளைத் தூண்டச்செய்யும். இதனால் எதையாவது சாப்பிட வேண்டும் என்னும் உணர்வு ஏற்படும்.

எவற்றைச் சாப்பிடலாம்?

நண்டு, இறால், இறைச்சி, கீரை, முந்திரி, பட்டாணி, சிவப்பரிசி, டார்க் சாக்லேட், பீன்ஸ், முட்டையின் மஞ்சள் கரு, பூண்டு, பூசணி விதை மற்றும் ஆளிவிதை ஆகியவற்றில் தயாரான உணவுகளைச் சாப்பிடலாம்.

குறிப்பிட்ட சுவையை சாப்பிட வேண்டும் என்ற தூண்டுதல் நம் உடலின் இயல்பான தேவையிலிருந்து எழுகிறது. எனவே, அதை தவிர்க்க வேண்டாம். ஆனால், அந்த உணவுகள் ஆரோக்கியமானவையாக இருக்கட்டும்!

- கி.சிந்தூரி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்