வெளியிடப்பட்ட நேரம்: 16:33 (30/01/2017)

கடைசி தொடர்பு:16:35 (30/01/2017)

முத்தான பற்களுக்கு மூலிகை பற்பொடி! - பலம், பலன் தரும் பாரம்பர்யம் #HealthTips

‘உறுதியான பல்லுக்கு உத்தரவாதம்’, `ப்ளஸ் வொயிட்னிங்’, `மல்ட்டி ஆக்‌ஷன் ஃப்ளோரைடு’, `டாக்டர்கள் பரிந்துரைப்பது’... என நீண்டுகொண்டே போகிறது இன்றைக்கு மார்க்கெட்டில் கிடைக்கும் பற்பசைகளின் வகைகள். இவற்றில் எதுவாகவும் இருக்கட்டும்... நம் பற்களுக்கு அது உண்மையான பாதுகாப்பை அளிக்கிறதா என்றால் மிஞ்சுவது மௌனமே! நம் முன்னோர்கள் ஆரோக்கியமான பற்களைப் பெற எந்தப் பற்பசையையும் பயன்படுத்தவில்லை. ‘ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி!’ என்பது முதுமொழி. அதற்கேற்ப இயற்கை மூலிகைக் குச்சிகளையும், அவற்றைக்கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகைப் பற்பொடியையுமே பயன்படுத்தினார்கள். 

 

                                                            மூலிகைப் பற்பொடி

 

“பாரம்பர்யமான சில மூலிகைப் பற்பசைகளைப் பயன்படுத்தினால் பற்களின் ஆரோக்கியம் காக்கலாம்’’ என்கிற சித்த மருத்துவர் தளவாய், எந்தக் குச்சியால் பற்களைத் தயாரிக்கலாம், பற்பசைகளை எப்படித் தயாரிப்பது, பற்பசைகளின் பலன்கள் அனைத்தையும் விவரிக்கிறார் இங்கே...

கருவேலங்குச்சி

கருவேல மரம் அல்லது கருவமரம் என்பது காடுகளில் வளரும் ஒரு வகை முள்மரம். கருவக்குச்சிகளை ஒடித்து, அப்படியே பல் துலக்கலாம். இது, ஈறுகளில் உண்டாகும் ரத்தக்கசிவைப் போக்கக்கூடியது. சர்க்கரை நோயையும் குணப்படுத்தும் ஆற்றல்கொண்டது.

                                         கருவேலங்குச்சி

 

வேப்பங்குச்சி

வேப்பங்குச்சியால் பல் துலக்குவதும் ஒரு பழங்கால முறை. இன்றும் கிராமப் பகுதிகளில் பலரும் வேப்ப மரத்தில் இருந்து ஒரு குச்சியை ஒடித்து, பல் துலக்குவதை ஒரு பழக்கமாக வைத்திருக்கின்றனர். இதனால் அவர்களின் பற்கள் உறுதியாகின்றன. அதற்குக் காரணம், வேப்பங்குச்சியில் எண்ணற்ற ஆன்டிசெப்டிக் (Antiseptic) மற்றும் ஆன்டிபயாடிக் பொருட்கள் (Antibiotic) இருப்பதுதான். வேப்பங்குச்சியால் பற்களைத் துலக்கினால், பற்கள் நன்கு சுத்தமாக, பளிச்சென்று இருக்கும். துர்நாற்றம் நீங்கும். அதோடு, பற்களில் நோய்கள் எதுவும் வராமல் காக்கும். வேப்பங்குச்சியைக் கொண்டு பற்களைத் துலக்கப் போகிறீர்களா? முதலில் அந்தக் குச்சியை உடைத்து, அதன் ஒரு முனையை நன்கு மென்றுவிட்டு, பிறகு பல் துலக்கவும்.

                            வேப்பங்குச்சி

 

ஆலங்குச்சி

ஆலமரத்தின் குச்சியை உடைத்து அதனைப் பற்களில் தேய்த்துவர பற்கள் உறுதி பெறும். மேலும், ஈறுகளில் வீக்கம், ரத்தக்கசிவு போன்ற பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.

மூலிகைப் பற்பொடிகள்

ஒளசதம் (ஔஷதம்) பற்பொடி:

தேவையானவை: 

படிகாரம் - 60 கிராம்
மிளகு -10 கிராம்
சாம்பிராணி - 10 கிராம்
இந்துப்பு - 10 கிராம்
ஓமம் - 5 கிராம்
கிராம்பு - 2.5 கிராம்
வேப்பம்பட்டை - 10 கிராம்.

செய்முறை: 
மேற்கண்ட பொருட்களை ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியை தினமும் பல் துலக்கப் பயன்படுத்தலாம்.

பலன்கள்: பல்வலி, பல் கூச்சம், வாய் துர்நாற்றம், பல் நோய்கள், பல் ஆடும் பிரச்னை, பலவீனமான ஈறுகள் ஆகிய பிரச்னைகளைத் தீர்க்கும்.

 

                                                                   பற்கள்

தந்ததான சூர்ணம்

தேவையானவை: 

கடுக்காய் - 10 கிராம் 
தான்றிக்காய் - 10 கிராம்
நெல்லி முள்ளி - 10 கிராம்
மாசிக்காய் - 15 கிராம்
ஜாதிக்காய் - 15 கிராம்
சுக்கு - 10 கிராம்
மிளகு - 10 கிராமம்
திப்பிலி - 10 கிராம்
ஏலக்காய் - 10 கிராம்
லவங்கம் - 10 கிராம்
லவங்கப் பட்டை - 10 கிராம்
கற்பூரம் - 10 கிராம்
நெற்பதர் சாம்பல் - 120 கிராம்
நாயுருவி - 100 கிராம்
இந்துப்பு - சிறிது.

செய்முறை: 

கற்பூரம், நெற்பதர் சாம்பல், நாயுருவி தவிர, மேற்கண்ட பொருட்களைத் தனித்தனியாகப் பொடித்து, சலித்துக்கொள்ளவும். பிறகு கற்பூரத்தைப் பொடித்து, பொடித்த பொருட்களோடு கலக்கவும். அதன் பின்னர் சலித்த நெற்பதர் சாம்பலை நாயுருவியுடன் சிறிது இந்துப்பு சேர்த்து அரைத்து பொடித்ததுடன் சேர்க்கவும்.

பலன்கள்: 

பல்லில் சீழ்வடிதல், வாய் துர்நாற்றம், பல் கூச்சம், ஈறு சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்.

தந்த ரோகம்

தேவையானவை: 

சுக்கு - 10 கிராம்
காசுக்கட்டி - 10 கிராம்
கடுக்காய் - 10 கிராம்
இந்துப்பு - 10 கிராம்.

இந்த நான்கையும் ஒன்றாகச் சேர்த்து இடித்து, பொடி செய்துகொள்ளவும். தேவைப்படும்போது இந்தப் பொடியால் பற்களைத் துலக்கவும். 

பலன்கள்:

பல் ஈறுகளில் ரத்தம் கசிதல், பல் ஆடுவது, சொத்தையாவது போன்ற பிரச்னைகள் தீரும். 

 

`ஏ... மக்கா! பல் நலமா இருந்தா கல்லைக்கூட கற்கண்டா சாப்பிடலாம்ல...’ என கிராமத்தில் விளையாட்டாகச் சொல்வதுண்டு. இயற்கை முறையில் கிடைக்கக்கூடிய மூலிகைகளைக் கொண்டு நமது பற்களைப் பேணி காப்போம். அந்த விளையாட்டு வாசகத்தை உண்மையாக்குவோம்! 

- வெ.வித்யா காயத்ரி (மாணவப் பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்