Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘பயன்படுத்து; பின் கசக்கி எறி!’ - ஓரங்கட்டப்பட்ட நினைவாற்றல்... துணைநின்ற துரித கலாசாரம்! நலம் நல்லது-61 #DailyHealthDose

நினைவாற்றல்  -நலம் நல்லது 

 

தைப்போல அற்புதமான ஒன்று வேறு இருக்க முடியாது... எது? நினைவாற்றல். ‘மறதிகூட ஞாபங்களில்தான் கட்டமைக்கப்படுகின்றன’ என்கிற சு.வெங்கடேசனின் வரிகளுக்குப் பின்னே, கவிதையைத் தாண்டி அறிவியலும் ஒளிந்து நிற்பதுதான் விசேஷம். 

 

நினைவாற்றல் 

 

‘தேவை இல்லாம இதை எடுத்து கையையோ, காலையோ காயப்படுத்திடக் கூடாது’ என்று சில விளையாட்டுச் சாமான்களை நம் பாட்டி பரணில் ஒளித்துவைத்திருப்பார். அதுபோல நம்மைச் சங்கடப்படுத்தும் சில விஷயங்களை அழகாக என்கோடிங் (Encoding) செய்து, ஹிப்போகேம்பளின் (Hippocampus) ஓரத்தில் மூளை ஒளித்துவைப்பதால்தான், நிறையப் பேர் முதல் காதலைச் சௌகரியமாக மறந்துவிடுகிறார்கள். ஆனால், நினைவுகள் குறித்த அறிவியல், பிரமிக்கவைக்கும் புதிர்முடிச்சுகளைக்கொண்டது. 

மூன்று வயதில் 300 திருக்குறள்களைச் சொல்லும் குழந்தை, 11 வயதில் மனப்பாடப் பகுதியைப் படிக்க முடியாமல் கடைசி பெஞ்சுக்கு மாறுகிறது... 17 வருடங்களுக்கு முன் மனதுக்குப் பிடித்தவள் அணிந்திருந்த ஆரஞ்சு நிற ரிப்பன் ஞாபகத்தில் இருக்கும்போது, 15 நிமிடங்களுக்கு முன் எங்கேயோ வைத்த வண்டிச்சாவியை மறந்துவிட்டு வீட்டையே தலைகீழாகப் புரட்டுகிறார் ஒருவர்... இவை எல்லாமே மூளையின் ரசவாதம்தான். 

முளை, தனக்குள் சேரும் புதுப்புதுத் தகவல்களை என்கோடிங் செய்து, சரியான இடத்தில் சேமித்து (Storage) வைத்து, பின்னர் டிகோடிங் (Decoding) செய்துகாட்டும் வித்தையில்தான் நம் நினைவாற்றல் ஒளிந்திருக்கிறது. இந்தச் சூத்திரத்தின் நெளிவு சுளிவைக் கற்றவர்கள்தான் விஸ்வநாதன் ஆனந்தாகவோ, அஸ்டாவதானியாகவோ உருவாகிறார்கள். 

பிறந்த குழந்தையை, தாயின் மடியில் வைத்தால் அதுவாகவே தாயின் மார்புக் காம்பைப் பற்றி பால் அருந்துவதை அறிவியலே வியந்து பார்த்திருக்கிறது. குழந்தைக்கு இந்த அறிவு பிறக்கும்போதே ப்ரீ லோடடு (Pre loaded) ஆக மூளையில் பதியப்பட்டிருக்கிறது போலும். 

நினைவாற்றல்  

செய்திகளை, தற்காலிக நினைவு, நீடித்த நினைவு என மூளை வேறு வேறு வடிவில் பதிவுசெய்யும். தற்காலிக நினைவு ஒலி வடிவில் (Acoustic) மூளையில் பதியும். ஒரு தொலைபேசி எண்ணை செவி வழியில் கேட்டு டயல் செய்த பிறகான 30 நொடிகளில் அந்த எண்ணை நாம் மறந்துபோவது, அந்த அக்கூஸ்டிக் ஸ்டோரேஜ் (Acoustic Storage) எனும் தற்காலிக நினைவாற்றல் மூலமாகத்தான். மூச்சு முட்டும் பணியில் இருக்கும்போது, `வீட்டுக்கு வரும்போது வெண்டைக்காய் வாங்கிட்டு வாங்க’ என்று மனைவி போனில் சொல்வதை, மூளையின் தற்காலிக ஞாபக டிபார்ட்மென்ட்டில் போடுவதால்தான், அந்தக் கணமே மறந்துவிடுகிறோம்; வீட்டில் போய் திட்டு வாங்குகிறோம். 

நாம் கேள்விப்படும் விஷயம், தற்காலிக ஞாபக டிபார்ட்ட்மென்ட்டா... நாள்பட்ட ஞாபக டிபார்ட்மென்ட்டா என்பதை நாம் தெளிவாக முடிவுசெய்து பதியப் பழகிக்கொண்டால் மட்டுமே நினைவாற்றல் மிளிரும். 

இந்தத் துரித உலகில் தூக்கமின்மை, மன இறுக்கம், இரைச்சலான சுற்றுச்சூழல்... எனப் பல காரணிகள் நம் மறதியை அதிகரிக்கின்றன. பள்ளி, பரீட்சை சார்ந்த பணி சார்ந்த, பயன் சார்ந்த விஷயங்களைத் தவிர பிறவற்றை எல்லாம் தற்காலிக ஞாபகப் பதிவில் வைத்துக்கொள்ள நவீனம் கற்றுக்கொடுப்பதில்தான் மனித மூளை கொஞ்சம் மங்க ஆரம்பித்துவிட்டது. 

சாதாரணமாக, 150 தொலைபேசி எண்களை மூளையில் பதிந்து வைத்திருக்கும் நாம் செல்போனில் கணக்கில் அடங்கா எண்களைப் பதியத் தொடங்கியதும், `டேய் மாப்ள... என் சொல்போன் நம்பரை உன் போன் புக்ல பார்த்துச் சொல்லேன்...’ எனக் கேட்கத் தொடங்கிவிட்டோம். நினைவாற்றல் மங்கிப்போவதற்கு எலெக்ட்ரானிக் உபகரணங்களை அதிகமாகப் பயன்படுத்துவதும் ஒரு காரணம். 

அந்தக் காலத்தில் சந்தம் மாறாமல், ஆயிரக்கணக்கில் பதியம் பாடியதற்கு அன்றைய சலனமற்ற நுண்ணறிவும், சிதைவு பெறாத பாரம்பர்ய உணவும், அதிகம் ஆர்ப்பரிக்காத மனமும் முக்கியக் காரணிகள். தவிர, நினைவாற்றல் கூட்டும் எளிய தாவரங்களை உணவாக உட்கொண்டதும் ஒரு காரணம். 

நினைவாற்றல் 

 

நினைவாற்றல் மேம்பட உதவுபவை... 

* வல்லாரைக் கீரை நினைவாற்றல் மேம்பட உதவுவது. வெளி உபயோகமாக நாள்பட்ட புண்களை ஆற்றுவதில் பயன் தரும் இந்தக் கீரையின் தாதுச்சத்துகள், மனதைச் செம்மையாக்கி நல்ல உறக்கத்தையும், தீர்க்கமான நினைவாற்றலையும் தரக்கூடியது. நினைவாற்றலை அதிகரிக்க விரும்புகிறவர்கள், வல்லாரைக் கீரை தோசை சாப்பிடலாம். வலிப்பு நோய்க்கு இதைப் பயன்படுத்தலாமா என்கிற ஆய்வுகள்கூட நடைபெற்றிருக்கின்றன. 

* சங்கு வடிவில் பூக்கும் `சங்குப் பூ’ எனும் மூலிகையும், `நீர்ப்பிரமி’ எனும் பிரமிச் செடியும் நினைவாற்றல் திறனை அதிகரிக்கும் நுண் தாவரக்கூறுகள் கொண்டவை. 

* இயல்பாகவே டி.ஹெச்.ஏ (DHA) அதிகம் உள்ள மீன்கள், பாலிபினால்கள், ட்ரைடெர்பெனாய்ட்ஸ் (Triterpenodis) அதிகம் உள்ள வண்ணக் கனிகள், சிறு தானியங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டாலே போதும், நினைவாற்றல் திறன் கூடும். 

* நடைப்பயிற்சிக்குக் கிடைத்த அலாதியான வரவேற்பு இன்னும் மூச்சுப்பயிற்சிக்குக் கிடைக்கவில்லை. பலர் நினைப்பதுபோல இது ஆக்சிஜன் அள்ளும் விஷயம் மட்டுமல்ல; நுரையீரலின் துணைகொண்டு மூளைச் சுரப்பிகளை, நரம்புகளை, திசுக்களை, நிணநீர் ஓட்டத்தை ஆளும் விஷயம். எனவே, ஞாபகசக்திக்கு மூச்சுப்பயிற்சி நல்லது

`பயன்படுத்து; பின் கசக்கி எறி’ - சித்தாந்தம்கொண்ட துரித நவீன கலாசாரம், நாம் அன்றாடம் கடக்கும் அன்பு, காதல், கரிசனம், மெனக்கெடல், அரவணைப்பு, மரபு பழக்கம்... என எல்லாவற்றையும் மூளையின் தற்காலிகப் பதிவில் மட்டுமே கட்டமைத்துள்ளது. இவற்றை நீடித்த நினைவுக்கு மாற்ற வேண்டும் என்று மனது வைத்தாலே போதும்... நினைவாற்றலை மேம்படுத்திவிடலாம். 

 

தொகுப்பு: பாலு சத்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement