கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளைக் கண்டறிவது எப்படி?

கற்றல்-  குழந்தைகள்

ம் நாட்டில் உள்ள பள்ளி வகுப்பறையில் 12 சதவீதம் குழந்தைகள் தினமும் கற்றல் குறைபாட்டோடு போராட்டம் நடத்துகின்றனர் என்றால் நம்ப முடிகிறதா? காரணம் தெரியாமல் படிப்போடு  மல்லுக் கட்டும் அவர்களை கண்டறிந்து கூடுதல் பயிற்சிகள் அளித்து புரிதலை அதிகப்படுத்தலாம். கூடவே தனித்திறன்களையும் கண்டறிந்து மேம்படுத்தினால் டிஸ்லெக்ஸியாவை தாண்டியும் சாதிக்க முடியும். ஆரம்பத்தில் கண்டு கொள்ளாமல் விடுவதால் குழந்தைகள் அடல்ட் ஸ்டேஜை அடையும் போது பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர் என்கிறார் கல்வியாளர் செந்தில்குமார்.

* உலகளவில் கற்றல் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட பலர், பல்வேறு துறைகளிலும் நிபுணத்துவம் உள்ளவர்களாக வளர்ந்துள்ளனர். கற்றல் குறைபாடு என்பது நரம்பியல் சார்ந்த ஒரு நிலை. இது மூளையில் விவரங்களை அனுப்புகிற, பெறுகிற மற்றும் புரிந்துகொள்கிற திறனைப் பாதிக்கிறது. கற்றல் குறைபாடு கொண்ட ஒரு குழந்தை வாசிப்பதற்கு, எழுதுவதற்கு, பேசுவதற்கு, கவனிப்பதற்கு, கணிதக் கோட்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கு மற்றும் பொதுவாகவே எதையும் புரிந்துகொள்வதற்குச் சிரமப்படலாம். கற்றல் குறைபாடுகள் டிஸ்லெக்ஸியா, டிஸ்பிராக்ஸியா, டிஸ்கால்குலியா மற்றும் டிஸ்கிராபியா என வகைப்படுத்தப்படுகிறது. இந்தக் குறைபாடுகள் ஒவ்வொன்றும் மற்றவற்றுடன் இணைந்து காணப்படலாம்.

* கற்றல் குறைபாடுகள் என்பது குழந்தைகளுக்கு உடல் சார்ந்த நோய்களாலோ, மன நோய் காரணமாகவோ, கலாச்சார பிண்ணணி காரணமாகவோ ஏற்படுவதில்லை. கற்றல் குறைபாடு உள்ள ஒரு குழந்தை பலவீனமாக அல்லது சோம்பேறித்தனமாக உள்ளது என்று அர்த்தமில்லை.  அவர்கள், பாட்டு, டான்ஸ், விளையாட்டு, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு திறன்களின் மிகவும் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள். கற்றலில் மட்டுமே சிரமத்தை சந்திப்பார்கள்.

* குழந்தைகள் பள்ளிக்கு வந்து 6 வயதை எட்டும் போது அவர்களுக்கு கற்றலில் உள்ள குறைபாடுகள் தென்படும். அதுவரை துறுதுறுப்பாக இருந்த குழந்தைகளின் மதிப்பெண் பட்டியல் சிக்கலை சந்திக்கும். இந்த சூழலில் குழந்தைகளை தண்டிப்பது, அவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற படி,படி என வற்புறுத்துவதும் நடக்கிறது. இது போன்ற செயல்பாடுகள் குழந்தைகளை உளவியல் ரீதியாகவும் பாதிக்கும்.

* இந்தக் குழந்தைகள் வளர் இளம் பருவத்தை எட்டுகின்ற போது அடுத்து என்ன படிப்பது, எந்தத் துறையில் தனது பயணத்தை தொடர்வது என்பதில் குழப்பத்தை சந்திக்கின்றனர்.

* கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் புத்திக் கூர்மை அற்றவர்களாக இருப்பதில்லை. அவர்கள் ஏதாவது ஒரு துறையில் ஆர்வம் மற்றும் திறமையுடன் காணப்படுகின்றனர். மதிப்பெண் பட்டியலில் மட்டுமே அவர்களது திறமையை தேடிக் கொண்டிருக்காமல், அவர்களது பலம் எது, விருப்பமான துறை எது என்பதை தெரிந்து அந்த துறையில் அவர்கள் வளர நாம் ஊக்கப்படுத்த வேண்டும். விருப்பமும், திறமையும் உள்ள துறையில் அவர்களை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை அமைத்துக் கொடுக்கலாம்.

*  அனிமேஷனில் விருப்பம் இருப்பின் அது சார்ந்த பயிற்சிகளில் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம். அதையே தனக்கான தொழிலாகவும் வடிவமைத்துக் கொள்ளலாம். படிப்பைத் தாண்டி அவர்களது திறமையை தட்டிக் கொடுத்து வளர்ப்பதன் மூலம் கற்றல் குறைபாடுக்கான தீர்வை எட்டலாம்.

* பள்ளியில் படிக்கும் போதே தனித்திறன் சார்ந்த பயிற்சிகள் அளிப்பது அவர்களது தன்னம்பிக்கையை மேம்படுத்தும்.

* கல்லூரிப் படிப்பிலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத நிலையில் இவர்கள் மனதளவில் சிதைக்கப்படுகின்றனர். விருப்பம் இல்லாத ஒரு துறையில் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகும். வேலைக்கு செல்லும் இடங்களில் பணி குறித்து ரிப்போர்ட் எழுதுவதில் இவர்கள் சிரமங்களை சந்திப்பார்கள். லீவ் லெட்டர் எழுதுவதும் கூட கடினமாகவே இருக்கும். இது போன்ற காரணங்களால் வேலையிடத்திலும் பெரியளவில் பெயர் எடுக்க முடியாது.

* . கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளை புரிந்து கொள்ளாமல் வளர்த்து அவர்களை கிடைத்த வாய்ப்பில் தள்ளுவதால் அர்த்தமற்ற வாழ்வை வாழ அவர்களை நிர்பந்திக்கிறோம்.

* உலகம் முழுவதும் டிஸ்லெக்ஸியாவை சரியாக புரிந்து கொள்ளுங்கள் என்பதே பல ஆண்டுகளாய் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கை. இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் தகவல்களை மனப்பாடம் செய்து ஒப்பிப்பது மற்றும் எழுதியே ஆக வேண்டிய கட்டாயமும் இல்லை. அதே போல் கணக்கிடுவதும் எளிதே. . இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் கற்றல் குறைபாட்டையும் தாண்டி சாதிப்பதற்கான பாசிட்டிவ் சூழல் உள்ளது.

* செய்ய வேண்டியதெல்லாம் குறையைத் தாண்டி ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இருக்கும் திறமையை கண்டு பிடித்து வெளியில் கொண்டு வருவதே. அவர்களுக்கான தனித்திறமை மூலம் அவர்களுக்கான துறையில் அவர்களை சிறக்கச் செய்வதே நாம் அவர்களுக்கு காட்டும் வழி’’ என்கிறார் செந்தில்குமார்.

- யாழ் ஶ்ரீதேவி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!