சூரியனுக்குத் தேவை சூரிய வெளிச்சம்..! வைட்டமின் டி பற்றாக்குறை #MustRead | DMK President Karunanidhi Suffering from Vitamin D Deficiency

வெளியிடப்பட்ட நேரம்: 16:38 (03/02/2017)

கடைசி தொடர்பு:17:51 (03/02/2017)

சூரியனுக்குத் தேவை சூரிய வெளிச்சம்..! வைட்டமின் டி பற்றாக்குறை #MustRead

நம் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதாவாகட்டும், கருணாநிதியாகட்டும் அவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது ஒவ்வோர் உண்மைத் தொண்டனும் வருந்தி இருப்பான். இருவருக்குமே வேறுவேறு உடல் பிரச்னைகள் என்றாலும், இருவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. அது சூரிய வெளிச்சம் போதாமை. இந்திய அரசியல் அரங்கில் புகழ் வெளிச்சத்தில் ஜொலித்துக்கொண்டு இருந்த, இருக்கும் இரு பெரும் ஆளுமைகளான இவர்களுக்கு சூரிய வெளிச்சம் போதவில்லை என்பது ஒரு பிரச்னை என்றால் நம்ப முடிகிறதா? உடலுக்கு அவ்வளவு முக்கியமானதா சூரிய வெளிச்சம்?

வைட்டமின் டி பற்றாக்குறை

மனிதன்  காட்டிலும் மேட்டிலும் அலைந்து திரிந்த நாட்களில் இல்லாத பிரச்னை ஒன்று இப்போது ஏற்பட்டு உள்ளது. அது வைட்டமின் டி குறைபாடு. ஏ.சி அறையில் இருந்து வெளியேறி, ஏ.சி காரில் ஏறி இன்னொரு ஏ.சி அறையில் அமர்ந்து அலுவல் பார்த்துவிட்டு மீண்டும் ஏ.சி அறைக்குத் திரும்பும் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பிரச்னை இது. அதிலும் முதல்வர்கள் என்றால் கேட்கவா வேண்டும். கொளுத்தும் வெயிலில் தொண்டர்கள் விரலையே விசிறியாக்கி அமர்ந்திருக்க, 20-க்கும் அதிகமான ஏ.சியில் அமர்ந்திருப்பார் அம்மா. கருணாநிதி என்றால் ஏ.சிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கும் அவ்வளவே. அவர்களும் புளுக்கத்தில்தான் அமர்ந்திருக்க வேண்டும் என்று நாம் சொல்ல வரவில்லை. இப்படி ஏ.சியிலேயே இருந்ததுவும், இருப்பதுவும் அவர்களின் உடல் நலம் கெட ஒரு முக்கியமான காரணம் என்கிறது மருத்துவ உலகம். 

ஜெயலலிதா நடித்துக்கொண்டிருந்த காலத்தில் ஓடியாடி உழைத்திருப்பார். வெயிலில் குளித்து மழையில் நனைத்திருப்பார். அவர் ஒரு சிறந்த டான்ஸர் வேறு. இப்படி இருந்த வரை அவர் ஃபிட்டாகவே இருந்தார். முழு நேர அரசியலில் ஈடுபடத் தொடங்கியபோதுகூட அவர் தன்னை ஏ.சிக்குள்ளேயே முடக்கிக்கொண்டவர் அல்ல. ஆட்சிக்கட்டிலில் ஏறிய பிறகே அவரின் வாழ்க்கைமுறை மாறியது. மெள்ள தன்னை வெயிலில் இருந்து விடுவித்துக்கொண்டார். கோட் போன்ற மேலாடை அணிந்துகொண்டார். பிரசாரங்களைக்கூட மாலைகளில்தான் அமைத்துக்கொண்டார். இப்படி, அவர் தன்னைச் சுற்றி அமைத்துக்கொண்ட அந்த வளையம்தான் அவருக்குப் பிரச்னையாகி இருக்கக்கூடும்.  

ஜெயலலிதா

மறுபுறம், கருணாநிதியும் அப்படித்தான். இளம் வயதிலேயே அரசியல் களம் கண்டவர். தமிழ்நாடு முழுக்க அவர் கால்படாத நிலம் இல்லை. தி.க-விலும், பின்னர் தி.மு.க-விலும் இறங்கிக் களப்பணியாற்றிய காரிய கர்த்தா அவர். தன் உடல்நலம் கருதாது அவர் மண்ணில் இறங்கி நடந்துகொண்டிருந்த நாட்களில் நன்றாகவே இருந்தார். உண்மையில், 90+ வயதிலும் துடிப்போடு செயல்படும் அவரை முதுமைகூட நெருங்கவே அஞ்சியது. ஆனால், வெயில் படாத வாழ்வொன்று அவருக்கும் இருந்தே வந்தது. அவரின் உடல்நலப் பிரச்னைக்கு முதுமை ஒரு முக்கியமான காரணம் என்றாலும் வாழ்க்கைமுறையும் இன்னொரு காரணம்.  

சூரிய வெளிச்சம் ஏன் முக்கியமானது? அதை எப்படிப் பெறுவது என்பது பற்றி எலும்பு, மூட்டு மருத்துவர் முத்துக்குமாரிடம் பேசினோம்...
சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்கள் நம் மேனியில் படும்போது, நம் உடல் அதில் இருந்து தனக்கான வைட்டமின் டி என்ற முக்கியமான சத்தைக் கிரகித்துக்கொள்கிறது. மற்ற வைட்டமின்கள் அனைத்தும் நமக்கு உணவுப் பொருட்கள் மூலமாக உடலுக்குப் போதுமான அளவு  கிடைக்கின்றன. ஆனால், இந்த வைட்டமின் டி மட்டும் நமக்கு சூரிய வெளிச்சத்தில் இருந்து மட்டுமே நிறைவாகக் கிடைக்கிறது. பால் பொருட்களிலும், கீரைகளிலும், கொய்யா போன்ற கனிகளிலும் இருந்து மிகக் குறைந்த அளவு (சுமார் இரண்டு சதவிகிதத்துக்கும் குறைவாக) கிடைத்தாலும், அது முழுமையானது அல்ல. எனவே, நம் உடல் வைட்டமின் டி சத்துக்காக சூரியனையே நம்பி உள்ளது.

வைட்டமின் டி ஏன் தேவை

நம் உடலுக்கு அஸ்திவாரமாய் இருப்பவை எலும்புகள். எலும்புகளில்தான் கோடிக்கணக்கான செல்கள் நாள்தோறும் உற்பத்தியாகி, உடல் புது உருக்கொள்ள பயணப்படுகின்றன. வைட்டமின் டி நம் எலும்புகளை உறுதியாக்கி, நம் ஆரோக்கியத்துக்கு அச்சாரம் இடுகிறது. எலும்புகள் வலுவாக இருக்க கால்சியம் தேவை. அந்த கால்சியத்தை உடல் கிரகிக்க  வைட்டமின் டிதான் உதவுகிறது. நம் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக வைத்திருக்கவும், மூளையில் சுரக்கும் எண்டார்பின் எனும் உற்சாகம் தரும் ஹார்மோன் சுரப்பை மேம்படுத்தவும், உடல் கடிகாரத்தை சீராகப் பராமரிக்கவும் வைட்டமின் டி தேவை.

நாம் போதுமான அளவு வெயிலில் இல்லாதபோது நம் உடலில் வைட்டமின் டி குறைகிறது. இதனால், எலும்பு அடர்த்திக் குறைதல், எலும்புத் தேய்மானம் உட்பட பல்வேறு வளர்சிதை மாற்றக் கோளாறுகள் உடலில் ஏற்படுகின்றன.

சூரிய வெளிச்சம்

வெயிலுக்கு வாங்க!

புற ஊதாக் கதிர்களில் ஏ, பி என இருவகை உள்ளன. இதில் ஏ வீரியம் குறைந்தது. காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரையிலும் மாலை நான்கு மணிக்கு மேலும் ஏ வகைக் கதிர்கள் இருக்கும். காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பி வகைக் கதிர்கள் இருக்கும். இந்தக் கதிர்களில் வைட்டமின் டி அதிகமாக இருக்கும். என்றாலும், இவற்றில் கார்சினோஜன் எனப்படும் புற்றுநோய் காரணியும் உள்ளது. எனவே, இதைத் தவிர்க்கலாம். தினமும் காலை 6-9 அல்லது மாலை 4-6 மணி அளவில் வெயிலில் நடக்கும்போது, உடலுக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்கிறது. நம் முன்னாள் முதல்வர்கள் நமக்குச் சொல்லும் ஆரோக்கியத்தின் செய்தி இதுதான். வெயிலுக்கு வாங்க! 

- இளங்கோ கிருஷ்ணன்


டிரெண்டிங் @ விகடன்