எண்ணூர் விபத்து: மீன்கள்...மீனவர்கள்...மீட்புப்பணியாளர்களுக்கு என்னவெல்லாம் பாதிப்புகள்? #ChennaiOilSpill

எண்ணூர் துறைமுகத்தில் ஏற்பட்ட கப்பல் விபத்தால் கடலில் சுமார் மூன்று கி.மீ தூரத்துக்குப் பரவி உள்ள எண்ணெயால் கடல் வாழ் உயிரிகள் பாதிக்கப்படும் என்கிறார்கள். மறுபுறம் கடலோரங்களில் வசிக்கும் மக்களுக்கும், சீரமைப்புப் பணியில் ஈடுபடுபவர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும் என்கிறார்கள். நவீன தொழிநுட்பம் எவ்வளவோ பெருகி இருக்க எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் அல்லது மிகக் குறைந்த பாதுகாப்பு உபகரணங்களோடு வாளியைக் கொண்டு வாரிக்கொண்டிருக்கும் அவலமும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது... இதனால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் என்னென்ன? என்ன மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டோம். 

எண்ணூர்

"விபத்தால் எண்ணெய் சுமார் மூன்று கி.மீ தூரத்துக்குப் பரவி உள்ளது. பரவியுள்ள இடம் தண்ணீர், பாறைகள் சூழ்ந்த இடம், மணல்பாங்கான பகுதி என மூன்று பகுதிகளாக உள்ளதால் இடத்துக்கு ஏற்ப தூர்வாரும் பணிகள், சுத்திகரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. எண்ணெய் கசிவு சீரமைப்புத் துறைசார்ந்த நிபுணர்கள், மாசுக் கட்டுபாட்டு வாரிய நிபுணர்கள், மீனவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலதரப்பினரும் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். வருவாய்த்துறை, துறைமுகத்துறை, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை எனப் பல்வேறு அரசுத்துறையினரும் இந்தப் பணியிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்ட சுத்திகரிப்பு நடக்கும் பகுதிகளில் 'ஸ்டாடிக் கேம்ப்' எனப்படும் நிலையான மருத்துவ முகாம்கள், நடமாடும் மருத்துவ முகாம்கள், மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் நேரடியாகச் சென்று சிகிச்சை தரும் முகாம்கள் என மூன்று வகையான பாதுகாப்பு மருத்துவ முகாம்களை நடத்திவருகிறோம். பொதுவாக, இதுவரை கடலோர குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை. ஆனால், சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு சிறுசிறு அலர்ஜி, சரும பாதிப்புகள், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், அதற்கான மருந்துகளோடு தயார்நிலையில் உள்ளோம். இந்த எண்ணெய் விபத்து தொடர்பாக முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் சில தவறான, மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக, இந்த விபத்தில் கசிந்த எண்ணெயால் ஹைட்ரஜன் சல்ஃபைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற மோசமான உயிருக்கு ஆபத்தான விஷவாயுக்கள் பரவக்கூடும் போன்ற தகவல்கள் பரவி வருகின்றன. உண்மையில் அப்படி ஏதேனும் இருந்தால் இந்நேரம் பாதிப்புகள் மோசமாகி இருக்கும். எண்ணெயால் அலர்ஜி, சருமப் பிரச்னை, தும்மல், மூக்கு, கண் எரிச்சல், சுவாசத் திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். எனவே, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் முறையான பாதுகாப்பு உடைகளோடு பணியில் ஈடுபடுவது நல்லது" என்றார்.

எண்ணெய் பரவிய எண்ணூர் எண்ணூர்

இதுகுறித்து சரும மருத்துவர் ஸ்வேதா ராகுலிடம் பேசினோம். "கடலில் படிந்த கச்சா எண்ணெயை அப்புறப்படுத்தும் பணியில் இருப்பவர்களுக்கு தோல் அலர்ஜிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், அந்த கச்சா எண்ணெயை சுவாசிப்பதால் மூச்சுத்திணறல் மற்றும் சுவாசப் பிரச்னைகள் வரும். இதுபோன்ற கச்சா எண்ணெய் அப்புறப்படுத்தும் செயலில் ஈடுபடுபவர்கள் கண்டிப்பாக தரமான ரப்பரால் ஆன கை,கால் உறை (Rubber Vinyl Glouse) மற்றும் முழு உடலையும் கவர் செய்யும்  ரப்பர் உடையை அணிய வேண்டும். சாதாரண கையுறைகளைப் பயன்படுத்தக்கூடாது. மேலும், பணியில் ஈடுபட்டவர்கள் இடை இடையே எடுத்துக்கொள்ளும் ஓய்வின்போது அவர்களை நன்கு சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். விபத்து ஏற்பட்ட பரப்பை சுற்றி வசிப்பவர்களுக்கும்  தோல் அலர்ஜிகள் வரலாம். இதைத் தவிர்க்க நம்மை சுத்தமாக வைத்துக்கொள்வதுடன், சுற்றியுள்ள சூழலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்." என்றார்.

தகுந்த பாதுகாப்பு இல்லாது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள்

மேலும் இதுகுறித்து நெஞ்சகநோய் மருத்துவர் ஜெயராமிடம் கேட்டபோது, "நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் எண்ணெயில் இருந்து வெளிவரும் வாயுவை சுவாசித்தால் மூச்சடைப்பு, நுரையீரல் பாதிப்பு மற்றும் நிமோனியா வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. நாட்பட நாட்பட கடலில் பரவிய எண்ணெயில் நீர் மற்றும் சூரிய ஒளி தொடர்ந்துபடுவதால், எண்ணெயில் இருந்து வரும் வாயுக்களின் விளைவுகள் அதிகமாகலாம். மேலும், தொடர்ந்து மாதகணக்கில் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு நுரையீரல் பாதிப்புகள் எளிதில் வரலாம்" என்று எச்சரிக்கிறார். பொதுவாக, எந்த ஒரு பேரிடர் ஏற்படும் போதும் உடனடி பாதிப்புகள் நீண்டகால பாதிப்புகள் என இரண்டு வகையான பிரச்னைகள் ஏற்படும். அரசும், மக்களுக்கும் உடனடி பிரச்னைகளை மட்டும் அல்ல நீண்டகால பாதிப்புகளையும் மனதில் கொண்டு அதற்கு ஏற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். 

கடற்கரையில் இறந்துகிடக்கும் ஆமைகள்

கடல் பகுதியில் எண்ணெய்க் கசிவு நிகழ்ந்திருப்பதால், அந்தப் பகுதியில் உள்ள மீன்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? மீன், கடல் உணவுகள் பாதுகாப்பானவையா என்பன குறித்து மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசினோம். "எண்ணெய் பரவி உள்ள பகுதியானது இரண்டு மூன்று ஏரோநாட்டிக்கல் தொலைவில்தான் உள்ளது. நமது மீனவர்கள் அதைக் கடந்து சுமார் 15-30 ஏரோநாட்டிக்கள் வரை சென்றுதான் மீன் பிடித்து வருகிறார்கள். அந்த மீன்களை நாங்கள் மீன்வளத்துறை பல்கலைக்கழகத்தில் கொடுத்து ஆய்வு செய்தோம். அதில் எண்ணெய் தொடர்பான எந்த பாதிப்பும் மீன்களுக்கு இல்லை எனப் பல்கலைக்கழகம் அறிக்கை கொடுத்துள்ளது. எனவே, மீன்கள் பாதுகாப்பானவையே. இதை உண்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. மேலும், எண்ணெய் பரவி உள்ள இடங்களில் மீன் பிடிப்பு நிகழ்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது" என்றார். 
  
- இளங்கோ கிருஷ்ணன், ச.மோகனப்ரியா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!