Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாரம்பர்ய அரிசி ரகங்கள் தொலைந்த கதை! நலம் நல்லது-67 #DailyHealthDose

ளவாகச் சாப்பிட்டால் அரிசியும் அமிர்தம்தான். பாரம்பர்ய அரிசி ரகங்கள் வெறும் உணவுகள் அல்ல; அவை மருத்துவ உணவுகள். `மணக்கத்தை, வாலான், கருங்குறுவை இந்த மூன்றும் ரணக்கஷ்டச் சில்விஷத்தைப் போக்கும்; குன்றி மணிச்சம்பா கொண்டால் அனிலமறும்’ என்று வகை வகையான பாரம்பர்ய அரிசி ரகங்களின் மருத்துவக் குணங்களைப் பட்டியல் இடுகிறது சித்த மருத்துவம். `நான் டயட்ல இருக்கேன்; சாதம் சாப்பிடறதே கிடையாது’ என்று பெருமையாகச் சொல்லத் தொடங்கியிருக்கும் ஒரு பெருங்கூட்டத்துக்காக நம் பாரம்பர்ய அரிசி ரகங்களின் சிறப்பை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 

பாரம்பர்ய அரிசி ரகங்கள்

இன்னும் சர்க்கரை நோய் அரிசியால்தான் என அரைகுறை அறிவில் பேசுவோருக்கு, `நல்ல மணிச் சம்பா, நாடுகின்ற நீரிழிவைக் கொல்லும்’ எனச் சர்க்கரை நோய்க்காரருக்கு என்றே ஒரு ரகத்தைச் சொல்கிறது நம் தமிழர் பாரம்பர்யம். குள்ளக்கார் அரிசியில் இட்லி, தோசையும் மாப்பிள்ளைச் சம்பாவில் மத்தியானச் சாப்பாடும் சாப்பிட்டுப் பாருங்கள்... அன்று முதல் பாரம்பர்ய அரிசிக்கு நீங்கள் அடிமையாகிப் போவீர்கள். 

பாரம்பர்ய அரிசி ரகங்கள் பல `லோ கிளைசெமிக்’ (Low Glycemic) தன்மைகொண்டவை. நிறைய நார்கொண்டவை. கறுப்பு, சிவப்பு நிறங்களைத் தரும் ஆந்தோசயனின் (Anthocyanin) எனும் நிறமிச் சத்துகொண்டவை. சீனாவில் சிவப்பரிசியில் இருந்து அதன் `லைகோபின்’ நிறமியைப் பிரித்தெடுத்து, புற்றுநோய்க்குத் துணை மருந்தாகத் தருகிறார்கள். பெல்ஜியத்தில் உடைத்த குருணைகளை உலகெங்கும் வாங்கி அதன் ஸ்டார்ச்சைப் பிரித்து எடுத்து ஏராளமான உணவியல் கூறுகளை உற்பத்தி செய்கிறார்கள். 

அரிசி சாதம்

ஆனால், இங்கே பிரச்னை என்னவென்றால், இன்றைய தலைமுறையினருக்கு எது நல்ல அரிசி... அதாவது, நம்முடைய பாரம்பர்ய அரிசி ரகங்களின் சிறப்புகள் என்னென்ன என்பதே தெரியாததுதான். 

இன்றைக்கு நாம் அரிசி என்று கொண்டாடும் பட்டை தீட்டி, சீவிச் சிங்காரித்த வெள்ளை அரிசி 40 ஆண்டுகளுக்கு முன்னர் வரை நம்மிடையே கிடையவே கிடையாது. அன்றைக்கு ஏறத்தாழ 2,00,000 அரிசி ரகங்கள் நம்மிடையே இருந்ததாக அரிசி விஞ்ஞானி ரிச்சாரியா சொல்வார். அப்போதைய பாரம்பர்ய அரிசி ரகங்கள் எல்லாம் ஏக்கருக்கு 0.81 டன் விளைச்சல் தருமாம். 

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தபோது, `உணவுப் பற்றாக்குறை ஏராளமாகப் பெருகுகிறது. வீரிய ஒட்டு ரகங்களை உருவாக்கித்தான் ஆக வேண்டும்’ என்று அதுவரை வேளாண் கலாசாரமாக இருந்ததை வேகவேகமாக வேளாண் தொழிலாக மாற்றின புதுத் தொழில்நுட்பங்கள். அப்போது இந்தோனேஷிய இனத்துக்கும் வியட்நாம் இனத்துக்கும் கலப்பினமாக முதன்முதலாக உருவாக்கப்பட்டதுதான் `ஐ.ஆர்.8’ ரக அரிசி. விளைச்சலில் ஏக்கருக்கு 2.5 டன்னுக்கு மேல் மகசூல் வந்தவுடன் உலகமே இந்த புதுப் படைப்பைக் கொண்டாடியது. அப்படியே கொஞ்ச நாட்களில் மேலும் மேலும் பல ரகங்கள் வந்தன. 

நெல்

நம்முடைய பாரம்பர்ய அரிசி ரகங்களை எல்லா விவசாயிகளும் கிட்டத்தட்ட மறந்தேவிட்டபோதுதான், அவர்களுக்கு ஒரு விஷயம் உறைத்தது. அதாவது, புதிய ரகங்களுக்குத் தேவைப்பட்ட ரசாயன உரச் செலவும், புதிது புதிதாக இந்தப் பயிரைத் தேடி வந்த பூச்சி, புழுக்களும் விவசாயத்தையே ஓட்டாண்டி ஆக்குவது புரிந்தது. அப்போது, `அடடா! பாரம்பர்ய அரிசி ரகங்களுக்கு இந்தப் பிரச்னையே இல்லையே என்று நினைத்தவர்கள் ஏராளம். ஆனால், அதற்குள்ளாக வணிகப்பிடிக்குள் பலமாகச் சிக்கிக்கொண்டது அரிசிச் சந்தை. 

கலப்பின அரிசி ரகங்கள் இன்று விஸ்வரூபம் எடுத்து விதவிதமான இனிஷியல்களில் உலகெங்கும் கொடிகட்டிப் பறக்கின்றன. வயிற்றுப் பசி போக்க இவை வந்தனவா, வணிகப் பசிக்கு வந்தனவா என்பது புரியாமலேயே அரிசி என்றால், இன்றைக்கு இருக்கும் அரிசிதான் என்று நாமும் நம்பத் தொடங்கிவிட்டோம். 

கதிர் அறுப்பு

நம்முடைய பாரம்பர்ய அரிசி ரகங்கள் பெற்றிருக்கும் மருத்துவக் குணங்கள் ஒரு பக்கம் என்றால், மண்ணுக்கேற்ற, அங்கு நிலவும் மழை, தட்பவெப்பத்துக்கேற்ற எல்லாச் சூழல்களுக்கும் ஈடுகொடுப்பதில் அவற்றுக்கு உள்ள இயல்பு இன்னொரு பக்கம் அசரவைக்கக்கூடியது. 

களர் நிலத்துக்கென்றே `களர்பாளை’ என ஓர் இனம். வயிற்றுக்கு மட்டும் அல்ல... நாம் வாழும் வீட்டுக்குக் கூரையாகவும் பயன்பட சிறப்பு வைக்கோலையும் சேர்த்துத் தரும் `குள்ளக்கார் ரகம்.’ ஏரியிலும் நீர் தங்கும் இடத்துக்கும் என்றே விளையும் `நீலஞ்சம்பா.’ சில நேரங்களில் படகில் சென்று அந்தப் பயிர்களில் நாம் கதிர் அறுத்திருக்கிறோம். 

லேசான தூறலுக்கே குடை சாய்ந்து, இன்றைய உழவனை மண்ணுக்குத் தள்ளும் உயர் விளைச்சல் ரகங்கள் அல்ல அவை. இன்னும் பூச்சி, புழு தாக்காத தமிழகத்தில் விளையும் ஏறத்தாழ 38 வகை ரகங்களை இந்தியப் பாரம்பர்ய அறிவியல் மையம் பட்டியல் இடுகிறது. 

வாரத்துக்கு இரண்டு மூன்று நாட்கள் பாரம்பர்ய அரிசியில் உணவு, மற்ற நாளில் சிறுதானியச் சோறு எனச் சாப்பிட்டால் பயமுறுத்தும் பல நோய்களின் இறுக்கமான பிடியில் இருந்து வேகமாக வெளிவர முடியும். 

இவை எங்கே கிடைக்கும்? ஊருக்கு ஊர் ஆங்காங்கே பாரம்பர்ய உணவு தானியக் கடைகள் உருவாகிவருகின்றன. கொஞ்சம் மெனக்கெட்டால் நிச்சயம் கண்டறிய முடியும்... கொஞ்சம் மெனக்கெடுங்களேன் நம் ஆரோக்கியத்துக்காக! 

தொகுப்பு: பாலு சத்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement