வெளியிடப்பட்ட நேரம்: 17:19 (08/02/2017)

கடைசி தொடர்பு:17:19 (08/02/2017)

தோல்வி பயத்திலிருந்து குழந்தைகளை மீட்டெடுக்கலாம் எளிதாக!

தோல்வி பயத்தில் மாணவன்

தோல்வி என்கிற சொல் இன்றைய மாணவர்கள் மத்தியில் அத்தனை அச்சுறுத்தல் தரும் வார்த்தையாக அமைந்திருக்கிறது. தேர்வு பயம், மதிப்பெண் பயம், வாழ்க்கை பயம் என எனென்னவோ பயம் அவர்களை சுழற்றியடிக்கிறது. பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் தோல்வி பயம் எப்படியிருக்கும் என்பதை சொல்கிறார் உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்.

*  மற்றவா்கள் என்ன நினைப்பார்கள் என்று அதிகம் கவலைப்படக்கூடும்.

* எதிர்கால லட்சியத்தை அடையும் திறமை தன்னிடம் உள்ளதா என சந்தேகம் முளைத்து விடும்.

* தன்னிடம் பிறர் ஆா்வம் காட்டாமல் போய்விடுவார்களோ/ஒதுக்கி விடுவார்களோ என்ற பயம் இருக்கும்.

* தனக்கு பிடித்தவா்களுக்கு (பெற்றோர்/ஆசிரியர்) ஏமாற்றம் கொடுத்து விடுவோமோ எனும் குற்றவுணர்வு மேலோங்கி இருக்கும்.

* பரிட்சையின் போது திடீா் தலைவலி, வயிற்றுவலி போன்ற உடல் ரீதியான அறிகுறிகள் வரக்கூடும்.

* எதையும் மிகச்சரியாக செய்ய வேண்டுமென்ற பதற்றம் இருக்கும், அதனாலேயே ஒரு வேலையை தள்ளிப் போடக்கூடும்.

இதை எப்படி தவிர்ப்பது?

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுக்கு உரியவர்களாக திகழ வேண்டும் என நினைப்பது முதல் தவறு. ஒருவர் பாராட்டினால் மட்டுமே நாம் சிறந்து விட முடியாது என்பதை உணர வேண்டும். முதலில் ஒரு மாணவன் தன்னை தானே நேசிக்கவும், தன்னுடைய குறைகளை அறிந்து அதை எண்ணி கவலைகொள்ளாமல் அதை சரி செய்ய வழி தேடுவது அவசியம். அதைவிட்டுவிட்டு மற்றவர்களை சந்தோஷப்படுத்த எண்ணினால் நம் குறைகள் மறையாது.

‘மார்க்‘ ஒன்று மட்டுமே, மாணவனின் எதிர்காலத்தை நிர்ணயித்து விடாது, அது அடையாளத்தின் ஒரு பகுதி மட்டுமே என்பதை பெற்றோர் உணர வேண்டும். மேலும், கல்வியின் மகத்துவத்தை கருதி அதை ரசித்து படித்திட மாணவர்களுக்கு பெற்றோர்கள் உதவ வேண்டுமே ஒழிய, மதிப்பெண்களுக்காக படிப்பது என்பது மிகவும் தவறு. அப்படிச் செய்யும் பட்சத்தில், ஒருவா் தங்கள் வாழ்வில் தனித்து சிறந்து விளங்க முடியாது.

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எப்போதும் மாணவ மாணவிகளுக்கு மற்றும் ஆசிரியரின் எதிர்பார்ப்பு ஒரு மாணவனுக்கு ஊக்கத்தை அளிக்க வேண்டுமே ஒழிய அழுத்தத்தை ஒரு போதும் ஏற்படுத்தி விடக்கூடாது. நல்ல மார்க் வாங்குவது என்பது மகத்துவம் வாய்ந்த மனித பிறவியில் இருக்கக்கூடிய பல்வேறு திறன்களின் ஒரே ஒரு பகுதியே என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

- எம்.மல்லிகார்ஜுனா

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்