தனிமையைத் தவிர்ப்பது எப்படி? #HealthTips

தனிமை வரமா, சாபமா? உறவுகளைப் பிரிந்து வாழ்பவர்களையும், பிள்ளைகளைப் பிரிந்து முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களையும் விசாரித்தால், அது எத்தனைக் கொடூரமானது என்பது தெரியும். `தனிமை... தவம்’ என வேண்டுமானால் சொல்லிப் பார்த்துக்கொள்ளலாம். அது வேலைக்காகாது; தனிமையில் இனிமை காண முடியாது என்பதே நிஜம். ஒரு மனிதனின் ஆற்றலைப் போக்கி, அவனைப் பலவீனமாக்கும் சக்தி இதற்கு உண்டு. எனவே தனிமை தவிர்ப்போம் வாருங்கள்!

தனிமை தவிர்

சிலர் தாமாகவே தனிமையில் ஆழ்ந்துவிடுவார்கள். அதற்கு இன்றைய வாழ்க்கைச் சூழல், பணிச்சுமை, குடும்பப் பிரச்னைகள், சமூகப் பிரச்னைகள் எனப் பல காரணங்கள் உள்ளன. அப்படித் தனிமைப்படும் மனிதர்களின் வகைகள், தனிமையைத் தவிர்ப்பது எப்படி என்பதையெல்லாம் விளக்குகிறார் மனநல மருத்துவர் ராமானுஜம்...   

தனிமையை அடிப்படையாகக்கொண்டு மனிதர்களை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம். ஒரு வகையினர் அகத் தனிமையாலும், மற்றொரு வகையினர் புறத் தனிமையாலும் பாதிக்கப்பட்டவர்களாக வாழ்ந்துவருகிறார்கள்.

அகத் தனிமையினரும் புறத் தனிமையினரும்!

ஸ்கூல், காலேஜ், பிறகு வேலை என்று வாழ்க்கையில் பல்வேறு பரிணாமங்களை எடுத்தாலும்கூட அகத் தனிமையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுடன் ஒட்டாமலேயே வாழ்க்கையை நடத்துபவர்களாக இருப்பார்கள். இவர்கள், வெறுமையை அதிகமாக உணர்வதால், மனச்சோர்வுடன் (Depression) காணப்படுவார்கள். மற்றவர்களுடன் அதிகம் பழகுவதைத் தவிர்ப்பார்கள்.

அகத் தனிமையினருக்கு நேர் எதிரான வாழ்க்கையை நடத்துபவர்கள் புறத் தனிமையினர். நண்பர்கள், உறவுகள் என அனைவரும் வேண்டும் என நினைப்பார்கள். இவர்களின் பெரிய குறையே பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ எனும் கேள்வியுடனேயே வாழ்க்கையை நகர்த்துவதுதான். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், பிறரின் சொல்லைக் கேட்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பவர்கள்.

இவர்களைத் தவிர நோயாளிகளும், ஆளுமைப் பண்பு உள்ளொடுங்கியவர்களும், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களும் தனிமையை அதிகமாக விரும்புபவர்களாக இருக்கிறார்கள்.

இப்படித் தனிமை உணர்வு தொடரும்போது மனச்சோர்வு தொடங்கி மனச்சிதைவு (Schizoid) வரை பல்வேறு உள நோய்களுக்கு (Psychosis) உள்ளாக நேரிடும். இது தனிமனித வாழ்க்கையில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் காரணமாகிவிடும்.

தனிமையைத் தவிர்க்க சில வழிமுறைகள்!

* ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் கிடைக்கும் மெய்நிகர் உறவுகளுக்குப் பதிலாக, உண்மையிலேயே நம் நலம் விரும்பும் உறவுகளுடன் நேரத்தைச் செலவிடுங்கள்.

* எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும்போது உடனடியாக அவற்றைத் தவிர்த்துவிட்டு, நேர்மறையான எண்ணங்களைக் கொண்டு வருவதன் மூலம் தாழ்வு மனப்பான்மையைத் தவிடுபொடியாக்கலாம்.

* பேசும்போது பிறரின் கண்களைப் பார்த்துப் பேசுவதன் (Eye Contact) மூலம் தயக்கங்களைத் தவிர்த்து, உறவுகளை மேம்படுத்தி, தனிமையைத் துரத்த முடியும்.

* மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்ப்பதைத் தவிர்த்துவிடுங்கள். அவர்களின் குறைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்.

தனிமை

* தனிமை துரத்தும்போது, சில மனப்பயிற்சிகளில் ஈடுபடலாம். நீங்கள் எதிர்பார்ப்பவற்றை மனக் காட்சியாக (கற்பனை) உருவாக்கிப் பாருங்கள். நல்ல பலன் தரும். 

* நாமெல்லாம் சமூக விலங்குகள். எனவே, சமூகத்துடனான தொடர்பை மேம்படுத்திக்கொள்ள சமூக சேவை, சமூகக் காரியங்கள் மற்றும் சமூகக் குழுக்களுடன் இணைந்து செயல்படுவது ஆகியவற்றில் நம்மை ஈடுப்படுத்திக்கொள்ளலாம்.

* தினமும் உங்களுக்காக சில மணி நேரங்களை ஒதுக்குங்கள். அது உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் இருப்பதாக இருக்கட்டும். வீட்டில் உள்ளவர்களுடன் பயனுள்ள வழியில் அந்த நேரத்தைச் செலவழியுங்கள்.

* குழு விளையாட்டுகளில் கலந்துகொள்ளுங்கள். விளையாட்டு நம்முடைய ஈகோவை விரட்டி, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை அதிகரிக்கச் செய்யும்.

இவை தவிர, தனிமையில் இருந்து விடுபட நல்ல புத்தகங்கள், இலக்கியங்களை வாசியுங்கள். மனதுக்கு உற்சாகம் அளிக்கும் நல்ல இசையைக் கேளுங்கள். முடிந்தால், முறைப்படி பாடவோ, இசைக்கருவி மீட்டும் கலையையோ கற்றுக்கொள்ளுங்கள்.

- செ.ராஜன், மாணவப் பத்திரிகையாளர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!