கறிவேப்பிலையை இப்படிச் சாப்பிட்டால் முடி வளரும்..! #HairTips

முடி அழகு முக்கால் அழகு என்பது முதுமொழி. எண் ஜான் உடம்புக்கு சிரசே பிரதானம் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட தலைக்கு அழகு சேர்ப்பது முடிதான். தலைமுடியைப் பேணிக் காப்பதற்கும், சிறப்பான முறையில் பராமரிப்பதற்கும் தலைமுடி செழுமையாக வளர்வதற்கும் பெரிதும் உதவுகிறது கறிவேப்பிலை. அதன் சிறப்புகள் பற்றியும், மூலிகை குணங்கள் பற்றியும் பார்ப்போம்.

கறிவேப்பிலை

 

முறையா கோயங்கி (Murraya koenigii) என்ற தாவரவியல் பெயர் கொண்ட இது, சிறு மரம் (அல்லது) பெரும் செடியாக வளரக்கூடியது. வேம்பில் நில வேம்பு, மர வேம்பு, நாட்டு வேம்பு, நீர் வேம்பு, கரி வேம்பு எனப் பல வகைகள் உண்டு. இந்த கரி வேம்புதான் கறிவேப்பிலை என்று அழைக்கப்படுகின்றது.

மருத்துவப் பயன்கள் 

கறிவேப்பிலை இளநரையைத் தடுக்கும் ஓர் அற்புதமான மருந்தாகும். மேலும் இதன் சாறு கண்களைப் பாதுகாத்து, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்கும். ஊட்டச்சத்து குறைப்பாட்டால் முடி உதிரும் பிரச்னை சரியாகும்.

இதன் சாற்றுடன் சிறிதளவு எலுமிச்சைச் சாறும் தேவையான அளவு சர்க்கரையும் கலந்து அருந்திவர, அஜீரணத்தால் ஏற்படுகின்ற வாந்தி முதலியவைகளுக்கு பலன் தரும்.

நிழலில் உலர்த்திய கறிவேப்பிலையுடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றை பொடியாக்கி, சூடான சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட, முடி வளரும்.

கறிவேப்பிலை டீ

இரண்டு கிளாஸ் தண்ணீரில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை முதல் நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் காலை இதனுடன் சிறிதளவு சீரகம், இந்துப்பு சேர்த்து  கொதிக்கவைத்து, வடிகட்டி குடித்து வர முடி வளரும். இளநரை சரியாகும்.

நெல்லி-கறிவேப்பிலை ஜூஸ்

மூன்று நெல்லிக்காயை எடுத்து, கொட்டை நீக்கி, கைப்பிடி கறிவேப்பிலையுடன் சேர்த்து அரைத்து, வடிகட்டி குடித்து வரலாம். வலுவான, அடர்த்தியான கூந்தலாக மாறும்.

கறிவேப்பிலை சாதம்

தேவையான கறிவேப்பிலை, உளுந்து, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை மிதமான தீயில் வதக்கி, பொடி செய்துகொள்ள வேண்டும். சூடான வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, சிறிதளவு கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு, தேவையான அளவு அரைத்த பொடியை சேர்த்து, அதனுடன் வடித்த சாதத்தையும் சேர்த்து கிளறி கறிவேப்பிலை சாதம் சாப்பிட்டு வரலாம். 

கறிவேப்பிலை துவையல்

தலா ஒரு டீஸ்பூன் உளுந்து, கடலைப்பருப்பை வாணலியில்  வறுத்து எடுக்கவும். சிறிது எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, இரண்டு சின்ன வெங்காயம், காரத்துக்கு ஏற்ற காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். மிக்ஸியில் இவற்றை சேர்த்து, உப்பு, தேங்காய், சிறிதளவு புளி சேர்த்து கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். துவையல் தயார். வாரம் இருமுறை சாப்பிட்டுவர முடி உறுதியாகும். முடி உதிர்தல் பிரச்னை தடுக்கப்படும்.

கருமையான கூந்தல்

முடி வளர

இதன் இலைகளை அரைத்து அரைநெல்லிக்காய் அளவு உருட்டி 40 நாள்கள் தொடர்ந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, முடி நன்றாக வளரும்.

அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்களுக்கு

கறிவேப்பிலையை அரைத்து அடை போல் தட்டி சில்வர் அல்லது பிளாஸ்டிக் தட்டில் காய வைக்கவேண்டும். நன்றாகக் காய்ந்த பிறகு தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, தொடர்ந்து தலைக்குத் தேய்த்து வர முடி செழுமையாக வளரும்.

உடல் குளிர்ச்சி உள்ளவர்களுக்கு

கறிவேப்பிலையை காய்ச்சி தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தலையில் தொடர்ந்து தேய்த்து வர முடி நன்கு வளரும்.

நரைமுடி உள்ளவர்களுக்கு

கறிவேப்பிலை இலையில் சிறிது வெந்தயம் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். அவ்வப்போது இந்தப் பொடியைத் தலைக்குத் தேய்த்து வந்தால், நரை பிரச்னைகள் நீங்கும்.

பொடுகு பிரச்னைக்கு

கறிவேப்பிலையுடன் இரண்டு மிளகு சேர்த்து அரைத்து, தேங்காய் எண்ணெயுடன் கலந்து தொடர்ந்து பயன்படுத்திவந்தால், தலையில் உள்ள பொடுகு குணமாவதோடு முடியும் செழித்து வளரும்.

ஜெய வெங்கடேஷ், சித்த மருத்துவர் 

- வெ.வித்யா காயத்ரி (மாணவப் பத்திரிகையாளர்)
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!