Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எண்ணெய்... அஞ்சவேண்டிய சமாசாரமா? நலம் நல்லது-70 #DailyHealthDose

எண்ணெய்

எண்ணெய்… இன்றைக்கு உயிர்ப் பயம் ஏற்படுத்தும் ஒரு பொருளாகிவிட்டது. ஒரு நாளைக்கு ஒருவர் இத்தனை டீஸ்பூனுக்கு மேல்  எடுத்துக்கொள்ளக் கூடாது என்கிற கட்டுப்பாடுகள் எல்லாம் வந்துவிட்டன. மீறி எடுத்தால், அந்த நோய் தாக்கும், இந்த நோய் நம்மைப் பாதிக்கும் இதயக்கோளாறுகள் வரும்… என்றெல்லாம் பட்டியல் போட ஆரம்பித்துவிட்டார்கள் மருத்துவர்கள். அந்த அளவுக்கு எண்ணெயைப் பார்த்து நாம் பயப்பட வேண்டியது அவசியம்தானா?

இதற்குக் காரணம் வேறு. நம் பாரம்பர்ய எண்ணெய்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் அளவுக்கு வளர்ந்துவிட்டது ஆலிவ் எண்ணெய் வியாபாரம். ‘அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் உடல்பருமன் உள்ளவர்களே இல்லை. காரணம், அவர்கள் பயன்படுத்தும் ஆலிவ் ஆயில்தான்’ என வர்த்தகக் காரணம் சொல்லப்படுகிறது. உண்மையில், ஆலிவ் ஆயில் நம் மரபணுக்களுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாதது. தேங்காயும் அதன் எண்ணெயும் நம் இதயத்துக்கு பலம் தரும் என்பதை நாம் மறந்துவிட்டோம். தாவர எண்ணெய் எதிலும் கொலஸ்ட்ரால் இல்லை என்பதை நினைவில்கொள்ள நாம் தவறிவிட்டோம். இதுதான் வெளிநாட்டு எண்ணெய்கள் நம்மை ஆதிக்கம் செலுத்தக் காரணம்.
 

எண்ணெய்

 

தொல்காப்பியக் காலம் முதல் நாம் பயன்படுத்தி வந்த எண்ணெய் வித்து, எள். ‘கன்னல் இலட்டுவத்தோடு சீடை காரெள்ளின் உண்டை’ எனக் குழந்தைக்கு உணவாகப் பெரியாழ்வார் சொன்னதைத்தான், ‘இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு’ என்று சொன்னது சித்த மருத்துவம். அந்த எள்ளில் இருந்து பிரித்தெடுத்த நல்லெண்ணெய்தான், ரொம்பக் காலமாக நாம் பயன்படுத்திய சமையல் எண்ணெய். கிட்டத்தட்ட 47 சதவிகிதம் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம்கொண்ட இந்த நல்லெண்ணெய், வெறும் எண்ணெய் அல்ல... மருந்து!

எந்த எண்ணெயில் என்ன இருக்கிறது?

* நல்லெண்ணெய், கருப்பைக்கு மட்டும் அல்ல. உடலுக்கும் உறுதி தரும்; உறக்கம் தரும்; ஊக்கம் தரும்; நோய் எதிர்ப்பாற்றல் தரும். அதில் உள்ள கனிமங்களும் செசாமின் (Sesamin), லிக்னைன் முதலான நுண்பொருட்களும், கிருமியில் இருந்து புற்றுநோய் வரை விரட்டும் என்கின்றன இன்றைய ஆய்வுகள்.

* `அதிகக் கொழுப்பு உள்ளது’ எனச் சொல்லப்பட்டு ஓரங்கட்டப்பட்ட அமிழ்தம், தேங்காய் எண்ணெய். தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகொண்ட லாரிக் அமிலம், இயற்கையாகவே தேங்காய் எண்ணெயில் இருக்கிறது. இதன் மகிமையை உணர்ந்து, இதில் இருந்து `மோனோலாரின்’ (Monolaurin) எனும் பொருளைப் பிரித்து எடுத்து, அதற்கும் காப்புரிமை பெற்று, மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்தாக விற்கின்றனர் வணிகர்கள். ஆனால், நம் மருத்துவர்களோ சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்க்கு வக்காலத்து வாங்குகின்றனர்.

 

எண்ணெய்

 

* நெல்லின் சத்தான பகுதியான தவிட்டில் இருந்து பெறப்படும் தவிட்டு எண்ணெய் நல்ல விஷயங்கள் பலகொண்டது. ஜப்பானியரில் பெரும்பான்மையானவர்கள் இன்றும் உபயோகிப்பது தவிட்டு எண்ணெயைத்தான். தேவையான அளவுக்கு நல்ல கொழுப்பு வகையறாக்களுடன், இதயத்துக்கு நன்மை பயக்கும் ஆன்டிஆக்சிடென்ட்டுகள்கொண்ட இது உள்ளூர் சரக்கு. ஆனாலும், பெரும் உயரத்துக்கு இதனால் வர முடியவில்லை. கசக்கிப் பிழியாமல், `ஹெக்சேன்’ எனும் பெட்ரோ கெமிக்கல் வஸ்துவில் கரைத்து, எண்ணெயைப் பிரித்து, அதன் இயல்பான மணம், நிறம், அடர்த்தி அத்தனையையும், கிட்டத்தட்ட 450 டிகிரிக்கும் மேலான சூட்டில் பல்வேறு இயந்திரங்களில் பயணிக்கவைத்து புண்ணாகிவரும் ரீஃபைண்டு ஆயில் வகையறாக்கள்தான் விற்பனையில் பின்னி எடுக்கின்றன.

காரணம் என்ன?

எண்ணெய் ஒரு மாபெரும் சந்தைப் பொருள். பல நூறு ஆண்டுகளைக் கடந்த அதன் பாரம்பர்ய வகைகள் இன்றைக்கு நொண்டி அடிக்கக் காரணம், எண்ணெயைச் சுற்றி இருக்கும் சந்தை அரசியல்தான். `ஆலிவ் ஆயில் ஆரோக்கியமானது’ என்கிறார்கள். ஆரோக்கியமானதுதான். ஆனால், அதன் விலை என்ன; நம் ஊர் நல்லெண்ணெய்யின் விலை என்ன? நம் ஊர் செக்கில் ஆட்டிய எண்ணெயே ஆரோக்கியமாக இருக்கும்போது, நாம் ஏன் வெளிநாட்டு ஆலிவ் ஆயிலை இறக்குமதி செய்து 10 மடங்கு விலை கொடுத்துச் சாப்பிட வேண்டும்? இதுதான் கேள்வி.

`வலுவான இதயத்துக்குக் கொஞ்சம் தவிட்டு எண்ணெய், கொஞ்சம் நல்லெண்ணெய், கொஞ்சம் தேங்காய் எண்ணெய் கலந்து அளவுடன் கொஞ்சமாகப் பயன்படுத்துங்கள்’ என்கிறார்கள் இதய நோய் வல்லுநர்கள். உடலுக்குத் தேவையான நிறைவுற்ற கொழுப்பு அமிலம், ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம், பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம், ஒமேகா-3, ஒமேகா-6 எல்லாவற்றையும் இந்த எண்ணெய் வகைகளே உங்களுக்குத் தந்துவிடும்.

எண்ணெய்

 

சில குறிப்புகள்...

* அதிக வெப்பத்தில் கருகும் தன்மைகொண்ட தவிட்டு, நல்லெண்ணெய் ஆகியவற்றை நீண்ட நேரம் வறுக்கும் சமயத்தில் பயன்படுத்துங்கள்.

* குறைந்த புகை எண் கொண்ட (Low smoke point) செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை மிளகாய்ப் பொடிக்கு, சாலட் சீசனிங்குக்கு ஊற்றிச் சாப்பிடப் பயன்படுத்துங்கள்.

* எந்த எண்ணெயாக இருந்தாலும், அளவோடு பயன்படுத்துங்கள். அதேபோல், வறுக்கும்போது, எவ்வளவு நேரம் வறுக்கிறீர்களோ, அந்த அளவுக்குக் கொழுப்பு அமிலம் அதிகம் உருவாகி உங்கள் ரத்தம், இதயம் எல்லாவற்றையும் கெடுக்கும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

தொகுப்பு : பாலு சத்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement