தினை குலோப் ஜாமூன்... வரகு முறுக்கு... கருப்பட்டி மிட்டாய்... பலம் தரும் நொறுக்குத் தீனிகள்..! #GoodFood

இன்றைய தலைமுறையினரின் பிடித்தமான ஸ்நாக்ஸ்.... பேக்கரியிலும், பன்னாட்டு உணவங்கங்களிலும், பெரிய ஹோட்டல்களிலும் கிடைக்கும் பீட்சா, பர்கர் மற்றும் துரித உணவுகளே. நவீன கலாசாரம், உலகமயம் எல்லாம் சேர்ந்து புதிய உணவுப் பழக்கங்களுக்கு நம்மை ஆளாக்கிவிட்டன. இவற்றால், பல்வேறு உடல்ரீதியான பிரச்னைகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம் என்பதே மறுக்க முடியாத நிஜம். நம் பழந்தமிழர் பண்பாட்டிலும் நொறுக்குத்தீனிகளுக்கு மிக முக்கிய இடம் உண்டு. அவற்றிலும் சிறுதானியங்களே முக்கியப் பங்கு வகித்துள்ளன. இந்த உண்மையைப் பல்வேறு சங்க இலக்கியங்களின் மூலமாக நம்மால் அறிய முடியும். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குபவை சிறுதானியத்தில் தயாரான பாரம்பர்ய நொறுக்குத்தீனிகள்.

பலரும் பாரம்பர்யத்துக்குத் திரும்பி, இயற்கை வேளாண்மையில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கும் காலம் இது. சிறுதானிய உணவுகளைத் தேடி வாங்கிப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது. வழக்கமான, நம் உடலுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்துவிட்டு, ஆரோக்கியமான பாரம்பர்ய உணவு வகைகளுக்குத் திரும்பலாம். அப்படி சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட சில நொறுக்குத்தீனிகள் தரும் பிரமாதப் பலன்களைப் பார்ப்போம்...

குதிரைவாலி அதிரசம் 

பயன்படும் உணவுப் பொருட்கள்: 
குதிரைவாலி அரிசி, பச்சரிசி மாவு, வெல்லம், இஞ்சி, ஏலக்காய், கடலை எண்ணெய்.

பலன்கள்:
குதிரைவாலி, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்; இதயத் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும். இதில் உள்ள இரும்புச்சத்து, ரத்தசோகை வராமல் தடுக்கவும், நார்ச்சத்து மலச்சிக்கலைத் தவிர்க்கவும் உதவும். அதோடு, எலும்புக்கு வலு சேர்க்கும். மேலும், வெல்லத்தோடு இஞ்சி சேர்வதால் வாதக் கோளாறு நீங்கி, உடலுக்கு பலம் கூடும். பொதுவாக, ஏலக்காய் கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இது சிறுநீரைப் பெருக்கும்; மணம், சுவை கூட்டும். 

நொறுக்குத் தீனிகள் , குதிரைவாலி அதிரசம் 

தினை சேவு
பயன்படும் உணவுப் பொருட்கள்:

தினை, கடலை மாவு, சீரகம், எள், மிளகாய் தூள், கடலை எண்ணெய். 

பலன்கள்: 
தினைக்கு உடலை வலுவாக்கும், வாயுக் கோளாறைப் போக்கும் தன்மை உண்டு. மேலும், பசியை உண்டாக்கும் திறன் இதற்கு இருக்கிறது. மற்ற தானியங்களைவிட தினையில் இரும்புச்சத்து இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. கடலை மாவு, புரதச்சத்து நிறைந்தது. சீரகம், உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்; சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்க உதவும். 100 கிராம் எள், 573 கலோரி சக்தியைக் கொடுக்கும். 100 கிராமில் 18 கிராம் புரதச்சத்தும் அடங்கியிருக்கிறது. ஒரு கப் பாலில் உள்ள கால்சியம் சத்து, ஒரு கைப்பிடி எள்ளில் உள்ளது. 

நொறுக்குத்தீனி , தினை சேவு

கம்பு-மிளகு சேவு

பயன்படும் உணவுப் பொருட்கள்:
கம்பு, கடலை மாவு, மிளகு, எள், சீரகம், கடலை எண்ணெய்.

பலன்கள்: 
சர்க்கரைநோயைக் கட்டுபடுத்தவும், உடல்பருமனைக் குறைக்கவும் கம்பு பயன்படுகிறது. அரிசியைக் காட்டிலும் கம்பில் நைட்ரஜன் சத்து, மாவுச் சத்து அதிகம் உள்ளது. வயிற்றுப் புண்களை ஆற்றும் வல்லமை பெற்றது. ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். ஆசன வாயில் ஏற்படும் சூட்டைத் தணிக்கக்கூடியது. மிளகில் மாங்கனீஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி, கே, ஆகிய சத்துகள் நிறைந்துள்ளன. நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. சளி, ஜலதோஷம், தொண்டை வலி போன்றவற்றைப் போக்கக்கூடிய சக்தி மிளகுக்கு உண்டு. 

 

தினை குலோப் ஜாமூன்

பயன்படும் உணவுப் பொருட்கள்:
தினை, நாட்டுப் பசுவின் பால், வெல்லப் பாகு (இயற்கையான முறையில் தயாரானது), தேங்காய் எண்ணெய். 

பலன்கள்:
தினை உடலை வலுவாக்கும்: வாயுக் கோளாறைப் போக்கும்; பசியை அதிகரிக்கும். மற்ற தானியங்களைவிட இதில் இரும்புச்சத்து இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. நாட்டுப் பசுவின் பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. பாலில் உள்ள கால்சியம் சத்து, எலும்புகளுக்கு வலு சேர்க்கும். வெல்லம் உடல் குளிர்ச்சியடைய உதவும். இதில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இரும்புச்சத்தும் அதிகமாக உள்ளது. தேங்காய் எண்ணெய் கலந்த உணவைச் சாப்பிட்டுவந்தால், தொப்பையைக் குறைக்கலாம். இன்சுலின் அளவை

நொறுக்குத்தீனி , தினை குலோப் ஜாமூன்

வரகு முறுக்கு

பயன்படும் உணவுப் பொருட்கள்:
வரகு அரிசி, பச்சரிசி மாவு, உளுந்தம் பருப்பு, சீரகம், எள், கடலை எண்ணெய். 

பலன்கள்:
அரிசி, கோதுமையைவிட வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச் சத்து குறைவாக இருப்பதால், இது ஆரோக்கியத்துக்கு நல்லது. வரகில் புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியவை இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிறைந்துள்ளன. 100 கிராம் வரகில் 8.3 கிராம் புரதம், 9 கிராம் நார்ச்சத்து, 0.5 மி.கி இரும்புச்சத்து, 27 மி.கி சுண்ணாம்புச் சத்து ஆகியவை உள்ளன. உளுந்தம் பருப்பு உடலைத் தூய்மைப்படுத்தி, உடலில் உள்ள நச்சுப்பொருட்களை அழிக்கும்; செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், வயிற்றுப்போக்கைத் தடுக்கவும் உதவும். உளுந்து ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கச் செய்யும். 

நொறுக்குத்தீனி,வரகு முறுக்கு

கேழ்வரகு மிக்சர்
பயன்படும் உணவுப் பொருட்கள்:

கேழ்வரகு, நிலக்கடலை, துவரம் பருப்பு, அவல், சீரகம், மிளகாய் தூள், தேங்காய் எண்ணெய்.

பலன்கள்: 
கேழ்வரகில் உடலுக்கு சக்தியளிக்கக்கூடிய கார்போஹைட்ரேட் பொருட்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. புரதம் 7.7%, நார்ச்சத்து 3.6% உள்ளன. 100 கிராம் கேழ்வரகில் 336 கலோரிகள் உடலுக்கு கிடைக்கிறது. கால்சியமும் இரும்புச்சத்தும் அதிக அளவில் உள்ளன. இதில் உள்ள அமினோ அமிலம், திசுக்களின் சீரான செயல்பாட்டுக்கு உதவிசெய்து, தசைகளுக்கு வலுவூட்டுகிறது. நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைந்துள்ளது. இதில் ரெஸ்வரட்ரால் (Resveratrol) என்ற ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்துள்ளது. இது, இதயத்தைக் காக்கும்; இளமையைப் பராமரிக்க உதவும். இதிலுள்ள வைட்டமின்கள் மூளை வளர்ச்சிக்கும் ஞாபகசக்திக்கும் பயனளிக்கும். கொழுப்பைக் குறைக்கவும் நிலக்கடலை பயன்படுகிறது. 

நொறுக்குத்தீனி

சிவப்பரிசி-பயறு சேவு 

பயன்படும் உணவுப் பொருட்கள்:
சிவப்பரிசி, வறுத்த பயறு, சீரகம், எள், கடலை எண்ணெய்.

பலன்கள்:
எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி1, பி3, பி6 ஆகிய வைட்டமின்களும், மாங்கனீஸ், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்களும், மிகுதியான நார்ச்சத்தும் சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன. சிவப்பரிசியில் மோனாகோலின் கே (Monacolin K) என்னும் வேதிப்பொருள் அடங்கியுள்ளது. இது, ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. ஆஸ்துமா மற்றும் பல அலர்ஜிகளுக்கு சிவப்பரிசி மிகவும் உகந்தது. பயறு வகைகள் வறுத்த நிலையில் இங்கு சங்கமித்திருப்பதால் புரதத்துக்குப் பஞ்சம் இல்லை. கடலை எண்ணெய் அதிக ஆற்றலைத் தரக்கூடியது. நல்ல கொழுப்பு உடலில் சேரவும், கெட்ட கொழுப்பை நீக்கவும் உதவி செய்கிறது. இதில் வைட்டமின் இ மிகுந்துள்ளது. இதில் உள்ள பீட்டா சிட்டோஸ்டிரால் (Beta Sitosterol) எனும் வேதிப்பொருள் கொலஸ்ட்ராலை உறிஞ்சும் திறன்கொண்டது.  

 

சோள ரிப்பன் பக்கோடா

பயன்படும் உணவுப் பொருட்கள்:
சோளம், கடலை மாவு, சீரகம், எள், கடலை எண்ணெய்.

பலன்கள்:
100 கிராம் சோளத்தில் 10.4 கிராம் புரதம் உள்ளதால், இது எலும்புக்கும் பல்லுக்கும் வலு சேர்க்கும். கண் குறைபாடுகளை சீர் செய்யும் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், ரத்தசோகை பிரச்னையில் இருந்து காப்பாற்றும். 100 கிராம் எள், 573 கலோரி சக்தியை கொடுக்கும். 100 கிராம் எள்ளில் 18 கிராம் புரதச்சத்தும் அடங்கியிருக்கிறது. ஒரு கப் பாலில் உள்ள கால்சியம் சத்து, ஒரு கைப்பிடி எள்ளில் உள்ளது. 

 

கம்பு-புதினா சேவு 

பயன்படும் உணவுப் பொருட்கள்:
கம்பு, கடலை மாவு, புதினா, சீரகம், எள், மிளகாய் தூள், கடலை எண்ணெய்.

பலன்கள்:
சர்க்கரைநோயைக் கட்டுபடுத்தவும், உடல்பருமனைக் குறைக்கவும் கம்பு பயன்படும். அரிசியைவிட, கம்பில் நைட்ரஜன் சத்து, மாவுச்சத்து அதிகம். வயிற்றுப் புண்களை ஆற்றும் வல்லமை பெற்றது. ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். 100 கிராமில் 18 கிராம் புரதசத்து அடங்கியிருக்கிறது. ஒரு கப் பாலில் உள்ள கால்சியம் சத்து, ஒரு கைப்பிடி எள்ளில் உள்ளது. சீரகம் உடலுக்குக் குளிர்ச்சி தரும்; உடலைப் பளபளப்பாக வைத்திருக்கும். புதினாவில் நீர்ச்சத்து, புரதம், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை இருப்பதால், உடல் வலிமை பெற்று ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இருமல், ரத்தசோகை, இளைப்பு நோயையும் புதினா கட்டுப்படுத்தும். பல் சம்மந்தமான நோய்களையும் குணப்படுத்த உதவும். இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அருமருந்து.  

 

கேழ்வரகு-கருப்பட்டி சேவு 
பயன்படும் உணவுப் பொருட்கள்:

கேழ்வரகு, கருப்பட்டி, சீரகம், எள், ஓமம், கடலை மாவு, கடலை எண்ணெய். 

பலன்கள்:
கேழ்வரகில் உடலுக்குச் சக்தியளிக்கக்கூடிய கார்போஹைட்ரேட் பொருட்கள் அதிகம் உள்ளன. புரதம் 7.7%, நார்ச்சத்து 3.6% உள்ளன. 100 கிராம் கேழ்வரகில், 336 கலோரிகள் ஆற்றல் உடலுக்குக் கிடைக்கிறது. கால்சியமும் இரும்புச்சத்தும் அதிக அளவில் உள்ளன. இதில் உள்ள அமினோ அமிலம், திசுக்களின் சீரானச் செயல்பாட்டுக்கு உதவிசெய்து, தசைகளுக்கு வலுவூட்டுகிறது. கருப்பட்டி, ரத்தத்தைச் சுத்திகரித்து உடலுக்குச் சுறுசுறுப்பைக் கொடுக்கும். இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், ரத்தசோகை வராமல் தடுக்கும். கருப்பட்டியில் அதிக கால்சியம் உள்ளது. சர்க்கரைக்குப் பதிலாகக் கருப்பட்டியைச் சேர்த்தால், உடல் வலிமை பெறுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அடிக்கடி சீறுநீர் போவது குறையும். கருப்பட்டியுடன் ஓமம் சேரும்போது வாயுத் தொல்லை நீங்கும். 

நொறுக்குத்தீனி,கேழ்வரகு-கருப்பட்டி சேவு 

 

கருப்பட்டி மிட்டாய்
பயன்படும் உணவுப் பொருட்கள்:

கருப்பட்டி, இட்லி அரிசி, உளுந்தம் பருப்பு, சுக்கு, ஏலக்காய் தூள். 

பலன்கள்:
கருப்பட்டி, ரத்தத்தைச் சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் ரத்தசோகை வராமல் தடுக்கும். கருப்பட்டியில் அதிக கால்சியம் உள்ளது. சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டியை சேர்த்தால் உடல் வலிமை பெறுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அடிக்கடி சீறுநீர் போவது குறையும். கருப்பட்டியை சுக்குடன் சேர்த்துச் சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஏலக்காய், கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும்கொண்டது. இது சிறுநீரைப் பெருக்கும். மணம், சுவை கூட்டும் தன்மை ஏலக்காய்க்கு மிகுதியாக உண்டு. உளுந்தம் பருப்பு, உடலைத் தூய்மைப்படுத்தி, உடலில் உள்ள நச்சுப்பொருட்களை அழிக்கும். செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், வயிற்றுப்போக்கைத் தடுக்கவும் உதவும்.

பீட்சா, பர்கருக்கு விடைகொடுப்போம்... பாரம்பர்ய நொறுக்குத்தீனிகளை இருகரம் கூப்பி வரவேற்போம்!

- உ.சுதர்சன் காந்தி (மாணவப் பத்திரிகையாளர்)
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!