காதல்... பரிசுப் பொருட்களால் மட்டும் முழுமை பெறுவதில்லை! நலம் நல்லது-71 #DailyHealthDose | The love not only fulfill with gifts

வெளியிடப்பட்ட நேரம்: 08:06 (14/02/2017)

கடைசி தொடர்பு:08:05 (14/02/2017)

காதல்... பரிசுப் பொருட்களால் மட்டும் முழுமை பெறுவதில்லை! நலம் நல்லது-71 #DailyHealthDose

காதல்... நலம் நல்லது

காதலிக்கிறவர்களுக்கு முக்கியமோ இல்லையோ, வர்த்தகர்களுக்கு மிக முக்கியமான ஒன்றாகிவிட்டது `வாலண்டைன்ஸ் டே.’ காதலர் தினத்துக்காகவே பல நாடுகள் பூக்களின் தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்காக, வேறு நாடுகளில் இருந்து பூக்களை இறக்குமதி செய்வது, ஆண்டுதோறும் நடக்கும் வழக்கமாகிவிட்டது. இந்த தினத்தை ஒட்டி இந்தியாவிலும் பரிசுப் பொருட்கள், பூக்கள், வாழ்த்து அட்டைகளின் வியாபாரம் ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிவருகிறது. உண்மையில் காதல், வாழ்த்து அட்டைகள், பூக்கள், பரிசுப் பொருட்களால் மட்டும் முழுமை பெறுவதில்லை. 

காதல்

பூ, சாக்லேட், பரிசு... என இந்த தினம் கொண்டாடப்படுவது ஒருபுறம் மகிழ்ச்சியைத்தான் அளிக்கிறது. ஏனெனில், காதல் சாதி வேற்றுமைகளைக் களையக்கூடியது. இன்னொரு புறம், இந்தத் தினத்தைக் கொண்டாடுவதால் கிடைக்கும் பயன் காலம் முழுக்க நிலைத்திருக்குமா என்றால் `இல்லை’ என்றே வருகிறது பதில்.

‘என்னைப் பொறுத்தவரைக்கும் கல்யாணம்கிறது ஒரு கப் காபி குடிக்கிற மாதிரி!’ என்று சொன்னார் ஒரு பெண்மணி. இத்தனைக்கும் அவர் வேற்று தேசத்தைச் சேர்ந்தவர் அல்ல... சென்னையைச் சேர்ந்தவர். சமீபத்தில்தான் மணமுறிவு பெற்றிருந்தார். அவர் சொன்னது என் மனதை உலுக்கிவிட்டது. இன்று அதிவேகமாக உயர்ந்துவருகிறது விவாகரத்துகளின் எண்ணிக்கை. எதிர்காலத்தில் இது, திருமணம் என்பதன் மீதான நம்பிக்கையை உடைத்துவிடும் என்றுகூடத் தோன்றுகிறது.

குடும்ப வன்முறைகள் மற்றும் யாரோ ஒருவரை அடிமைப்படுத்திச் சுரண்டும் அவல வாழ்க்கை போன்றவற்றில் விவாகரத்துகள் வரவேற்கக்கூடியவையே. மறுமணம் என்பது ஏளனமாகப் பார்க்கக் கூடாதது. அது மட்டும் அல்ல, அத்தியாவசியமானதும்கூட. இன்றைய விவாகரத்து வழக்குகளில் பெரும்பாலானவை `மனப் பொருத்தம் இல்லை’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வருவதுதான் கவலைகொள்ள வைக்கிறது. 

காதல்

காதலன்-காதலியை வீட்டுக்கு அழைத்து வந்து சம்மதம் பெறுபவர்களும் சரி... பெற்றோர் பொருத்தம் பார்த்து மணமுடித்துவைத்த வாழ்க்கைத் துணையை, திருமணத்துக்குப் பிறகு காதலிப்பவர்களும் சரி... மிகக் குறுகிய காலத்தில் `மனப் பொருத்தம் இல்லை’ என நீதிமன்ற வளாகத்தில் நிற்க என்ன காரணம்? உளவியல் மலட்டுத் தன்மை (Mental Impotence) காரணமாக அவதிப்படும் இருபாலரின் எண்ணிக்கையும், `நான் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்?’ என்ற மனோபாவமும்தான் மனப் பொருத்தம் எனும் கட்டடத்தின் அடிச் செங்கலை உடைக்கும் வேலையை அன்றாடம் செய்கின்றன. 

எத்தனையோ பொய்மையும், விமர்சனங்களும் இருந்திருந்தாலும், சில ஆயிரம் ஆண்டுகளாக உழைக்கும் இருவரும் இளைப்பாறும் இடமாக, ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் அமைப்பாக இருந்தவை திருமணங்களும் குடும்ப அமைப்புகளுமே! 

காதல்

ஆண் மீது பெண்ணுக்கு இருந்த நம்பிக்கையும், `குவளை மலரின் மணமுடைய கரிய கூந்தலையும், ஆம்பல் மலரின் மணமுடைய பவள வாயினையும் உடையவளே... உன்னைப் பிரிந்தால் இந்த உலகமே எனக்குப் பரிசாகக் கிடைத்தாலும் அதை நான் புறக்கணிப்பேன். உன் காதலே எனக்குப் பெரிது!’ என்ற ஆணின் உறுதியும் உள்ள காதலும், அதில் விளைந்த குடும்பமும் சங்ககாலம் தொட்டு நமக்குப் பழக்கமான ஒன்றுதான். 

ஆனால், நவீன யுகத்தில் பொருள் சேர்க்க, தனக்கான சுய அங்கீகாரத்தைப் பெருக்க அதிக நேரத்தை வீட்டுக்கு வெளியே பலரும் செலவழிக்கிறார்கள்; தத்தம் காதலை `எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில்’ தொலைத்துவிடுகிறார்கள். இதனால் பலருக்கு குடும்பம் ஒரு சுமையாகிப் போய்விடுகிறது, அதை எங்கேயாவது இறக்கிவைக்க நினைக்கிறது மனம். 

காதலர்கள்

காதல் தொலைத்த பெற்றோரால், அன்றாடம் தன் குழந்தையின் சிணுங்கலில் மறைந்திருக்கும் வியாதியை நிச்சயம் கண்டறிய முடியாது. மனம் நொறுங்கி இருக்கும்போது சிறுதானியத்தையோ, சிட்டுக்குருவியையோ கண்கள் தேடாது. களைப்பில் கசங்கிவரும் துணைக்கு, தேன் சேர்த்த பச்சைத் தேநீர் (கிரீன் டீ) கொடுத்துப் புன்னகைக்க மனம் வராது. மாதவிடாய் நிற்கும் நேரத்தில் துணைக்கு கால்சியம் அதிகம் உள்ள மோரும் கம்பு ரொட்டியும் செய்து கொடுக்க வேண்டும் என்ற முனைப்பு வராது. 

அக்கறைகளுக்கும், மெனக்கெடலுக்கும், தேடலுக்கும், இளைப்பாற இடம் தருவதற்கும் காதல் மட்டுமே அடித்தளம்! தனித்து வாழும் வாழ்வில் சுகம் இருக்கக்கூடும். ஆனால், வயோதிகத்தில், எவரும் இல்லாத வெறுமை உயிரோடு இருந்து கொல்லும். 

காதல், நெகிழித் தாளில் சுற்றப்பட்ட ரோஜாக்களுக்குள் தேடப்படவேண்டியது அல்ல. வசீகரிக்கும் வழுவழுப்பான சாக்லேட்டுக்குள்ளும் அது இல்லை. கண்களால் பேசி, புன்னகையால் பசியாற்றி, தோள்களில் தாலாட்டி, உச்சி முத்தத்தில் கருத்தரிக்கும் உயிர் வித்தை அது. 

அடையாளங்களால் அல்ல... அன்பால் காதல் செய்வீர்! 

தொகுப்பு: பாலு சத்யா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்