வெளியிடப்பட்ட நேரம்: 07:44 (15/02/2017)

கடைசி தொடர்பு:07:44 (15/02/2017)

முதியவர்கள் சாப்பிட, தவிர்க்கவேண்டிய உணவுகள்! நலம் நல்லது-72 #DailyHealthDose

முதியவர்கள் - நலம் நல்லது

முதுமையில் உணவுத் தேவை மாறுபாடானதாக இருக்கும். தேவையானதை... அதையும் அளவோடு, சாப்பிடவேண்டிய காலம் வயோதிகக் காலம். பசி இருக்காது; மூட்டுக்களில் அதிக வலி வரும்; காது மந்தமாகும்; பார்வை குறையும்; மலச்சிக்கல் ஏற்படும்... இப்படிப் பல பிரச்னைகள் படையெடுக்கும். முதியவர்கள் சாப்பிட தவிர்க்கவேண்டிய உணவுகள், வழிமுறைகளைப் பற்றி இந்த அத்தியாயத்தில் பார்ப்போம். 

முதியவர்கள்

* முதியவர்கள் முதலில் கவனிக்கவேண்டிய முக்கியமான பிரச்னை... தண்ணீர். வயோதிகர்களுக்கு உடலின் எடையில் 60 சதவிகிதம் தண்ணீர்தான் இருக்கும். அதாவது, இளமைக்காலத்தில் இருப்பதைவிட 10 சதவிகிதம் குறைவாக இருக்கும். தேவையான அளவுக்குத் தண்ணீரைக் குடிக்காமல் இருப்பது, குடிக்க மறப்பது ஆகியவற்றால்தான் முதுமையில் பல பிரச்னைகள் ஆரம்பிக்கும். 

பல முதியவர்கள் உயர் ரத்த அழுத்தத்துக்கு, சர்க்கரைநோய்க்கு, மலச்சிக்கலுக்கு, இதய நோய்க்கு மருந்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். இந்த மருந்துகள் பல நேரங்களில், உடலில் நீர் இழப்புக்கும், ரத்தத்தில் உப்பு சதவிகிதம் குறைவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திவிடும். அதனால், சிலருக்கு தலையில் மட்டும் வியர்க்கும்; சிலருக்கு உடல் நடுக்கம் வந்து வெலவெலவென்று ஆட ஆரம்பிக்கும். இதற்கெல்லாம் என்ன காரணம்... ரத்தத்தில் சர்க்கரையில் அளவு குறைவதா, அதிகமாவதா என்பது புரியாமல் திணறுவார்கள். சரியான அளவில், சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால் இந்தப் பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். 

வயதானதால், உடலின் நீரிழைப்பை அறிவுறுத்தும் தாக உணர்வு இளம் வயதைக் காட்டிலும் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். வீட்டில் உள்ள பேரன், பேத்திகள், `கொஞ்சம் தண்ணி குடிசீங்களா தாத்தா?’ என்று அக்கறையுடன் விசாரித்தாலே போதும், இந்தப் பிரச்னையைத் தீர்த்துவிடலாம். 

முதியவர்

* செல்லுக்கு இடையில் தங்கி, வயோதிக மாற்றத்தை வேகமாகத் தூண்டுவது ஃப்ரீ ரேடிக்கல்ஸ் (Free Radicals). இதை, விலை உயர்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் மாத்திரைகளைக் கொண்டு தடுப்பது ஒரு வழிமுறை. இதைவிட, அவற்றை இயற்கையாகவே கொண்டிருக்கும் கிரீன் டீ, பப்பாளி, மாதுளை ஆகியவற்றைச் சாப்பிடுவதன் மூலம் எதிர்கொள்ளலாம். 

* முதுமையில் பழங்கள் மிகவும் அத்தியாவசியமானவை. மலச்சிக்கலைப் போக்க கரையா நார்களையும், இதய நாடிகளின் கொழுப்பை அகற்ற கரையும் நார்களையும், செல் அழிவைப் போக்க பாலிபீனால்களையும், ஆற்றலை நீடித்துத்தர `காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்’டையும் தருபவை பழங்களே. இவை தினமும் உணவில் ஒரு பகுதியாக இருக்கவேண்டியது முக்கியம். ஆனால், மாம்பழம், சப்போட்டா பழங்கள் முதியோருக்கு ஆகாதவை. இவற்றை பேரன், பேத்திகள் சாப்பிடுவதைப் பார்த்து ஆனந்தப்படுவதோடு தாத்தா-பாட்டிகள் நிறுத்திக்கொள்ளலாம். 

* பழங்களையும் தாண்டி தேவைப்படும் அதிக வைட்டமின் சத்துக்கு, வைட்டமின் பி 6-ம், புரதச் செறிவு அதிகம் உள்ள பாசிப் பயறு போட்டுச் செய்த கீரைக் கூட்டு, பீன்ஸ் பொரியல் மற்றும் வைட்டமின் பி 12 அதிகம் உள்ள கோழி ஈரல் கறி ஆகியவற்றை அவ்வப்போது சாப்பிட்டால் போதுமானது. 

* முதுமையில் கொழுப்புள்ள உணவுகளைக் குறைக்க வேண்டும். அதற்காக, முழுமையாகத் தவிர்ப்பது நல்லதல்ல. நல்லெண்ணெய், அரிசித் தவிட்டு எண்ணெய் போன்ற எண்ணெய்களின் கலவையைக் கொஞ்சமாகப் பயன்படுத்துவது நல்லது. 

முதுமை

* முதுமையில் எலும்புத் தசைகளின் குறைவால், புரதச் சேமிப்பு குறைந்துபோவதாலேயே உடல் மெலிந்துபோகும். அதை ஈடுகட்ட முளை கட்டிய பாசிப் பயறு, முட்டையின் வெண் கரு, சத்து மாவு ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடவேண்டியது அவசியம். 

* முழங்கால் மூட்டுவலியும் தசைவலிகளும் வயோதிகத்தின் அடையாளங்கள். இவை வராமல் இருக்க, வற்றல் குழம்பு, புளியோதரை போன்ற அமில உணவுகளுக்கு முதியோர் ஆசைப்படவே கூடாது. கடுக்காய், நெல்லிக்காய், கரிசலாங்கண்ணிக்கீரை போன்ற எளிய காயகற்ப மூலிகைகள் வயோதிகத்தின் வரப்பிரசாதம்

* `காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் சாப்பிடுவது வயோதிகத்தில் நோய் வராமல் காக்கும் மத்திரம்’ என்கிறது சித்த மருத்துவம். இதையும் பின்பற்றலாம். 

வீட்டில் இருக்கும் வயதானவர்கள் மருந்தோடு உன்னதமான உணவு, உற்சாகமான மனம் இவற்றோடு உரசல் இல்லாத உறவும் இருந்தால் மட்டுமே வயோதிக வியாதிகளை ஜெயிக்க முடியும். இதை வீட்டின் `வருங்கால வயோதிகர்’கள் உணரவேண்டியது அவசியம். 

தொகுப்பு: பாலு சத்யா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்