சளி, காய்ச்சல், தைராய்டு, புற்றுநோய்... மருந்தாகும் அபூர்வப்பழம்! #HealthTips

நமக்கு எளிதாகக் கிடைக்கக்கூடிய சாதாரண பொருட்களிலேயே எண்ணிலடங்கா மருத்துவக் குணங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை அறிந்துகொள்ளாமல் பல லட்ச ரூபாய்களைச் செலவு செய்து, மருந்துகளையும் மாத்திரைகளையும் தேடிப்போய் வாங்கிக்கொண்டிருக்கிறோம். அப்படி எளிதாகக் கிடைக்கும் அருமருந்து முள் சீத்தாப்பழம். நம் வீட்டிலேயே காய்த்துத் தொங்கிக்கொண்டிருக்கும் முள் சீத்தாப்பழத்தில் எத்தனையோ மருத்துவக்கூறுகள் அடங்கியிருக்கின்றன. `முள் சீத்தா’ என்பது ஆங்கிலத்தில் `சோர்சாப்’ (Soursop) எனப்படும். அமேசான் காடுகள்தான் இதன் பிறப்பிடம். தற்போது பிலிப்பைன்ஸ், மலேஷியா, மெக்சிகோ, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. நம் நாட்டில் கேரளா மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் இயற்கையாக விளைகிறது.

முள் சீத்தாப்பழம்

 

இந்தப் பழத்தின் பலன்களைப் பற்றி சித்த மருத்துவர், ரமேஷிடம் பேசினோம்... ரமேஷ்

``இந்தப் பழம் பல அபூர்வ சத்துக்களையும், மருத்துவக் குணங்களையும் கொண்டது. முள் சீத்தாவின் இலைகள், பட்டைகள், மரம், பழம், விதை, வேர் என எல்லாப் பாகங்களும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன.  வைட்டமின் ஏ, பி காம்ப்ளெக்ஸ், புரோட்டின், நார்ச்சத்து நிறைந்துள்ளன. முக்கியமாக, இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள்  புற்றுநோயைக் கட்டுப்படுத்துகின்றன. வயிறு, மார்பு, நுரையீரல், கணையம், மலக்குடல் உள்ளிட்ட பன்னிரண்டு வகையான புற்றுநோய்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. புற்றுநோய்க்கான கீமோதெரப்பி முறையைப் பயன்படுத்தினால், முடி கொட்டுதல், உடல் இளைத்தல் ஆகியவற்றுடன், மேலும் பல பக்க விளைவுகள் உண்டாகும். ஆனால், முள் சீத்தா அதுபோன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது.

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவுகளையும் முள் சீத்தாப்பழம் சரிசெய்யும். பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னையையும்கூட இந்தப் பழம் குணப்படுத்தும். இதன் பழங்கள் குழந்தைகளுக்குத்தான் நல்ல பயனைத் தரக்கூடியது. பெரியவர்களுக்கு முள் சீத்தாப்பழத்தைவிட இலைகள்தான் அதிகம் பயன் தரும். 10 முதல் 12 முள் சீத்தா இலைகளை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு, அதை அரை லிட்டராக ஆகும் வரை கொதிக்கவிட வேண்டும். பின்னர் அதனை காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பழத்தை முறையாக சுத்தம் செய்து, அளவாகப் பயன்படுத்துவதுதான் நல்லது. இல்லாவிடில் நியூரோடாக்சின் பிரச்னை ஏற்பட்டு பார்க்கின்சன் போன்ற நரம்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும். எனவே, தேர்ச்சிபெற்ற சித்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகே இதைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது." என்கிறார் மருத்துவர்.

`ஆர்போர்ட் நேச்சுரல் ஹெல்த் கேர்’ என்ற நிறுவனத்தை நடத்திவரும் ஞானசேகரிடம் பேசினோம்... 

"வெளிநாடுகளில் இந்தப் பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளை சாதாரணமாக பலரும் உபயோகிக்கிறார்கள். ஆனால் அந்த அளவுக்கு இங்கு விழிப்புஉணர்வு இல்லாததால், பெரிய அளவில் பயன்பாட்டில் இல்லை. மக்களுக்கு இதன் பயன்கள் குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும். எளிய முறையில் கிடைக்கும் இந்தப் பழமும் இதன் இலைகளும் பல்வேறு உடல்நலக் கோளாறுகளைத் தீர்க்கக்கூடியது என்பதை பலருக்கும் புரியவைக்கவேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது" என்கிறார்.

- செ.சங்கீதா (மாணவப் பத்திரிகையாளர்) 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!