Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சசிகலா... ஏன் ‘சதி’கலா ஆனார்...? - ‘சசிகலா உளவியல்’

சிக்மண்ட் ஃப்ராய்ட் இவ்வாறாகச் சொல்வார், ”இதுவரை அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கப்படவில்லை. நானும் 30 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்துபார்த்துவிட்டேன். என்னாலும் புரிந்துகொள்ள முடியவில்லை... ''அந்தக் கேள்வி இதுதான், 'ஒரு பெண்ணுக்கு என்னதான் வேண்டும்...?' 30 ஆண்டுகள் மட்டும் அல்ல, 300 தசாப்தங்களாக தொக்கி நிற்கிறது அந்தக் கேள்வி; கடிக்கப்பட்ட ஆப்பிளின் மிச்சத்தில் படிந்திருக்கிறது அந்தக் கேள்வி; சமகாலத்தில் பொருத்திப்பார்க்க வேண்டும் என்றால், பரப்பன அக்ரஹாரா வீதியில் பதில் தேடி நிற்கிறது இந்தக் கேள்வி; கூவத்தூரின் உள்ளே அனுமதி மறுக்கப்பட்ட புங்கமரத்தின் நிழலில் நிற்கிறது அந்தக் கேள்வி?  

சரி... நேரடியாக விஷயத்துக்கு வருவோம். என்னதான் வேண்டியிருந்தது சசிகலாவுக்கு... எதுமாதிரியான உளவியல் தஞ்சாவூர் விளாரில் குடிபுகுந்தவரை இன்று பரப்பன அக்ரஹார சிறைவரை இழுத்துச் சென்றுள்ளது? 

சசிகலா

“காட்டுமிராண்டித்தனமான அன்பு!”

‘பழிவாங்குவதிலும், காதலிலும் பெண்கள் ஆண்களைவிடக் காட்டுமிராண்டிகள்' 'நன்மை தீமையைக் கடந்து' (Beyond Good and Evil) என்ற நூலில் ஃப்ரெட்ரிக் நீட்ஷே இப்படி எழுதியிருப்பார். எல்லாப் பெண்களும் அப்படியா என்று தெரியவில்லை. ஆனால், சசிகலா விஷயத்தில் இது மிகச் சரியாகப் பொருந்துகிறது. தம்பி, கணவன், குடும்பத்தின் மீதிருந்த காட்டுத்தனமான அன்பு, அவரை அலைக்கழித்திருக்கிறது... தன் சுயத்தைக் கரைத்து திவாகரன், நடராஜன், தினகரன் எல்லாம் சொல்வதுபோல நடக்கவைத்திருக்கிறது. இப்போது, நீதிமன்றத்துக்கும்... சிறைக்குமென நடையாய் நடக்கவும் வைத்துக்கொண்டிருக்கிறது. மீண்டும் ஓர் ஆங்கில இலக்கியத்திலிருந்தே மேற்கோள் காட்டுகிறேன். வாஷிங்டென் எர்விங், ‘ஸ்கெட்ச் புக்’ என்ற நூலில், ‘'ஒரு பெண்ணின் முழு வாழ்க்கையும் பாசத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது’' என்பார். சசிகலாவின் பாசம் விளாரிலும், மன்னார்குடியிலும் கட்டமைக்கப்பட்டிருந்தது. அந்த அன்புதான் உருமாறி  ‘சசி என்டர்பிரைசஸ்’ - ஆக எழுந்து நின்று, இவரை வீதிக்கு இழுத்திருக்கிறது. 

சசிகலாசசிகலாவின் உளவியலைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், முதலில் நடராஜனின் உளவியலைப் புரிந்துகொள்ள வேண்டும். நடராஜன் தன் கல்லூரிக் காலத்திலேயே முழுமையாக அரசியலடைந்தவர்; இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்; இதை எல்லாம் கடந்து, எதையும் பின்னால் இருந்து இயக்கத் தெரிந்தவர்; அப்படி இயக்கவே விரும்புபவர். இப்படியானவரைக் கிராமத்துப் பின்புலத்திலிருந்து வந்த சசிகலா திருமணம் செய்துகொள்கிறார்.  

மாவட்டத் தகவல் தொடர்பாளாராக இருந்த நடராஜன், ஆட்சியர் சந்திரலேகா அறிமுகம்... பின்னாளில், ஜெயலலிதா - நடராஜன் அறிமுகம் ஏற்படக் காரணமாகிறது. இது, சசிகலா - ஜெயலலிதா நட்பாக மாறுகிறது. எல்லாவற்றையும் பின்னால் இருந்தே இயக்க விரும்பிய நடராஜன், ஜெயலலிதாவையும்.... அதன் மூலமாக ஆட்சியையும் பின்னால் இருந்து இயக்கத் தொடங்குகிறார். மெதுவாக, அன்பு... அதிகாரம் என்கிற இடத்துக்கு நகர்கிறது. 

 

“எல்லாவற்றையும் கைப்பற்று!” 

கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். கடந்த காலம் முழுவதும் நீங்கள் அடக்கி ஆளப்பட்டிருக்கிறீர்கள். உங்களைத் துச்சம் எனக் கருதி இருக்கிறார்கள். உங்களை யாரும் மதிக்கவில்லை. திடீரென ஒரு நன்னாளில், உங்களுக்கு அதிகாரம் கிடைக்கிறது... சர்வ அதிகாரமும் கிடைக்கிறது. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? சசிகலாவுக்கு இதுதான் நிகழ்ந்தது.

ஆண் அதிகாரம் அழுத்தமாக இருக்கும் ஒரு பின்னணி. தன் சுயத்தை முன்னிறுத்தும் கல்வியும் இல்லை. இப்படியானவருக்கு நடராஜன்இந்திய அளவில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒருவரின் நிழலாக இருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது... அதிகாரம் கிடைக்கிறது. அதிகாரத்தின் சுவை தித்திப்பாக இருக்கிறது. அதைப் பயன்படுத்த விரும்புகிறார். பின், முழுவதுமாகப் பயன்படுத்தவும் செய்கிறார். அதைப் பயன்படுத்தி அனைத்தையும் கைப்பற்றவும் செய்கிறார். 

அந்த அதிகாரம் பணத்தைக் கொண்டுவந்து சேர்க்கிறது. பணம் என்றால் கொஞ்சநஞ்சம் அல்ல... கண்டங்கள் தாண்டி முதலீடு நீளும் அளவுக்குப் பணத்தைக் கொண்டுவந்து சேர்க்கிறது. '‘பணம்... பணம்... பணம்...' என்று பணத்தை குறியாகவைத்தே இந்தச் சதிகாரர்கள் தங்களது வேலைகளைச் செய்துள்ளார்கள்'’  என்று உச்ச நீதிமன்றம் சொல்லும் அளவுக்கு பணத்தைக் கொண்டுவந்து சேர்க்கிறது. இப்போது, அவர்கள் சேர்த்த பணம், தன்னைக் காத்துக்கொள்ள இவர் மீது கண்ணுக்குத் தெரியாமல் அதிகாரம் செலுத்துகிறது. அந்த அதிகாரம்தான் இன்று எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது. அ.தி.மு.க உட்பட. 

'‘அன்பும், அதிகாரமும்!'’

சசிகலா, புனிதவதி என்பதற்காக இந்தக் கட்டுரை அல்ல... ஆனால், எவரையும் நாம் தட்டையாகப் புரிந்துகொள்ள வேண்டாம். நீதிமன்றம் சொன்னதுபோல இவர்கள் சம்பாதிக்கவே ஜெயலலிதா வீட்டில் சதித் திட்டம் போட்டிருக்கிறார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், எந்த உளவியல் இவரை, இதை எல்லாம் செய்யத் தூண்டியது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஜெயலலிதாவுக்குக் குடும்பம் இல்லை என்றால், சசிகலா கணவருடன் வாழவில்லை... குழந்தை இல்லை. பின், ஏன் சசிகலா... ‘சதி’ கலா ஆனார்? நிச்சயம், குடும்பத்தின் மீதான காட்டுத்தனமான அன்பும், அதிகாரத்தின் மீதான மோகமும் மட்டும்தான். நடராஜன், திவாகரன், தினகரன்... இது அவருடைய பலப்பட்டியல் அல்ல... இதுவே அவரது பலவீனப் பட்டியல்.  இன்று அவர்கள்,  ’பத்திரமா போயிட்டு வாங்கக்கா...’  என்று வழியனுப்பிவைக்க... சசிகலா சிறை செல்கிறார்.  

சசிகலா

இதை எல்லாம் கடந்து சசிகலாவிடம் இருக்கும் பிரச்னை என்னவென்றால், தன் உளவியல் சிக்கலை இன்னும் அவர் புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான். அதனால்தான், இப்போதும் தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்துவிட்டு போகிறார். இதுதான் பேராபத்தானது.

ஹூம்... சொல்ல மறந்துவிட்டேன். சசிகலா, இவ்வாறாக நடந்துகொண்டதற்குப் பின்னால் அவருடைய உளவியல் மட்டும் அல்ல... நம் உளவியலும் இருக்கிறது... நம் மத்தியதர வர்க்கத்தின் பொது உளவியல்...  ‘பயம்’.  அதிகாரத்தைக் கேள்விகேட்க பயம்.  

- மு. நியாஸ் அகமது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement