வெளியிடப்பட்ட நேரம்: 08:19 (16/02/2017)

கடைசி தொடர்பு:08:18 (16/02/2017)

உடலுக்கு உரமூட்டும் உள்ளூர்க் காய்கறிகள்! நலம் நல்லது-73 #DailyHealthDose

காய்கறிகள் - நலம் நல்லது

`காளானில் புரதச்சத்து வைட்டமின் நிறைந்திருக்கின்றன; கேன்சருக்கு நல்லது பிராக்கோலி’... என இங்கிலீஷ் காய்கறிகளுக்கு எத்தனையோ முக்கியத்துவம் கொடுக்கும் நாம் ஒன்றை மட்டும் சுலபமாக மறந்துவிடுகிறோம். அது, உள்ளூர்க் காய்கறிகள். முந்தைய தலைமுறையோடு நாம் தொலைத்த எத்தனையோ நல்ல விஷயங்களில் முக்கியமானவை, நாட்டுக் காய்கறிகள். 

காய்கறிகள்

கேரட், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு என ஆங்கிலக் காய்கறிகளைப் பயன்படுத்துவது இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆரோக்கியப் பேணல் காரணமாக, அரிசியில் இருந்து கோதுமைக்கு பலபேர் மாறிய பிறகு, வத்தக்குழம்பையும், கத்திரிக்காய் பொரியலையும் மறந்தேவிட்டோம்... இவற்றை சப்பாத்திக்குத் தொட்டுக்கொண்டு சாப்பிட முடியாது என்ற காரணத்தால். 

‘கரிக்காய் பொரித்தாள்; 
கன்னிக்காய் தீய்த்தாள்; 
பரிக்காய் பச்சடி செய்தாள்; 
உருக்கமுள்ள அப்பைக்காய் 
நெய் துவட்டல் ஆக்கினாள்’ 

- என்கிறது காளமேகப் புலவரின் பாடல் ஒன்று. அதாவது அத்திக்காய் (கரிக்காய்) பொரியல், வாழைக்காய் (கன்னிக்காய்) தீயல், மாங்காய் (பரிக்காய்) பச்சடி, கத்திரி (அப்பைக்காய்) நெய் துவட்டல் ஆகியவை நம்மைவிட்டுக் காணாமல் போய்க்கொண்டே இருக்கின்றன. 

சிலப்பதிகாரத்தில் உயர்த்திப் பாடப்பட்ட பாகற்காய், பீர்க்கங்காய், கொத்தவரை, மாதுளங்காய் வகைகளில் பாதி இப்போது நம்மிடம் கிடையாது. மிச்சம் இருப்பவையும் வீரிய ஒட்டுரகங்களே. ஆனாலும், நம் உள்ளூர் நாட்டுக்காய்கறிகள் சத்தைப் பொறுத்தவரை இங்கிலீஷ் காய்களுக்குச் சற்றும் சளைத்தவை அல்ல. 

சில உள்ளூர்க் காய்கறிகள்... மகத்தான பலன்கள்! 

உணவல்ல ஊட்ட மருந்து... கத்திரிக்காய்!

குறைந்த கலோரியும், அதிக நார்ச்சத்தும், குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸும் கொண்டது கத்திரிக்காய். இது உடல் எடையைக் குறைக்கவும், கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கும் உதவக்கூடியது. கத்திரிக்காய் விதையில் சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும் தன்மை இருக்கிறது. அதன் கருநீலத் தோலில் இருக்கும் பாலிபீனால்களில் கிடைக்கும் ஆன்டிஆக்சிடன்ட்கள் சர்க்கரைநோய், புற்றுநோய் போன்ற பல தொற்றா நோய்களுக்குப் பலன் தரக்கூடியது. `கத்திரிக்காய் பித்தங்கன்றைக் கபந் தீர்ந்துவிடும். முத்தோஷம் போக்கும்’ என்று பாடியிருக்கிறார்கள் சித்தர்கள். கத்திரிக்காயில் பொய்யூர் கத்திரிக்காய், கண்ணாடிக் கத்திரிக்காய், வரிக் கத்திரிக்காய், பச்சைக் கத்திரிக்காய்... என ஐநூறுக்கும் மேற்பட்ட உள்ளூர் வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகைக்கும் ஒரு மணம், ஒரு குணம் எனப் பண்புகளும் உண்டு. அலர்ஜிக்காரர்கள் தவிர அத்தனை பேருக்கும் நாட்டுக் கத்திரி ஊட்ட மருந்து! 

கத்தரிக்காய்

நரம்பை உரமாக்கும் வெண்டைக்காய் எங்கே?

‘வெண்டைக்காய் சாப்பிட்டால் நன்றாகக் கணக்கு வரும்’ என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. ஒரு சிறுவனைச் சாப்பிடவைக்க யாரோ சொன்ன கதையாகக்கூட இருக்கலாம். வெண்டைக்காய் குளிர்ச்சி தரும். வயிற்றுப் புண்ணை நீக்கும். சர்க்கரைநோய்க்கு நல்லது என்பதற்கு பல மருத்துவ ஆதாரங்கள் உள்ளன. வெண்டைக்காயை நன்றாக எண்ணெயில் வதக்கிச் சாப்பிடாமல், லேசாக வேகவைத்துச் சாப்பிடுவது நல்லது. கண்ணாடி, பச்சை, சிவப்பு, கஸ்தூரி... என வெண்டைக்காயில் எத்தனையோ வட்டார வகைகள் இருந்தன. அவையெல்லாம் இன்றைக்கு அருகிப் போய்விட்டன. `ஆபீஸ் வெண்டை’ எனும் ஒட்டு வீரிய ரகத்தைத்தான் இன்று நம் விவசாயிகள் அதிகம் பயிரிடுகிறார்கள். நரம்பை உரமாக்கும் பயனைத்  கஸ்தூரி வெண்டைக்காய். அந்தப் பலன் ஆபீஸ் வெண்டையில் கிடைக்காது என்பதே உண்மை.  

வெண்டைக்காய்

ஆண்மைக் குறைவுக்கு நல்லது அவரைக்காய்! 

கொலஸ்ட்ராலைக் குறைக்கும்; புரதச்சத்தையும் வைட்டமின் பி சத்தையும் சேர்த்துத் தரும். அவரைக்காயின் விதை ஆண்மைக் குறைவுக்கு மிக நல்லது. அவரைக்காய் குடும்பத்தைச் சேர்ந்த கொத்தவரங்காயை வாய்வுக் குத்து என நம்மில் பலர் ஒதுக்கிவிடுவதும் உண்டு. இதன் விதையில் உள்ள பிசின் `குவார் கம்’ (Guar Gum) உலகில் மிக அதிகமாகத் தேடப்படும் ஒரு பிசின். இதில் உள்ள நார்ச்சத்துகள் ரத்தக் கொழுப்பைக்கூடக் குறைப்பதற்கு உதவும் என்கிறார்கள். 

சில உள்ளூர்க் காய்கறிகள்... பலன்கள்! 

* வெள்ளைப் பூசணி, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை எளிதாகப் போக்கிவிடும். 

* கோவைக்காய் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். 

* சுரைக்காய் சிறுநீரகக் கல்லை வெளியேற்ற உதவும். 

* பீர்க்கங்காய் உடல் சூட்டைத் தணிக்கும். இது, சிறுநீர் எரிச்சலைப் போக்கும் உப்பு கனிமச் சத்துக்கள் நிறைந்தது. 

நாட்டுக் காய்கறிகள் நம் நல வாழ்வுக்கான நம்பிக்கைகள்!

தொகுப்பு - பாலு சத்யா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்