Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மனதை வெல்ல, மகிழ்ச்சியாக வாழ 5 வழிமுறைகள்! #MindRelaxTips

‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பது கணியன் பூங்குன்றனாரின் வாக்கு. நமக்கு நடக்கும் ஒவ்வொரு நன்மையும் தீமையும் யாரோ தந்து வருவதல்ல... நம் எண்ணங்களின் பிரதிபலிப்புகள்தான் அவை. உண்மையில் தினமும் நாம் போராடுவது, பிற மனிதர்களுடன் அல்ல... நம்முள் இருக்கும் உணர்வுகளுடன்தான். `உலகை வெல்வதைவிட மனதை வெல்வதுதான் கடினம்’ என்றார் புத்தர். அப்படி நம்மை தினந்தோறும் ஆக்கிரமிக்கும் எத்தனையோ எண்ணங்கள் உள்ளன. அவை அனைத்தையும் முறையாகக் கையாள்வதும் மனதை அடக்கப் பழகுவதும் அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஆனால், முக்கியமான ஐந்து விஷயங்களைக் கவனமாகக் கடைப்பிடித்தால், நம் வாழ்வில் இன்பம் என்றும் நிரந்தரம். அவை...

மன மகிழ்ச்சி

விமர்சனங்களைப் பாராட்டாக மாற்றுங்கள்!

‘இதெல்லாம் ஒரு சாப்பாடா... வாயில வைக்கவே முடியலை...’, ‘ஒரு வேலையை ஒழுங்கா எப்படிச் செய்யணும்னு தெரியுமா?’ இப்படி வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் சக மனிதர்களை விமர்சிக்காமல் சிலருக்கு அந்த நாள் முழுமை பெறாது. இன்னும் சிலர் தங்களையே விமர்சித்துக்கொள்வார்கள். `நான் குண்டா இருக்கேன்... எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க. அதனால பார்ட்டிக்கு வரலை’ என்பார்கள். ஓர் உண்மை தெரியுமா? விமர்சனம் செய்வதால், எந்த ஒரு நபரும் திருந்தப்போவதில்லை; எந்த விஷயமும் சரியாகப்போவதில்லை. விமர்சனம், மேலும் மோசமான ஒரு சூழ்நிலையையே உருவாக்கும்.

மாறாக, ‘இன்னைக்குச் சாப்பாடு நல்லா இருந்துச்சும்மா. கொஞ்சம் உப்பு மட்டும் கம்மியா போட்டிருந்தா இன்னும் பிரமாதமா இருந்திருக்கும்’ என்று சொல்லிப் பாருங்கள். மறுநாள் உங்கள் மனைவி உங்களிடம் இருந்து பாராட்டைப் பெறுவதற்காகவே ஆர்வத்துடன் சமைப்பார்.

விமர்சனம் - பாராட்டு

உங்களுக்குக் கீழே பணியாற்றுபவர்களிடம், ‘நல்லா பண்ணியிருக்கீங்க, பட் உங்களால இன்னும் சிறப்பா செய்ய முடியும்னு நம்புறேன்’ என்று கூறுங்களேன். நிச்சயம் அவர்கள் சிறப்பாக வேலை பார்ப்பார்கள்.

‘குண்டா இருந்தா என்ன? என் மனசுபோல நான் அழகுதான்’ என்று உங்களுக்கு நீங்களே கூறிக்கொள்வதன் மூலம் தன்னம்பிக்கையோடு இருக்கலாம்.

அனைவரின் மனதும் சின்ன பாராட்டுக்காகத்தான் ஏங்குகிறது... நம் எல்லோரையும் சேர்த்துத்தான். முடிந்தவரை விமர்சனத்தைப் பாராட்டாக மாற்றப் பாருங்கள்.

மன்னிக்கப் பழகுங்கள்!

பழியுணர்வு, குற்ற உணர்ச்சி, கோபம், துக்கம், கவலை, பயம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் நமக்குள் இருப்பதற்கு என்ன காரணம்? யாரையோ, எந்தக் காரணத்துக்காகவோ மன்னிக்காமல் இருப்பதால் நம்மிடம் தேங்கியிருக்கும் உணர்வுகளே இவை. ‘அவனை எப்படி மன்னிக்க முடியும்? மன்னிக்கக்கூடிய தவறையா அவன் செய்தான்?’ என்று உங்களுக்குள்ளேயே இந்த உணர்வுகளை வைத்துக்கொள்வதால் நோய்கள்தான் உண்டாகும். அதோடு, வாழ்க்கையை நிம்மதியாக வாழவும் முடியாது.

மன்னிக்கப் பழகுங்கள் 

சிலர் இளம் வயதில் செய்த தவறை நினைத்து, காலம் முழுக்கத் தங்களையே வருத்திக்கொள்வார்கள். அப்படிப்பட்டவர்கள், முடிந்தால் உங்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் போய் மன்னிப்பைக் கேளுங்கள். அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவில்லையா..? கவலையைவிடுங்கள். உங்கள் தவறை உணர்ந்துவிட்டீர்கள்... எனவே, உங்களை நீங்களே மன்னித்துக்கொள்ளுங்கள். நாம் செய்த தவறை மனப்பூர்வமாக உணர்ந்துவிட்டால் அதுவே நமக்குக் கிடைத்த பாவமன்னிப்புதான். ஆனால், அந்தத் தவறை மறுபடியும் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.`வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ - இது இயற்கை விதி. எனவே கவலைகளை விட்டுவிட்டு உங்கள் வாழ்க்கையை வாழப் பழகுங்கள்.

நன்றி சொல்வதை ஒரு வேலையாகச் செய்யுங்கள்!

நீங்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு நல்ல விஷயத்துக்கும் நன்றி சொல்லிப் பழகுங்கள். அதன் பலனைப்  பல மடங்குகளாக உங்கள் வாழ்க்கையில் திரும்பப் பெறுவீர்கள். 

உதாரணமாக, உங்கள் வேலையை சிறப்பாக செய்வதற்கு ஒத்துழைத்ததற்காக உங்கள் உடலுக்கு நன்றி செலுத்துங்கள். 
உங்கள் கவலைகளைப் பகிர்ந்துக்கொள்ள எந்நேரமும் தயாராக இருக்கும் உங்கள் வாழ்க்கைத்துணைக்கு நன்றி கூறுங்கள். 
எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் உங்கள் நலனையே விரும்பும் பெற்றோருக்கு நன்றி சொல்லுங்கள். 

நன்றி சொல்லி பழகுங்கள்...

எக்கச்சக்கமாக எகிறும் விலைவாசியையும், அதற்கான பில்களையும் பார்த்துப் பயப்படாதீர்கள். மாறாக, இந்தப் பெரிய தொகையை செலுத்தும் அளவுக்கு உங்களிடம் பணம் இருக்கிறதே என நினைத்து கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். உங்களுக்குக் கிடைக்காததை நினைத்து வருத்தப்படாமல், கிடைத்த நல்லவற்றுக்கு நன்றி செலுத்திப் பாருங்கள்... உங்கள் வாழ்க்கை நிச்சயம் மாறும்! 

உங்கள் மகிழ்ச்சி உங்கள் கையில்!

உங்கள் வாழ்க்கையானது, துரோகம் செய்யும் நண்பர்களாலும், அலட்சியப்படுத்தும் வாழ்க்கைத்துணையாலும், குறை கூறும் மனிதர்களாலும் சூழப்பட்டிருக்கலாம். இதையெல்லாம் நினைத்து, `என்னால் சந்தோஷமாக இருக்க முடியவில்லையே...’ என்று வருத்தப்பட வேண்டாம். உங்கள் சந்தோஷத்தை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். ஆம்... ஒவ்வொரு மனிதனையும் சந்தோஷப்படுத்தும் தேவதை அவனுக்குள்ளேயேதான் இருக்கிறாள். உங்களுக்கு சமையல் பிடிக்கும் என்றால், புதிது புதிதாக உணவுகளைத் தயாரியுங்கள். உங்களுக்குப் பிடித்த பாடலைக் கேளுங்கள். நல்ல புத்தகங்களை வாசியுங்கள். எழுதப்பிடிக்கும் என்றால், கதை எழுதுங்கள். உங்களுக்குப் பிடித்தவர்களிடம் போன் செய்து பேசுங்கள்... இப்படி உங்களுக்குப் பிடித்த விஷயங்களைத் தொடர்ந்து செய்வதால், சந்தோஷம் என்றும் உங்களை என்றும் விட்டு விலகாமல் இருக்கும்.

பாடல் கேளுங்கள்

வம்பு பேச்சு வேண்டாமே..!

வம்பு பேச்சு எதிர்மறையானது. யாரைப் பற்றி வம்பு பேசப்படுகிறதோ, அவர்களை அது பாதிப்பதில்லை. மாறாக யார் வம்பு பேசுகிறார்களோ அவர்களைத்தான் அது பாதிக்கும். உங்களுக்கு ஒருவரைப் பிடிக்காவிட்டால், அவரைப் பற்றி தவறாகப் பேசாமல் அவர்களிடம் இருக்கும் ஏதேனும் ஒரு நல்ல குணத்தை நினையுங்கள். முடியாவிட்டால், உங்கள் கவனத்தை உங்களுக்குப் பிடித்த விஷயத்தின் மீது செலுத்துங்கள். நீங்கள் ஆசைப்படும் வீட்டைக் கட்டுவதைப்போல அல்லது உங்களுடைய நெடுநாள் கனவு நிஜமாவதுபோல நினைத்துப் பாருங்கள். சதா அதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருங்கள். ஒரு நாள் உங்கள் கனவு நிஜமாகவும்கூடும்!

வம்பு பேச்சு வேண்டாமே

இந்த ஐந்து விஷயங்களைத் தொடர்ந்து கடைப்பிடியுங்கள். உங்கள் வாழ்க்கை, உங்களுக்குப் பிடித்த விதத்தில் அமையும்... இன்பமே சூழ இன்புற்று வாழலாம்!

- கி.சிந்தூரி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement