வெளியிடப்பட்ட நேரம்: 18:03 (18/02/2017)

கடைசி தொடர்பு:18:02 (18/02/2017)

பெண்களுக்குள்ளான நட்பில் பொசசிவ்னெஸ் இருக்குமா..? - ஓர் அலசல்

டிரயல் ரூம்களில் கேமிரா பொருத்தப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியவில்லை. ஆனால், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமலோ அல்லது அந்தக் கவலையைப் பொருட்படுத்தாமலோதான் அன்றாடம் துணிக்கடைகளிலும் மால்களிலும் நூற்றுக்கணக்கான பெண்கள் டிரையல் ரூம்களில் நுழைந்துகொண்டிருக்கிறார்கள்.

பெண்

அப்படித்தான், மிகப்பெரிய மால் ஒன்றில் டிரையல் ரூம் வரிசையில் நின்றிருந்தேன். கிட்டதட்ட ஒரே வயதுடைய இரண்டு டீன்ஏஜ் பெண்கள் ஒரு டிரயல்ரூமுக்குள் ஒன்றாய் நுழைய முயன்றார்கள். ஆனால், அந்தக் கடையின் பணிப்பெண் அவர்களைத் தடுத்து நிறுத்தினார். ஒரு ரூமுக்குள் இருவர் ஒன்றாய் செல்ல அனுமதி இல்லை என்றார். அவர்கள், தங்களை அக்கா, தங்கை எனச் சொல்லியும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. "தோழியோ சகோதரியோ யாராக இருந்தாலும் அனுமதி கிடையாது" என்று கராராகச் சொல்லிவிட்டார், மேனேஜர் வந்தார்; அவரும் அதையே ஒப்பித்தார். கியூவில் நிற்கப் பிடிக்காமலோ அல்லது எரிச்சலுற்றோ இருவரும் டிரயல் வேண்டாம் என மறுத்துச் சென்றுவிட்டனர்.

கம்பெனி ரூல்ஸ் எனச் சொல்வது சரி. ஆனால், இரு பெண்களை ஒரு அறைக்குள் அனுமதிக்காத இந்த சமூகம், இரண்டு பெண்களுக்கு இடையிலான நட்பை என்ன மாதிரியாகப் புரிந்துவைத்திருக்கிறது.? சமகாலத்தில் இப்படி ஒரு கேள்வி எழுந்தால், அது அரசியல் பூச்சுடனே கவனிக்கப்படும். ஆனால், இது அரசியல் பதிவு அல்ல.

நட்பு...

பொதுவெளியில் இரண்டு ஆண்களுக்கு இடையிலான நட்பு என்பது காலங்காலமாக இருந்து வருவதுதான். அது கட்டுக்கடங்காத சுதந்திரம் கொண்டது. ஆனால், பொதுவெளியில் பெண்களுக்கு இடையே இப்படியான நட்புக்கான வெளி உருவானதே மிகச் சமீபமான காலத்தில்தான். இதில் இருக்கின்ற எல்லையற்ற உறவுநிலை மிகவும் வலிமையானது. உளவியல்ரீதியாக இதற்குப் பல காரணங்களும் உள்ளன. கண்ணியமான ஆண் – பெண் நட்புகளைக் கொச்சையாகப் பார்ப்பவர்களும் தன் இச்சைக்கு ஏற்ப புறம்பேசும் கூட்டமும் இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. பெண்கள் பொதுவெளிக்கு வந்து, தங்களுக்கு இடையிலான நட்பு வெளியை உருவாக்கிக்கொண்டபிறகு, இவர்கள் தற்போது பெண்களுக்கு இடையிலான நட்பைக்கூட வெறுமனே பாலியல் உறவாக மட்டுமே பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதுதான் இவர்களின் பரிணாம வளர்ச்சி. ஆனால், உறவுகளால் தனிமைப்படுத்தப்பட்ட மனம்தான் பிரிக்க முடியாத நட்புகளைத் தேடுகிறது... ஈர்க்கப்படுகிறது..

ஃப்ரெண்ட், பிலாசபர், கைடு என்பவை எல்லாம் ஒரு பெண்ணுக்கு ஆணைவிட சக பெண்ணுடனான நட்பில்தான் பாதுகாப்பானதாகவும், நம்பகத்தன்மை நிறைந்ததாகவும் உள்ளன. இதனால்தான், உடன் பிறந்த சகோதரியையும் தோழிகளையும் வாழ்நாள் துணையாக ஆயுள் முழுதும் கூடவே வைத்துக்கொள்ளத் தோன்றுகிறது. இந்த எண்ணம் சாத்தியப்பட்டது குறிப்பிடத்தகுந்த அளவில் பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்த பின்னரே. அதுவும், அவர்கள் மேல்தட்டு அல்லது உயர் நடுத்தர வர்கத்தின் பிரதிநிதிகளாக மாற ஆரம்பித்தப் பின்னரே.

நட்பு

ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையான நட்பைவிட இதன் வேகம் பன்மடங்கானது.. காரணம்... யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இந்த நட்பில் இல்லை. மேலும், சுதந்திரமும் ஒத்த மனநிலையும் வாய்க்கும்போது, ஒரே திசையில் ஒன்றாகப் பயணிப்பவர்களின் நட்பில் வேகம் இயல்பாகவே உருவாகிறது.

ஆண்-பெண் நட்பில் இருக்கும் ஈகோ ஆரம்பத்தில் இங்கு இருப்பது இல்லை. சில இடங்களில் காலங்காலமாக அடக்கிப்பார்க்கப்பட்ட பெண் சமூகத்துக்குள் ஆணின் தேவை அபத்தமாகவும், அர்த்தமற்றதாகவும் தெரிய ஆரம்பிக்கலாம். ஒரு பெண்ணின் மனம் இன்னொரு பெண்ணுக்குத்தானே புரியும் என்ற சினிமா வசனங்கள் ஞாபகத்தில் வந்து போகும். ஆனால், ஒவ்வொரு நிலையிலும் ஒரே மாதிரியாக சிந்திக்கும் இருவர் தொடர்ந்து இணைந்து இருப்பது அவ்வளவு எளிது அல்ல என்பதால் இங்கும் பிற்பாடு ஈகோ நுழைகிறது. 'எதிர் துருவங்கள் ஈர்க்கும் ஒத்த துருவங்கள் விலகும்' எனும் அறிவியல் பெண் நட்புக்கும் பொருந்தும். காலங்கள் மாற சூழ்நிலை மாற இருவருக்கும் இடையேயான நட்பும் ஒரே மாதிரி இருப்பது இல்லை.

ஆண்-பெண் நட்பு

அதேசமயம், ஆண்-பெண் நட்பில் விரிசல் விழும்போது ஆணாதிக்கமாகவே பார்க்கப்படும் மனப்பாங்கு இங்கு இல்லாமல் போகிறது. ஒப்புக்கொள்ளாதபோது பாய் ஃப்ரெண்ட், கேர்ள் ஃப்ரெண்ட்டைத் தூக்கி எரிவது போல பெண் – பெண், ஆண் – ஆண் நட்பை அவ்வளவு எளிதாக விலக்கிட முடிவது இல்லை. ஆகவே, விளைவுகள் பெரும்பாலும் விபரீதமாக இருக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது.

தோழமையில் இணைந்தபோது இருந்த அன்பில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் இருவராலும் சகித்துக்கொள்ள முடிவது இல்லை. ஆண்-பெண் நட்பில் ஏற்படும் பொசசிவ்னெஸ் என்ற நிலையையும் தாண்டி இது செயல்படுகிறது. எதிர் பாலினத்தை ஒதுக்கி வைக்கும்போது நமக்குள் எழும் இரக்கம், இங்கு சற்று வன்முறையாக வெளிப்படுகிறது. நட்பை மாற்றிக்கொள்ள மனம் வராமல் அப்படியே தொடர்வதால், டிப்ரஷனும் உருவாகிறது. அன்புக்காக உணர்வு அளவில் எவர் இறங்கிப்போகிறார்களோ, இறுதியில் அவர்களை அடிமைக்குள்ளாகி, பலியாக்கும் நட்பின் சைக்கோதனத்துக்கும் இது கொண்டுசெல்கிறது.

நட்புக்குத் தடை இல்லை

நட்புக்குத் தடை இல்லைதான். ஆனால், எதையோ நினைத்துக் குரங்கைப் பிடித்த கதையாய் தன்னை முற்றிலும் தொலைத்துக்கொள்ளும் நட்புகளை இனி அளவோடு வைத்துக்கொள்வதுதான் நமக்கு மட்டும் அல்ல... நம்மைச் சார்ந்த அனைவருக்குமே நல்லது. எது எப்படியோ... பெண்கள் தமக்குள் சிநேகத்துடன் 'முஸ்தபா முஸ்தபா' பாடுவதைக்கூட தவறாகக் கருதும் ஆணாதிக்கத்தின் NEO-STRATEGIESஐ தவிடுபொடியாக்க நாம் ஒன்றிணைவது அவசியம் தோழி!

- மதுமிதா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்