Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாவனாவுக்கு நிகழ்ந்ததில் ஆண்களின் சைக்காலஜியும் பெண்களின் பாதுகாப்பும்!

`பாவனா… அது பாவம்ணா!’ என்பதைப் போன்று, இன்று சமூக ஊடகங்களிலும், வாட்ஸ்அப்பிலும் ட்ரெண்டிங்கில் இருக்கின்ற அனுதாப ஸ்மைலிகளையும், மீம்களையும் தாங்கிய ஆண்களைச் சேர்த்தே இன்றைய உலகம் உள்ளது. ஆனால், இந்த இரக்க உணர்வோ, அனுதாபமோ பெண்களின் மீதான பாலியல் தொல்லைகளைத் தடுத்து நிறுத்துவதில்லை; நிறுத்தப்போவதும் இல்லை. பாவனா வழக்கு, முதலில் உடல்ரீதியான தொல்லையாக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டு, பின் பணத்துக்காக நடைபெற்ற சம்பவமாக மாற்றம் பெற்றுள்ளது. நடிகையோ அல்லது சாமான்யப் பெண்ணோ இன்றளவில் உணர்வு மற்றும் உடல்ரீதியான தொல்லைகளை அனுபவிப்பது மிகவும் அதிகரித்துவருகிறது. 

பாலியல் தொல்லை - பாவனா

பேருந்தின், ரயிலின் நெருக்கடியிலும், அலுவலகத்தின் சந்தர்ப்பவாதங்களிலும், இன்னமும் பல இடங்களிலும்கூட இது போன்ற வக்கிரங்களை நாம் பார்க்கிறோம். `பொது இடத்தில் சிகரெட் பிடிக்கக் கூடாது’ என்கிற எச்சரிக்கை வாசகம்போல இதற்கும் பொதுவெளியில் எதிர்ப்பைக் காட்டும் எச்சரிக்கை பதாகைகள் அதிகரித்துவருவதும் இதற்கு ஒரு சான்று. 

மீடியாக்கள் வெளிச்சம் போடாத வரை எந்த ஓர் இழப்பையும் தனி மனிதப் போராட்டமாகவே கையாளவேண்டியிருக்கிறது. மிகக் கொடூரமாக நிகழ்த்தப்பட்ட ஒவ்வொரு நிகழ்விலும், ஏதாவது ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம். ஆனாலும், அதைத் தொடர்ந்து வரும் அடுத்த நிகழ்வு முன்பைவிட பலமடங்கு வக்கிரமாக, தைரியமாக நிகழ்த்தப்படுகிறது. 

குற்றவாளிகளை ஊக்குவித்துக்கொண்டிருக்கும் காரணிகளை ஆராய வேண்டும். அது நம் அன்றாட நுகர்வில் இருந்து தொடங்குகிறது. `சட்டங்களை வலிமையாக்க வேண்டும்’, `தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்’ என்ற முழக்கங்கள் எல்லாம் வெறும் தேர்தல் அறிக்கைகள்போல ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்ற நிலையில், இன்னமும் எத்தனைத் துயரங்கள் நிகழ்ந்தாலும், சமுதாயத்திலும் சட்டத்திலும் மாற்றங்கள் வருமா என்பது சொல்வதற்கில்லை. எனவே, ஒரு பெண் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தற்காப்புடன் செயல்பட வேண்டும். இது ஒன்றுதான் இன்றைய அளவில் நம்மால் நிகழ்த்தக்கூடிய தனிமனித முயற்சி அல்லது அதிகபட்ச சாத்தியமான பாதுகாப்பு முயற்சி. 

ரங்கனா ரனாவத்

``உடல் அளவில் என்னால் ஓர் ஆணை எதிர்க்க முடியாத சூழ்நிலையில், என் எதிர்ப்பை அறிவைக்கொண்டு செயல்படுத்துவேன்.’’ - இது நடிகை கங்கனா ரனாவத்தின் வார்த்தைகள். சமீபத்தில் நான் பார்த்து வியந்த தைரியமான பெண்மணிகளில் இவரும் ஒருவர். தன் தந்தை வயதுடைய ஒருவரால் தாக்கப்பட்டபோது, தன் காலணியால் அவரை அடித்துக் காயப்படுத்தி தப்பித்திருக்கிறார், அது வரை இருந்த கங்கனா, அந்த போராட்டத்துக்குப் பின்னர் தன் வலிமை என்னவென்று உணர்ந்ததாகக் கருத்து தெரிவித்திருந்தார். பிரச்னை என்று வரும்போது ஏதாவது ஒரு ஹீரோ வந்து காப்பாற்ற வேண்டும் என்பது இல்லை. காரணம், பல சமயங்களில் நாம் ஹீரோவாக நினைப்பவர்கள்கூட இது போன்ற வில்லத்தனத்தை நிகழ்த்தியிருப்பார்கள். 

`ஆணைவிட பெண் உடல் அளவில் வலிமை குறைந்தவள்’ என்பது இயற்கையின் நியதியாகப் பார்க்கப்படுகிறது. பல சூழலில் அது சரியாக இருந்தாலும், இரைக்காக வேட்டை குணத்துடன் அலையும் மிருகத்தின் வலிமையைவிட தன் உயிரைக் காத்துக்கொள்ளத் துடிக்கும் இரையின் உணர்வுக்கு வலிமை அதிகம் என்பதை வன்முறைக்குள்ளாகும் ஒவ்வொரு பெண்ணும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். `பெண்ணின் நகம்கூட ஓர் ஆயுதம்’ எனச் சொன்ன காந்தியின் வார்த்தைகளை ஒரு தூண்டுதலாக நினைத்து, பிரச்னை என வரும்போது தன் உடலையே ஆயுதமாக மாற்றிக்கொள்ள நாம் மறக்கக் கூடாது. 

பெண் குழந்தைகள் பிறந்தால் நடனம், சங்கீதம் என சாத்வீகத்தைப் பழக்குவதோடு நில்லாமல் கராத்தே, விங் சுன் (Wing Chun), டேக்வான்டோ (Taekwondo) போன்ற தற்காப்புப் பயற்சிகளையும் பயிற்றுவிப்பது மிக முக்கியம். நீர் நிலைகளே இல்லாத நிலையிலும், இன்று நீச்சல் குளங்களுக்குச் சென்று ஆயிரக்கணக்கில் செலவழித்து நீச்சல் பயில்வதன் அடிப்படை தற்காப்பென்றும் கொள்ளலாம். அப்படிப்பட்ட உடலைத் தேற்றும் முறைகளுடன் குறுகியகால தற்காப்புப் பயிற்களையாவது சொல்லிக் கொடுக்க வேண்டும். உடல் வலிமை என்பது மன தைரியத்தை மேம்படுத்தும், தன்னம்பிக்கை தரும். எனவே, பெண்கள் உடல் அளவில் ரிஃப்லெக்ஸ் எனும் எச்சரிக்கை உணர்வுடன் வளர்வோம். பிரச்னை என வரும்போது ஒரு பெண்ணின் முகத்தில் தெரியும் பயமும் குறுகும் தோள்பட்டையுமே அவள் வலுவற்று வீழ்த் தயாராவதன் அறிகுறியாக மனநல மேம்பாட்டாளர்கள் அறிவுறுத்துகின்றனர். 

பாவனா

எனவே, ஒருவர் உங்களைத் தாக்க முயன்றால், முதலில் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, `உன்னைவிட நான் வலியவள்’ என்பதுபோல உடல் மொழியை பாதுகாத்துக்கொள்ளுங்கள். `ஆக்ஸிடன்ட் மற்றும் எந்த துர்நிலையிலும் உன்னைக் காப்பாற்றும் மருந்து உன்னருகிலேயே இருக்கும்’ என்கிறது ஒரு கீழைத் தத்துவம். இதைப் பெண்கள் தங்கள் ஆபத்துக் காலங்களில் நினைவில்கொள்ளுங்கள். அணியும் செருப்பு, தலையில் செருகும் ஹேர்க்ளிப், நகங்கள், பற்கள்... என ஆதிகால மனிதன்போல தன்னைத் தானே காத்துக்கொள்ள தகுந்த ஆயுதங்கள் அருகிலேயே இருக்கும். அவற்றைத் தெளிந்த மன ஓட்டத்தில் மட்டுமே உணர முடியும் என்பதால், பிரச்னை வரும் நேரங்களில் உடனே விழித்துக்கொள்ளுங்கள். கையில் மறைத்தபடி போனில் யாருக்கேனும் அழைப்பைத் தட்டிவிட்டு, எதிராளி உணராத வகையில் பேச்சை நீட்டியோ அல்லது எங்கிருக்கிறோம், யார் இருக்கிறார்கள், என்ன பிரச்னை என்ற சில தகவல்களை எப்படியாவது பரிமாற்றம் செய்ய முனையுங்கள். பெண்களுக்காக உள்ள SOS (Save our Soul) முறையைப் பயன்படுத்தத் தவறாதீர்கள்.

இளம் பெண்கள் உட்பட பெண்களுக்குப் பல இடங்களில் ஏன் வீட்டில்கூட பிரச்னைகள் இருக்கலாம். அமைதியான பெண் என்பது பல சமயங்களில் உங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் வக்கிர ஆணின் ஆயுதமாக இருக்கக்கூடும். எனவே, அமைதி கலைத்து, உங்கள் பாதுகாப்பு முக்கியம் என்பதை உணருங்கள். உடல் அளவில் பிரச்னைகள் ஏற்படுமாயின், சத்தம் போடவும், வேறு ஒரு காரணம் காட்டி அவர்கள் உறவைத் துண்டித்துக்கொள்ளவும் நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்பதை வன்முறையாளருக்குச் சுட்டிக்காட்டிவிடுங்கள். இவர்கள் பொதுவாக அவமானத்துக்கு அஞ்சுவார்கள். எனவே, காட்டிக் கொடுக்கும் நிலையில் நீங்கள் இருப்பதை உணர்த்திவிடுங்கள். 

அலுவலகங்களிலும் இதே போன்று முன்னெச்சரிக்கையுடன் பழகுங்கள். உங்கள் மேலதிகாரியோ அல்லது எவராக இருந்தாலும், உங்கள் வேலையைவிட உங்கள் உடலும் மனமும் முக்கியம் என்பதை உறுதியாகச் சொல்லிவிடுங்கள். காரணம், தேவையுள்ள இடத்தில்தான் அவர்கள் தேவையை முன்வைப்பார்கள். எந்த நேரமும் தனித்திருக்காதீர்கள். நல்ல நண்பர்களை உடன் வைத்துக்கொள்ளுங்கள். அலுவலகத்தின் நல்லது கெட்டதுகளை அவ்வப்போது அப்டேட் செய்யுங்கள். பிரச்னைக்குரியவரின் கேபினுக்குள் செல்லும்போது செல்போனை ரெக்கார்ட்டிங்கிலோ அல்லது அழைப்புநிலையிலோ வைத்திருங்கள். இது உங்கள் மீது தவறில்லை எனச் சுட்டிக்காட்ட ஓர் ஆதாரமாக அமையும். இதையும் தாண்டி அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளுக்கான சட்டதிட்டங்கள் மிகக் கடுமையாக உள்ளன. சக ஆண் பணியாளர்களின் வார்த்தை, மெசேஜ் இவற்றை வைத்து வழக்குத் தொடுக்க இயலும் என்பதால், நம் நிலையில் தேவையற்ற நட்புகளை வளர்க்காமல், பிரச்னை என்றால் துணிச்சலுடன் எதிர்க்க நம்மை நாம் தெளிவாக வரையறுத்துக்கொள்வோம். காதலிலும் கண்ணியமாக, மனைவியாக இருந்தாலும், `நோ மீன்ஸ் நோ’ எனச் சொல்லும் `பிங்க்’ திரைப்படத்தின் வார்த்தைகளை பெண்கள் மீது திமிரால் கைவைக்கத் துணியும் ஒவ்வோர் ஆணுக்கும் சொல்லிக் கொடுப்பது சக சமுதாயத்தின் கடமை. இதில் ஆண், பெண் பேதமில்லை. 

நோ மீன்ஸ் நோ!

- மதுமிதா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement