Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கசப்பு, துவர்ப்பு... நோய் எதிர்ப்பு சக்தி தரும் இயற்கை கேடயங்கள்! நலம் நல்லது-76 #DailyHealthDose

கசப்பு, துவர்ப்பு

ம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உச்சத்தில் வைத்திருக்கவேண்டியது மிக அவசியம். இன்றைக்கு உடல் உழைப்பு குறைந்த நிலையில், ஒவ்வோர் உணவோடும் வணிக ரசாயனம் ஒட்டிக்கொண்ட இன்றைய நவீன வாழ்வியலில், நோய் எதிர்ப்பு சக்தி வீரியம் இழக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. அதை மீட்டெடுக்க சின்னச் சின்ன அக்கறைகளே போதும். கசப்பு, துவர்ப்பு சுவைகளை உணவில் சேர்ப்பதை நம்மில் பலர் மறந்தேவிட்டோம். இவை இரண்டும் அன்றாடம் ஏதேனும் ஓர் உணவில் இருந்தால் நோய்க்கு எதிரான இயற்கைக் கேடயங்கள் போலவே செயல்படும். 

கசப்பு துவர்ப்பு

அறு சுவைகளையும் நாம் தினசரி உணவில் சேர்ந்திருப்பதுதான் ஆரோக்கியத்தின் அடிப்படை. காளமேகப் புலவர் பதிவில் வரும், `கரிக்காய் பொரித்தாள், கன்னிக்காய் வாட்டினாள், பரிக்காய் கூட்டினாள், அப்பக்காய் துவட்டினாள்..’ என்ற பாடலில் சொல்லப்பட்டவை வெறும் காய்கறிகள் பெயர் மட்டும் அல்ல. அந்தக்கால உணவில் துவர்ப்பான அத்தி, புளிப்பும் துவர்ப்புமான மாங்காய், துவர்ப்பும் இனிப்புமான வாழைக்கச்சல், கசப்பும் துவர்ப்புமான கத்திரிக்காய், எல்லாவற்றையும் சேர்த்துச் சமைக்கும்போது ஒரு சிட்டிகை கடல் உப்பு... என அனைத்து சுவைகளும் கலவையாக இருந்தன என்பதும் குறிப்பிடப்படுகிறது. 

இன்றைக்கு அதே உணவு, கார்பைடு கல்லால் பழுக்க வைத்த மாம்பழம், `கேவண்டிஷ்’ வாழை, பி.டி.கத்திரிக்காய், அயோடைஸ்டு உப்பு என மாறிவிட்டது. இதை நாம் உண்டால், நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்குமா அல்லது நோயை வாங்குவோமா என்பதை அதை உருவாக்கியவர்கள்தான் சொல்ல வேண்டும். 

சில இயற்கை உணவுகளில் கசப்பு, துவர்ப்பு சுவைகள்... 

* அதிகமான கசப்பு சுவை உடைய நிலவேம்புக்குள் டெங்கு ஜுரத்தைக் குறைக்கும் கூறு ஒளிந்திருக்கிறது. 

* பன்றிக் காய்ச்சலுக்கு மருந்தான டாமிஃப்ளூ (Tamilflu) தயாரிக்கப் பயன்படும் ஷிகிமிக் அமிலம் (Shikimic Acid), பிரியாணிக்குப் போடும் அன்னாசிப் பூவின் கசப்பில் இருக்கிறது. 

* புற்றுநோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தரும் கசப்பும் துவர்ப்புமான ஃபீனால்கள், பால் சேர்க்காத கிரீன் டீயில் இருக்கின்றன. 

கசப்பு துவர்ப்பு - கிரீன் டீ

* காச நோய்க்கும், ஹெச்.ஐ.வி-க்கும் எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு கலந்த சத்துக்கள் நெல்லிக்காயில் நிறைந்திருக்கின்றன. 

* சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி துளசியின் கசப்பு, துவர்ப்புக்குள் இருக்கிறது. 

குழந்தைகளுக்கு...

நம் உடலில் ஒவ்வோர் அணுவுக்குள்ளும் இயல்பாகவே ஒளிந்திருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை, `செல் மீடியேட்டட் இம்யூனிட்டி’ (Cell Mediated Immunity) என்பார்கள். இந்த எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால், தொற்றுக்களை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் உடலைத் தொந்தரவு செய்யாது. ஆனால், வெள்ளைச் சர்க்கரை, துரித உணவுகள், ட்ரான்ஸ் கொழுப்புகள் அடங்கிய பஃப்ஸ், ஃபிங்கர் ஃப்ரைஸ் சாப்பிடும்போது அந்த நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாகப் பராமரிக்கப்படுவது இல்லை’ என்கிறது நவீன அறிவியல். எனவே, குழந்தைகளுக்கு இதுபோன்ற உணவுகளைத் தரக் கூடாது. அதுதான் அவர்களை நோய்த்தொற்றில் இருந்து காப்பாற்றும் சிறந்த வழி. 

இயல்பாகவே மருத்துவக் குணமுடைய தேனில், கசப்பான, காரமான மூலிகைகளைக் கலந்துகொடுத்து, குழந்தைகளைப் பராமரித்தவர்கள் நாம். தூதுவளைப் பழத் தேன், மாதுளைப் பழத் தேன், மிளகுத் தேன், நெல்லித் தேன்... ஆகியவை சில உதாரணங்கள். அதேபோல் குழந்தைகளுக்கு `சுரசம்’ என்ற மூலிகை இலைச்சாற்றைக் கொடுக்கும் பழக்கமும் நம்மிடம் இருந்தது. கற்பூரவல்லி இலைச் சாற்றை தேனில் குழைத்து, லேசாக அனலில் காட்டி, தேன் பொங்கும்போது எடுத்து, ஆறவைத்துக்கொள்ளலாம். இதை, அவ்வப்போது சளித்தொற்று வரும் குழந்தைக்குக் கொடுக்கலாம். இதேபோல் துளசி, தூதுவளை இலையையும் கொடுக்கலாம்.

வெள்ளிப் பாத்திரத்தில் குழந்தைக்கு உணவு ஊட்டுவது நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். வெள்ளிப் பாலாடை, வெள்ளித் தட்டு பயன்படுத்த வாய்ப்பு உள்ளவர்கள் இவற்றை உணவுக் கலனாகப் பயன்படுத்தலாம். வெள்ளிக்கு மாற்று மண் பாத்திரம். மண் பாத்திரத்தில் சமைத்து, மண் கலனில் நீர்வைத்து அருந்துவதும் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தும்.

பாகற்காய்

பெரியவர்களுக்கு... 

* `சர்க்கரைநோய் / புற்றுநோய்க்காரர், சமீபத்தில் ஏதோ ஒரு நோயில் இருந்து மீண்டவர்கள், கர்ப்பிணிப் பெண், குழந்தை பெற்ற பெண், முதியோர் இவர்கள்தான் தொற்றுகளுக்கு அதிகம் ஆளாகக்கூடிய `வல்னரபிள் குரூப்’ (Vulnerable Group)’ என்கிறது மருத்துவ உலகம். 

* இவர்களுக்கு காலையிலும் மாலையிலும் தேன் சேர்த்த, பால் சேர்க்காத தேநீர், லேக்டோபேசில்லஸ் (Lactobacillus) எனும் புரோபயாட்டிக் சேர்ந்த இட்லி/கம்பங்கூழ், ஆப்பத்துக்குத் தொட்டுக்கொள்ள தேங்காய்ப்பால், மதிய உணவில் ஒரு கீரை... இவையெல்லாம் தொற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்புக் கவசங்கள். 

* சர்க்கரைநோய் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் இனிப்புக்கு பனைவெல்லம், தேன் அல்லது ஆர்கானிக் நாட்டுவெல்லம் இவற்றில் ஒன்றைப் பயன்படுத்தலாம். 

* காரம் தேவைப்படும்போது மிளகைச் சேர்த்துக்கொள்வது சுவையுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும். 

* ஏழு மணி நேரம் நல்ல உறக்கத்துக்குப் பின், இளங்காலை வெயிலில் 20 நிமிட நடை; பிறகு பிராணாயாமம்; நலுங்கு மாவு தேய்த்துக் குளியல்; காலையில் கரிசாலை முசுமுசுக்கைத் தேநீர்; மதியத்துக்கு தூய மல்லிச்சம்பா சாதம்; அதற்கு மிளகு-வேப்பம்பூ ரசம்; தொட்டுக்கொள்ள நெல்லிக்காய் துவையல், இரவில் சிவப்பு அரிசி அவலுடன் சிவப்பு கொய்யா சாப்பிட்டு வந்தால், எந்தத் தொற்றும் நெருங்காது. 

* எண்ணெய்க் குளியல், உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உதவும். நிணநீர் ஓட்டத்தைச் (Lymphatic Drainage) சீராக்கி, உடலின் செல்களுக்கு இடையில் உள்ள வெப்பப் பரிமாற்றத்தைச் சூழலுக்கு ஏற்றபடி சீராக்கும். 

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவேண்டியது காலத்தின் கட்டாயம். அதற்கு கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகள் உதவும்.

தொகுப்பு: பாலு சத்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement