வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (21/02/2017)

கடைசி தொடர்பு:16:31 (21/02/2017)

நேற்று ஹாசினி... இன்று ரித்திகா... குற்றவாளிகளின் உளவியல் என்ன?

`வலியது வெல்லும்!’ இது இயற்கையின் நியதி! வலிமைதான் வெல்லும் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால், இங்கு வலிமையானது எது என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது. மனிதமே மனிதனாக இருப்பதற்கு அடிப்படை. சக மனிதர்களுக்கு இடையேயான அன்பு பலவீனப்பட்டு வலிமையானதாக இல்லாமல் போனதால்தான் எத்தனையோ இளம் பிஞ்சுகள் தொடர்ந்து காமுகர்களுக்கு இரையாக்கப்படுகின்றனர். நேற்று ஹாசினியைத் தொடர்ந்து இன்று ரித்திகாவின் கொடூரம் அரங்கேறியுள்ளது. 

ரித்திகா

ஒவ்வொரு நிகழ்வின்போதும் ஏதோ ஓர் எதிர்ப்பைக் காட்டிக்கொண்டுதான் இருக்கிறோம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பொதுமக்களின் கண்டனங்களைக் காண முடிகிறது. பெற்றோர்களைப் பாதுகாப்பாக இருக்கச் சொல்லியும், குழந்தைகளைக் கவனமாக இருக்கச் சொல்லியும் அறிவுறுத்துகிறோமே தவிர, வலிமையானதாக நிகழ்த்தப்படவேண்டிய எந்தச் சட்டத் திருத்தங்களையும் நாம் உருவாக்கவில்லை. இதனால்தான் இத்தனைக் கொடூரங்களையும் மக்களுள் மக்களாக ஒளிந்து நிகழ்த்திக்கொண்டிருக்கும் அந்த மனநோயாளிகளை இனம்காண முடியாமல் தொடர் நிகழ்வுகளுக்கு நாமும் உறுதுணையாக இருக்கிறோம். கிட்டத்தட்ட தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த நிகழ்வுகளை வேறு காரணங்களை முன்னிறுத்தி மூடி மறைக்கின்றனர் அல்லது இதைச் சரிசெய்ய வீரியமான ஒரு குழு செயல்பாட்டிலேயே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 

அன்று 7 வயது இன்று 3 வயது... ஏற்கெனவே எட்டு மாதக் குழந்தையைக்கூட இழந்து நிற்கும் நிலையில், இன்னமும் அந்த மனநோய் சமூகத்தைப் பண்படுத்தவோ, முடியாத நேரத்தில் அழித்தொழிக்கவோ நம் சட்டதிட்டத்துக்கு மனமில்லை என்றால் குழந்தைகள் நம் தலைமுறையின் அடையாளமாகப் பார்க்கப்படவில்லை, வெறும் தசைப்பிண்டமாக மட்டுமே பார்க்கப்படுகின்றனர் என்பதுதான் உண்மை. இந்த நிலையில் இந்த மனநோயாளிகளின் முன் சமூகமும் அதன் சட்டதிட்டங்களும் எதற்கும் உதவாதவையாக உள்ளன என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இளம் பிஞ்சுகளுக்கு தொடரும் அவலம்!

ஒருகாலத்தில் புறமுதுகிட்டவனையும், ஆயுதமற்றவனையும் கொல்லப் போர்முனையில்கூட துணிவதில்லை, இன்றைய நவீன வாழ்க்கை, போர்முனையைவிட அத்தனை கொடுமையானதாக மாறிவிட்டதா? வளர்ப்பில் ஏற்படும் குறைபாடுகள்தான் இப்படிப்பட்ட மனநோய் மனிதர்களை உருவாக்குகிறது என்பதும் உண்மை. பெற்றோர்களின் கவனமற்ற வளர்ப்பும், வாழத் தகுதியற்ற சூழலும் இவர்களின் சிறு அல்லது இளம் பிராயத்திலேயே இதுபோன்ற எண்ண அலைகளை மனச்சிதைவுகளாக விதைத்துவிடும். பாலியல் பற்றிய ஆர்வம் இயல்பானது என்றாலும், அதை வக்கிரமாக்கும் இன்னொரு குற்றவாளியாக இன்டர்நெட் இன்று நம் முன் நிற்கிறது. 

செய்தித்தாள்களில்கூட முக்கால் நிர்வாணப்படங்களை வெகு எளிதாகப் பார்த்துவிடும் இவர்களுக்கு, இந்தச் சமுதாயத்தின் எல்லா மாற்றங்களையும் உடல் அளவிலேயே சிந்திக்க முடிகிறது. பெண்களின் உடலை போகப் பொருளாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த நுகர்வு கலாசாரம்தான் உண்மையில் மனநோய் சமூகத்தின் முதல் அறிகுறி. இதுதான் எதிரில் நிற்பது ஏதுமறியா பிஞ்சுக் குழந்தை என்பதை உணரவிடாமல் செய்து, அவ்வுடலை ஒரு வளர்ந்த பெண்ணின் அடையாளமாக ஒப்பிட்டுப் பார்க்கச் செய்கிறது. அதன் வழி தூண்டப்பட்டு, தன் வக்கிரங்களை நிறைவேற்றிக்கொள்ள இந்த மன நோயாளிகளுக்குத் தூண்டுதலாக நிற்கிறது. சக வயதுடைய பெண்ணிடம் நிகழ்த்த இயலாத எண்ணங்களை ஏதுமறியா குழந்தைகள் மீது நிகழ்த்தத் துடிப்பதும், கொன்று குவிப்பதும் ஆண்மையில் சேராது என்பதை அவர்களைச் சுற்றியிருக்கும் குடும்ப அமைப்பும் வளர்ப்பு முறைகளும் உணர்த்த வேண்டும்.  

குற்றவாளிகள்

பிறப்பால் சமமாக இருந்தும், வளர்ப்பால் மிருகங்களாக மாறும் இந்தக் குற்றவாளிகள் எப்படிப்பட்டவர்கள்? 

· நிச்சயம் தைரியமற்ற கோழைகள். படங்களில் காட்டப்படுவதுபோல வித்தியாசமான தோரணைகளோ, இருப்பிடமோ இவர்களுக்கு இருக்காது.

· பக்கத்து வீடு, மிகத் தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் என்ற போர்வையில்தான் இவர்களால் இந்த வக்கிரங்களை தைரியமாக நிகழ்த்த முடியும் என்பதால், குடும்ப மற்றும் சமுதாயத்தோடு இணைந்தே உலவிக்கொண்டிருப்பார்கள். 

· பெரும்பாலும் நல்லவர்களுக்காக சமுதாயம் குறிப்பிட்டுக் காட்டும் அனைத்துத் தகுதிகளும் தங்களுக்கு இருப்பதாகவே வெளிக்காட்டிக்கொள்வார்கள். 

· பேசுவதில் தெளிவிருக்காது.

· `ஆன்மிகத்தில் அதிக நாட்டம் இருப்பவர்போலவும், அதிகம் பேசாதவர்களுமாக இவர்கள் இருப்பார்கள்’ என்கிற மனநல ஆலோசகர் டாக்டர் ஷாலினியின் மேற்கோளை இங்கு ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்.

உண்மையில், பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் கொடுக்கும் அறிவுரையைவிட, இதை நிகழ்த்தும் குற்றவாளிகளுக்கும் அவர்களை ஆதரிக்கும் அவர்களின் குடும்ப அமைப்புக்கும்தான் ஆலோசனை வழங்கவேண்டியிருக்கிறது. இந்த மன நோயாளிகளை இனம் கண்டு, கவுன்சலிங் அளிப்பதும், குற்றம் நேர்ந்த பின் அவர்களைச் சமுதாயத்தில் இணையவிடாமல் மனநோயை சமநிலைக்குக் கொண்டுவருவதும், காவல் அல்லது அரசின் தனித்துறையின் தொடர் கண்காணிப்பும்தான் இந்த கொடூரங்களை நிறுத்த ஓர் அரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய கடமைகள். இதைத் தவிர்த்துவிட்டு, நம்மைச் சுற்றியிருக்கும் ஒவ்வொரு குழந்தையின் பாதுகாப்பும் நம்மைச் சேர்ந்தது என்ற கவனத்துடன் இன்றைய ஒட்டுமொத்த சமூகமும் இயங்க வேண்டும். பிரச்னைக்குரிய ஆட்களை இனம் காண்பதற்குள்ளாகவே இந்த அவலங்கள் நடைபெற்றுவிடுவதால் பெற்றோர்கள், குழந்தைகள் என இல்லாமல் `சிறார் பாதுகாப்பு’ என்பதை ஒவ்வொரு தனிமனிதனின் கவனத்துக்கும் கொண்டு செல்வதற்கான விழிப்புஉணர்வு திட்டங்கள், பிரசாரங்கள், விவாதங்கள் விளம்பரம், குறும்படம்... எனப் பல செயல் வடிவங்களை மேற்கொள்ள வேண்டும். இதைத் தன்னார்வ அமைப்புகளும் அரசும் இணைந்து நிகழ்த்த வேண்டும்.  

தண்டனை

தண்டனைகள் ஒரு குற்றவாளியை உணர்வளவில் தண்டிப்பதாக அமைய வேண்டும். அதுதான் ஒரு சக மனிதனின் உணர்வைப் புரிந்துகொள்ளச் செய்யும் அதைத் தவிர்த்துவிட்டு, குற்றவாளிகளுக்கு சில ஆண்டு சிறை தண்டனையும், குறிப்பிட்ட தண்டனைத் தொகையும், பெயில் சிஸ்டமும் அனுமதிக்கப்படுவதால், இந்தக் குற்றங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுமேயன்றி இவற்றை வேரறுக்க வழியில்லை. 

இப்படிப்பட்ட வலுவற்ற சமுதாயத்தில் பெண் குழந்தைகள் பிறப்பதும்கூட ஒரு சாபக்கேடே!   

- மதுமிதா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்