எது ஆரோக்கிய டயட்? 12 நம்பிக்கைகள்... உண்மைகள்..! #DietTips

`சரி’ என நாம் நினைத்துச் செய்யும் பல பழக்கங்கள் தவறாக இருக்கக்கூடும். அவற்றில் முக்கிய இடம் வகிப்பது ஆரோக்கியமான உணவுப் பழக்கம். இதில், நம் நம்பிக்கை ஒன்றாகவும், உண்மை வேறுவிதமாகவும் இருப்பது யதார்த்தமே! சிலருக்கு இந்த டயட் சிறந்ததா என்கிற குழப்பம்கூட எழும். அவர்களுக்காக எது ஹெல்த்தி டயட் என்பதையும், உணவுப் பழக்கத்தில் நிலவும் 12 நம்பிக்கைகள் பற்றியும் பார்க்கலாம்... அவற்றுக்கான உண்மைகள் இங்கே... 

டயட் நம்பிக்கை - உண்மை

 

டயட்

நம்பிக்கை: நீங்கள் விருப்பப்படுவது எதுவாக இருந்தாலும், அதையே உங்களுடைய காலை உணவாக்கிக்கொள்ளுங்கள்.

உண்மை: ஒரு சிறந்த காலை உணவு என்பது புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அடங்கிய உணவாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, காலை உணவாக இட்லி - சாம்பாரைச் சாப்பிடுவது சிறந்தது. 

 

தண்ணீர் நம்பிக்கை: ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு கிளாஸ் (2 1/2 லிட்டர் முதல் 3  லிட்டர்) தண்ணீர் குடிக்க வேண்டும்.

 உண்மை: உடலுக்குத் தேவையான அளவுக்கான தண்ணீரைக் குடிப்பதே போதுமானது. தாகம்  வரும்போதெல்லாம் குடிக்கலாம். சிறுநீர் மஞ்சளாக கழிப்பது போன்ற அறிகுறிகளை வைத்தும் உடலுக்கான நீர்த்  தேவையை புரிந்துகொள்ள முடியும்.

ஜூஸ்

 

நம்பிக்கை: அதிகமாகப் பழச்சாறுகள் அருந்துவதுதான் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைத் தரும்.

உண்மை: தினசரி மூன்று கிளாஸ் சர்க்கரை சேர்க்காத பழச்சாறே நம் உடலுக்குப் போதுமான அளவு ஊட்டச்சத்துகளைத் தந்துவிடும். பழச்சாறைவிட பழங்களை சாப்பிடுவது நல்லது.

 

கொழுப்பு உணவுகள்

 

 நம்பிக்கை: கொழுப்பு உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

 உண்மை: அதிகப்படியான கொழுப்பு உணவுகளை எடுத்துக்கொள்வதைக்  குறைத்துக்கொள்வதுதான் நல்லது. நம் உடல் இயங்குவதற்குத் தேவையான அளவு கொழுப்புள்ள உணவை  எடுத்துக்கொள்வதில் தவறில்லை. 

 

 

ஆலிவ் எண்ணெய்

நம்பிக்கை: ஆலிவ் எண்ணெயில் குறைந்த அளவு கலோரி உள்ளது.

உண்மை: ஆலிவ் எண்ணெயில்தான் மற்ற எண்ணெய்களில் உள்ளதைவிட அதிக அளவு கலோரி உள்ளது. ஆனால் இது உடலுக்கு ஆரோக்கியமானது. சாலட் போன்ற அடுப்பில் வைத்து சூடுப்படுத்தாத உணவுகளில் ஆலிவ் எண்ணெயைச் சேர்க்கலாம். பொரிப்பது, வதக்குவது போன்ற  இந்திய சமையல் முறைக்கு ஆலிவ் எண்ணெய் ஏற்றது அல்ல.

பிரெட்

 

 நம்பிக்கை: வெள்ளை பிரெட்டுகளைவிட பிரவுன் பிரெட்டுகளே சத்தானவை.

 உண்மை: வெள்ளை பிரெட் மற்றும் பிரவுன் பிரெட் இரண்டிலும் ஏறக்குறைய ஒரே அளவு கலோரிதான்  உள்ளது.

 

சாக்லேட்

 

நம்பிக்கை: சாக்லேட் சாப்பிடுவது உடலுக்குக் கெடுதியானது.

உண்மை: ஒரு சாக்லேட் துண்டு சாப்பிடுவது,  நம் உடலுக்கு நன்மையைத் தரும். அதுவும் டார்க் சாக்லெட்டாக இருப்பது நல்லது.

 

காய்கறிகள்

 

 நம்பிக்கை: பழங்கள் மற்றும் காய்கறிகள் இரண்டுமே ஒரே அளவு  ஊட்டச்சத்துகளைத்தான் நமக்குத் தருகின்றன. 

 உண்மை:  பழங்களைவிட அதிக அளவு ஊட்டச்சத்து நிறைந்தவை காய்கறிகளே. எனவே,  மூன்று கப்  காய்கறிகளையும் ஒரு கப் பழங்களையும் சாப்பிடுவது நல்லது.

உடற்பயிற்சி

 

 

நம்பிக்கை: குறைந்த அளவு உணவு சாப்பிட்டால், உடல் எடை குறையும்.

உண்மை:  ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொண்டாலே உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். உடற்பயிற்சி செய்வது அவசியம்.

 

பழங்கள்

 

நம்பிக்கை: பழங்களை ஒருவேளை உணவாகச் சாப்பிட்டால் நல்லது.

 உண்மை:  இரண்டு உணவு நேர இடைவெளியில்கூட,  பழங்களைச்  சாப்பிடலாம். ஒருநாளைக்கு இரண்டு வகைப் பழங்களை சேர்த்துக்கொள்வது நல்லது.

நாட்டுச் சர்க்கரை

​​​​​

நம்பிக்கை: நாட்டுச்சக்கரை, வெள்ளைச் சர்க்கரையைவிட ஆரோக்கியமானது.

உண்மை: வெள்ளை மற்றும் நாட்டுச்சர்க்கரை இரண்டும் ஒரே அளவுக்கான கலோரிகளை கொண்டுள்ளன. ஆனால், வெள்ளைச் சர்க்கரையால் ஏற்படும் பாதிப்புகள் நாட்டுச்சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படுவதில்லை.

சாப்பாடு

 

நம்பிக்கை:  மாலை 6 மணிக்கு மேல் சாப்பிடக் கூடாது.

 உண்மை: நாம் தூங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பாக உணவு உண்ண வேண்டும். சாப்பிட்டவுடன் உறங்கச்  செல்லக் கூடாது.

 

- ச.மோகனப்பிரியா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!