Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அந்நிய, உள்நாட்டுக் குளிர்பானங்கள் குடிக்கலாமா? மருத்துவரின் விளக்கம்! #CoolDrink

“ ‘ஒரு ஃபுல் மீல்ஸ் வித் (மினி) குளிர்பானம் குடிச்சா சொர்க்கம்’ என்பது இன்றைய நாகரிக உலகின் உணவுக் கலாசாரம்! பல உணவகங்களில் உணவுப் பொருளுடன், 500 மி.லி அளவில், தண்ணீருக்கான இடத்தையும் தானாகவே ரீப்ளேஸ் செய்துவிட்டது. `குளிர்பானங்களைக் குடிக்கக் கூடாது!’ எனக் கூட்டாக குரல்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன. இந்த வேளையில், மருத்துவரீதியாகவும் குளிர்பானங்கள் குறித்த உண்மைகளைச் சற்றே யோசிக்கவேண்டியிருக்கிறது’’ என்கிறார், மருத்துவர் ஜி.பாலசுப்ரமணியன். அதோடு, பன்னாட்டு கம்பெனிகளின் தயாரிப்புகளான குளிர்பானங்களில் சேர்க்கப்படும் பொருள்கள், நம் உடலுக்கு ஏற்படுத்தும் விளைவுகள் அத்தனையையும் குறித்து விரிவாகப் பேசுகிறார் இங்கே...  

குளிர்பானம்

குளிர்பானத்தில் என்னென்ன இருக்கின்றன?

ஹை ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப் (High fructose Corn Syrup), பாஸ்பாரிக் அமிலம் (Phosphoric Acid), கஃபைன்... இவைதான், குளிர்பானத்தின் முக்கியக் கூட்டுப் பொருள்கள்.

கார்பனேட்டட் குளிர்பானங்கள் உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடியவை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வெறும் கார்பன் டை ஆக்ஸைடு சேர்க்கப்படுவதால்தான் இவை உடலுக்குத் தீங்கு விளைவிக்கின்றனவா? கண்டிப்பாக இல்லை. இதில் கலக்கப்படும் இனிப்பூட்டிகள்தான் பக்க விளைவுகளுக்கு முக்கியக் காரணம். `வெறும் சர்க்கரை அப்படியென்ன செய்துவிடப்போகிறது என்கிற அலட்சியம் வேண்டாம். `ஃப்ரக்டோஸ்’ என்ற இந்த இனிப்பூட்டி, ஏறக்குறைய ஆல்கஹாலுக்குச் சமம்’ என எச்சரிக்கின்றன ஆய்வுகள்.

குளூக்கோஸ் - ஃப்ரக்டோஸ்... இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

குளூக்கோஸ் ஓர் எளிய சர்க்கரை மூலக்கூறு. அதனால், நமது உடலால் எளிதில் செரிக்கப்பட்டு, கார்போஹைட்ரேட்டாக மாற்றப்பட்டு, இறுதியில் ஆற்றல், மூலக்கூறு மற்றும் கிளைக்கோஜனாகச் சேமிக்கப்பட்டுவிடுகிறது. குளுக்கோஸ், மூளையில் உள்ள `பசி தூண்டுதல்’ மையத்தில் செயல்பட்டு, வயிறு நிறைந்தது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்திவிடும். ஆனால் ஃப்ரக்டோஸ் இப்படிச் செயல்படாது என்பதால், அதிகமாகச் சாப்பிடத் தோன்றும். மேலும், ஃப்ரக்டோஸ் மூலக்கூறு செரிமானம் ஆவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால், இதன்மூலம் இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகளும் உருவாக வாய்ப்பு உண்டு. 

கஃபைன் 

இது, மூளையின் செயல்பாட்டைத் தூண்டக்கூடிய பொருள். இதுதான் குளிர்பானம் குடித்தவுடன் நமக்குள் ஏற்படும் புத்துணர்ச்சிக்கு முக்கியக் காரணம். நாம் தினமும் குடிக்கும் டீயிலும், காபியிலும்கூட இது இருக்கிறது. ஆனாலும், ஒரு 200 மி.லி குளிர்பானத்தில் கிட்டத்தட்ட 64 மி.கி கஃபைன் இருக்கிறது. இந்த அளவுதான், குழந்தைகளுக்கு தூக்கமின்மை, வயிற்றுக் கோளாறுகள் மற்றும் அதிகப்படியான கோபத்தை ஏற்படுத்தும்.

குளிர்பானங்கள்

350 மி.லி குளிர்பானம் குடித்தால், நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்?

அன்றாட வாழ்வில், ஓர் ஆணுக்கு 150 கலோரிகள் அல்லது 9 டீஸ்பூன்கள் சர்க்கரை தேவைப்படும். பெண்ணுக்கு 100 கலோரிகள் (6 டீஸ்பூன்கள்) தேவைப்படும். ஒரு சிறிய டின் அளவிலான குளிர்பானத்தை அருந்துவதன்மூலமாக, ஒரே நேரத்தில் 160 கலோரிகள் சர்க்கரையை எடுத்துக்கொள்கிறோம். ஒரு நாளுக்குத் தேவையானதைவிட அதிக அளவு சர்க்கரையை எடுத்துக்கொள்வதால், இன்சுலின் அதிகம் சுரந்து, உடல்பருமனுக்கு வழிவகுக்கும். பொதுவாக, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால், கல்லீரல் மூளைக்கு சிக்னல் அனுப்பும். அப்போதுதான் சாப்பிட்ட திருப்தி உணர்வு கிடைக்கும். பாஸ்பாரிக் அமிலமும் ஹை ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப்பும் கல்லீரல் தரும் சர்க்கரை அளவு அதிகரித்துவிட்ட உணர்வை மூளைக்கு அனுப்பாது. இதனால்தான் பசி இல்லாவிட்டாலும், மேலும் மேலும் உணவைச் சாப்பிடுகிறோம்.

அடுத்த 20 நிமிடங்களில்...

பசி இல்லாவிட்டாலும், அதிகப்படியான உணவை உண்கிறோம். அதனால், உணவில் உள்ள கார்போஹைட்ரேட் சர்க்கரையாக மாற்றப்படும். சர்க்கரையை நம் செல்களிடம் கொண்டுசெல்ல இன்சுலின் தேவை. ரத்தத்தில் எவ்வளவு சர்க்கரை இருக்கிறதோ, அதற்குத் தேவையான அளவு இன்சுலினைக் கணையம் சுரக்கிறது. ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை உடல் பயன்படுத்திக்கொள்ளும். தேவையைவிடக் கூடுதலாக இருக்கும் சர்க்கரையைப் பிந்தைய தேவைக்காக, கொழுப்பாகச் சேமித்துவைத்துக்கொள்ளும். அதிக சர்க்கரை, குறைவான உழைப்பு போன்றவற்றால் உடலில் கொழுப்பு சேரும். இதன் முதல் விளைவு... உயர் ரத்த அழுத்தம், கொழுப்பாக மாறும் சர்க்கரை அதிகரிப்பதால், உடல்பருமன், சர்க்கரைநோய்.

40 நிமிடங்களில்...

கஃபைன் முழுவதும் உடலால் கிரகிக்கப்பட்டிருக்கும். மூளையின் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய இது, கருவிழிகளை அதிகளவில் விரிவடையச் செய்யும். ரத்த அழுத்தம் அதிகமாகி, ரத்த ஓட்டத்தில் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கும். 

கூல் டிரிங்க்

45 நிமிடங்களில்...

கஃபைன் ஏற்படுத்திய விளைவால், மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தக்கூடிய `டோபமைன்’ எனும் ரசாயனம் தூண்டப்படும். இதனால், அந்த நேரத்தில் மட்டும் அதீத உற்சாகத்துடனும் தூண்டலுடனும் மனம் இருக்கும். பயத்தை ஏற்படுத்தக்கூடிய `அட்ரினலின்' (Adrenalin) எனும் ஹார்மோனும் சுரப்பதால், மூளை அலெர்ட்டாகவே இருக்கும். ரத்த அழுத்தமும் இதயத்துடிப்பும் அதிகரிக்கும்.

60 நிமிடங்களில்...

குளிர்பானத்தில் இருக்கும் பாஸ்பாரிக் அமிலம், உணவில் உள்ள கால்சியம், மக்னீஷியம் மற்றும் ஜிங்க் போன்ற மூன்று  தனிமங்களையும் இணைப்பதால், வளர்சிதை மாற்றம் அதிகரிக்கப்பட்டு, சிறுநீரில் அதிகளவில் கால்சியம் வெளியாகும். நீர்ச்சத்து அதிக அளவில் உடலிலிருந்து இழக்கப்பட்டு, உடல் அயற்சியின் காரணமாக பிறகு மீண்டும் ஒரு கப் குளிர்பானத்துக்கு நமது மனது தூண்டப்படுகிறது. இது இப்படியே ஒரு சுழற்சியாக மாறிவிடுகிறது.

ரெகுலர் குளிர்பானம் - டயட் குளிர்பானம்... என்ன வித்தியாசம்?

`இதை அருந்துங்கள்... எடை அதிகரிக்காது’ - இதுதான் டயட் குளிர்பானத்துக்கான விளம்பரம். ரெகுலர் குளிர்பானத்தில் சேர்க்கப்படுவது அதிக வீரியம் மிக்க ஃப்ரக்டோஸ் சுகர் சிரப்பிலிருந்து தயாரிக்கப்படும் இனிப்பூட்டிகள். இவை, அதிக அளவில் கலோரி சத்துடையவை என்பதால், எளிதில் உடல் எடையைக் கூட்டக்கூடியவை. ஆனால், டயட் குளிர்பானத்தில் சேர்க்கப்படும் ஆஸ்பார்டேம் (Aspartame) போன்ற செயற்கை இனிப்பூட்டிகள், கலோரிகள் குறைவு எனச் சொல்லப்படுகிறது. ஆனால், அது உண்மை இல்லை. சர்க்கரையைவிட 200 மடங்கு ஆஸ்பார்டேமில் இனிப்புச் சுவை அதிகமாக இருக்கிறது. இவை, எடையை அதிகரிக்கச் செய்யும். மேலும், பல நோய்களுக்கு வாசலாக அமையும். பொதுவாக குளிர்பானங்கள் உடலுக்கு கெடுதியே. டயட் குளிர்பானமாக இருந்தாலும் சரி, அவற்றையும் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதுதான் மருத்துவர்களின் ஸ்வீட் அட்வைஸ்.

- அ.ஷியாமளா கௌரி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement