`நெடுவாசல் வாழைப்பழம்!’... இயற்கையை நேசிப்பவர்களின் உளவியல் சொல்வது என்ன? #SaveNeduvasal | Neduvasal Banana ... Psychoanalysis of Nature lover

வெளியிடப்பட்ட நேரம்: 18:08 (03/03/2017)

கடைசி தொடர்பு:13:06 (05/08/2017)

`நெடுவாசல் வாழைப்பழம்!’... இயற்கையை நேசிப்பவர்களின் உளவியல் சொல்வது என்ன? #SaveNeduvasal

சென்னையில் குடிபெயர்ந்த நாள் முதல், கிராமத்து வாசனையை முகர்ந்து பார்க்கக் கிடைத்த ஒரே வாய்ப்பாக இருந்தவற்றில் நெடுவாசல் வாழைப்பழமும் ஒன்று!

நெடுவாசல்

60 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவரும் அவரின் துணைவியாரும் எங்கள் வீதியில் தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்கிறார்கள். கிட்டத்தட்ட பத்து வருடங்களாக நான் அவர்களை அறிந்துவைத்திருக்கிறேன். டீக்கடை, ஹோட்டல் என அனைத்தும் மூடிய பின்னரும், நள்ளிரவிலும் விற்பனை செய்வார்கள். போன மாதம் முழுவதும் அவர்களின் கடை இல்லாமல் போனது. `பத்து வருடங்களாகப் பார்த்து வந்த மனிதர்களிடம் தொலைபேசி எண்ணைக்கூட வாங்கிக்கொள்ளவில்லையே...’ என என்னை நானே நொந்துகொண்டேன். 

அக்கம் பக்கக் கடைக்காரர்களிடம் கேட்டபோது, என்னைவிடப் பரிதாபமாக பதில் சொன்னார்கள். வயதானவர்கள் என்பதால், மனம் எதை எதையோ கணக்கிட்டுக்கொண்டிருந்தது. சமீபத்தில் பத்து நாள்களுக்கு முன்னர்தான் மீண்டும் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. ஏதோ பள்ளிகால ஸ்நேகிதம்போல பார்த்தவுடனேயே எமோஷனலாகப் பேசத் தொடங்கிவிட்டேன். அது வரை பழம் பற்றிக் கேட்பதும், விலை சொல்வதும்... என ஓரிரு வார்த்தைகளுக்குள் நகர்ந்துவிடுவேன் என்பதால், அவர்கள் என்னைச் சற்று வியப்புடன் பார்த்தனர். 

``நம்பர் கொடுங்க...’’ என கேட்டு வாங்கிக்கொண்டேன். 

நினைத்ததுபோல அவருக்கு உடல்நிலை சரியில்லை. `இப்போது தேவலாம்’ என அந்தப் பாட்டி சொன்னார். 

வாழை

``உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள், இனியாவது விரைவில் கடையை அடைத்துவிட்டு, நேரத்துக்குத் தூங்குங்கள்!’’ எனச் சொன்னதும், அந்தத் தாத்தா சொன்ன பதில்... ``ஐ.ஏ.எஸ் படிக்கிற பாதிப் புள்ளைங்க இங்கேதாம்மா வாழைப்பழம் வாங்குவாங்க. அது மட்டுமில்லை, மார்க்கெட்டிங் மாதிரி கம்மி சம்பளக்கார பேச்சுலர் பசங்கல்லாம் எத்தனை மணி நேரம் ஆனாலும் இங்கேதான் வருவாங்க. `ரூமுக்குப் போற வரைக்கும் பசி தாங்க முடியலை’னு இங்கேயே சாப்பிடுவாங்க, இத பாரு...’’ என ஒரு பெரிய கவரைக் காட்டினார் அதில் அவ்வளவு வாழைப்பழத் தோல்கள். அத்தனையும் அவர்கள் சாப்பிட்டுவிட்டுப் போட்டவை, இதை இவர் வெளியில் திரியும் மாடுகளுக்கு கொடுத்துவிடுகிறார். இதற்கு மேல் அவர் சொன்னது... `பாதிப் பேருக்கு இதுதாம்மா சாப்பாடு, நானும் ஏ.சி கடைக்காரன் மாதிரி கடையைச் சாத்திட்டா, அவங்க பட்டினியாத்தான் தூங்கணும். பசிக்கிறவன் கொடுமை, விவசாயிக்கும் என்னை மாதிரி ஏழைக்கும்தாம்மா தெரியும்.” 

அவர் விற்பது, `நெடுவாசல் வாழைப்பழம்’ என அந்தச் சந்திப்பில்தான் நான் கேட்டறிந்தேன். சென்னைவாசியாக இத்தனை வருடங்கள் நெடுவாசலுடனான என் தொடர்பு இப்போதுதான் எனக்கும் புரிந்தது. `ஏதோ 500 பேருக்கு வேலை கிடைக்கும், இத்தனை கோடி வருமானம் வரும்...’ என `ரமணா’ பட சென்சஸ்போல பட்டியல் போட நான் இங்கு வரவில்லை, ஏழைகளின் பசியாற்ற எங்களுக்கு இருக்கும் நெடுவாசல் வளம் என்பது வெறும் மா, பலா, வாழை, உளுந்து, சோளம், கரும்பு, மலர்கள்... என விளைச்சலை மட்டும் சார்ந்தது அல்ல. இது மனிதனுக்கும் மனிதனுக்குமான தொடர்பு. மண்ணை மையப்படுத்தி உலகெங்கும் இணைந்துகிடக்கும் உறவுகளின் தொடர்ச்சி.

சென்னையில் எங்கோ ஐ.ஏ.எஸ் படித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு நெடுவாசலில் இருக்கும் 6,000 (ஏறத்தாழ) விவசாயிகள்தான் இரவு உணவை நஞ்சின்றி வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். `நெடுவாசல் இல்லைனா வேற ஊரே இல்லையா... வாழைப்பழம் கிடைக்காமலா போய்விடும்?’ என குறுக்குக் கேள்விகளை வைத்தால், இப்படித்தான் தமிழ்நாட்டில் பாதி இடங்கள் தரிசாக கிடப்பதாகத் தோன்றுகிறது. 

தரிசு நிலம்

தினம் தினம் பல்வேறு ஊடகங்களில், அதிக உரமிடப்பட்டு மலடாகிப்போன நிலங்களைப் பார்க்கிறபோது, ஒரு காலத்தில் செயற்கை உரத்தை இப்படித்தான் தீங்கில்லை என நம்பியிருந்தது நினைவுக்கு வருகிறது. `எப்போதுமே ஏதோ ஒரு பயத்தில் உணவை உட்கொள்வது எத்தனை பெரிய அச்சுறுத்தல்’ என்பதைத் தன் குடும்பத்துக்காகச் சமைக்கும் ஒவ்வொரு பெண்ணும் உணர்ந்திருப்பாள். ஊர்க் காய்கறிகள் கிடைக்காத நிலையில், இயற்கை விவசாயப் பொருள்களுக்கு இரு பங்கு விலை கொடுத்து, ஒரு கிலோ கத்திரிக்காய் வாங்கும் இடத்தில் அரை கிலோவை வாங்கிச் சமைக்கும் அளவுக்கு உணவின் மீதான நச்சுத்தன்மையின் தீவிரம் எங்களைப் பெரிதும் அலைகழிக்கிறது. சாதாரண மனிதனுக்கே பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கும்போது, தலைமுறைகளுக்காக மீதமிருக்கும் ஏதோ சில நல்ல விளை நிலங்களையும் குறிபார்ப்பது எங்களைப் போன்ற ஒட்டுமொத்தத் தமிழர்களின் உணவுக் கலாசாரத்தைப் பற்றிய கவனமின்மையாகவே தெரிகிறது. ஒருபுறம் இது புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் விவாசாயக் குடும்பங்களின் பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படுவது இந்த நூற்றாண்டின் கேலிக்கூத்து. 

`இந்த இயற்கை எரிவாயு எங்களுக்குத் தேவையில்லை’ என யாரும் சொல்லவில்லை. பெட்ரோல் பங்க்கில், `செல்போன் உபயோகிக்காதீர்!’ என எழுதும் அபாய எச்சரிக்கையாகவே இதை நாங்கள் பார்க்கிறோம். இதனால் பிரச்னையில்லை என்றாலும், விவசாயமும் விவசாயம் சார்ந்த பூமியும் எங்கள் தலைமுறைகளுக்கான சொத்து. ஏற்கெனவே பள்ளி, கல்லூரி, ஹோட்டல்களுக்கு இணையாக மருத்துவமனைகள் பெருகிவிட்டன. எந்த மருத்துவரிடம் சென்றாலும், பணத்தை தின்னச் சொல்லி எவரும் அறிவுறுத்துவதில்லை. `பச்சைக் காய்கறிகளை அப்படியே சாப்பிடுங்கள்’, `தினமும் ஒரு பழம் அவசியம் சாப்பிடணும்’, `கரும்பு இயற்கைக் கழிவு நீக்கி... சாப்பிடுங்கள்’ என உணவைத்தான் உண்ணச் சொல்கிறார்கள். எனவே, வாழ்வாதாரத்தை இழந்துவிட்டு வசதிக்கு ஆசைப்பட்டால், நுனிக்கிளையில் அமர்ந்து அடிமரத்தை வெட்டுவதாகிவிடும். எனக்கு மட்டுமல்ல... பல லட்சக்கணக்கான இயற்கையை நேசிப்பவர்களின் உளவியல் இப்படித்தான் இருக்கிறது!

- மதுமிதா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்