Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரசனை என்கிற மாயாஜாலம்... வாழ்க்கைப் பயணம் முழுக்க ஆனந்தம்! #MindRelax

`என்னப்பா... இப்பிடிக் கண்ணைக் கூசவைக்கிற மாதிரி கலர்ல சுடிதார் போட்டிருக்கே... உனக்குக் கொஞ்சமாச்சும் ரசனை இருக்கா?’ அவ்வப்போது இப்படி யாராவது, யாரிடமாவது பேசுவதை நாம் எல்லோருமே கேட்டிருப்போம். உடலுக்குப் பொருத்தமான அளவில், நிறத்தில் உடை உடுத்துவதுகூட ஒருவிதத்தில் ரசனை தொடர்பான விஷயமே! ரசனை என்பது இயல்பாகவே நமது மனதில் ஆழப்பதிந்த ஒன்றாக இருக்கிறது. ரசனை என்கிற மாயாஜாலம் மட்டும் இருந்தால், நம் வாழ்க்கைப் பயணம் முழுக்க ஆனந்தம் நம்மைத் தொடர்ந்து வரும்.

ரசனை

* சாலையைக் கடக்கும்போது, ரோட்டோரத்தில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் சிறு பொம்மைகளை அவ்வளவு எளிதாகச் சிலரால் கடந்து செல்ல இயலாது. நின்று, நிதானமாக பார்த்துவிட்டுத்தான் செல்வார்கள்.

* எச்சில் வடிய, பொக்கை வாயைத் திறந்தபடி சிரித்துக்கொண்டிருக்கும் மழலையை ரசிக்காமல் சிலரால் இருக்க முடியாது. பதிலுக்குச் சிரித்து, கையசைத்து, கண் சிமிட்டி, சில சமிக்ஞைகளைக் காட்டிவிட்டுத்தான் நகர முடியும்.

* பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் நம் கன்னங்களை வருடிய தென்றலையும், அந்த கணத்தில் பார்த்த மனதுக்கினிய காட்சிகளையும் பலர் மறந்திருக்க மாட்டார்கள். இதுவும் ரசனைப் படலத்தின் ஒரு பகுதியே!

இளையராஜா

* இளையராஜா இசையமைத்த ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தபடி, தனிமையில் கண்கலங்கிய நாட்கள் சிலரின் மனதில் இருந்து விடுபட்டிருக்க வாய்ப்பே இல்லை. 

இப்படி எதைப் பார்த்தாலும் கேட்டாலும் மனம் ரசிக்கத் தொடங்கிவிடுகிறது. சூழலுக்கு ஏற்ப, அவரவர் ரசனை வெளிப்படவும் செய்கிறது. அப்படி நாம் ரசிப்பதற்கும் அடிப்படைக் காரணங்கள் உள்ளன. அவற்றை நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார் மனநல மருத்துவர் கணேசன்...
 
கதைகள்

சிறு வயதில் நம்முடைய பாட்டியோ, தாத்தாவோ கதைகளை நம் கண்முன்னே காட்சிப்படுத்த முயற்சித்திருப்பார்கள். அப்போது அவர்கள் கூறிய கற்பனைக் காட்சிகள் அத்தனையும் நம் மனதில் ஆழப்பதிந்து போயிருக்கும். இவையும் நம் ரசனைத் தன்மைக்கு காரணங்கள்தான்.

கதைகள்

 
ரோல் மாடல்!

நம்முடைய ரோல் மாடல் என்று யாரையாவது வைத்திருப்போம். அவர் என்னென்ன செய்கிறாரோ அதை அப்படியே நாமும் பின்பற்றுவோம்.. `அது நல்ல விஷயமாக இருந்தாலும் சரி... .கெட்ட விஷயமாக இருந்தாலும் சரி... என்னுடைய ரோல் மாடலுக்கு மண்ணில் விழுகிற மழைத்துளியின் குதூகலத்தை ரசிப்பது பிடிக்கும் என்றால் எனக்கும் பிடிக்கும்’ என்கிறவர்களும் இருக்கிறார்கள்.
 
ஆளுமைகள்

ஒரு சராசரி மனிதனுக்குள் இயல்பாகவே பெற்றோர், குழந்தை, இளைஞர் என மூன்று குணாதிசயங்கள் உள்ளன. பெற்றோராக இருக்கும்போது `இதனைச் செய்.., செய்யாதே’ என்று கட்டுப்பாட்டுக்குள் குழந்தையை வளர்க்க நினைப்பார்கள். இளைஞராக இருக்கும்போது மனைவியைப் பாசத்தோடு கவனித்துக்கொள்வார்கள். குழந்தை எண்ணம் வரும்போது, தன் குழந்தையோடு சேர்ந்து தானும் குழந்தையாக மாறி விளையாடத் தொடங்கிவிடுவார்கள். இதுபோன்ற மனநிலைகளாலும், இயற்கையாகவே எந்த விஷயத்தையும் ரசனையுடனேயே கடந்துசெல்லும் வாய்ப்பு அமைந்துவிடும்.

காதல்

காதல்

ஓர் ஆண் ஒரு பெண்ணைக் காதலிப்பதுகூட ரசனையே. ஏனெனில், காதலும் ஒரு வகை ரசனையின் வெளிப்பாடுதான். அளவுக்கு அதிகமாக ஒருவரை ரசிப்பதால்தான் சம்பந்தப்பட்டவரைக் காதலிக்க வேண்டும் என்றும், திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் தோன்றுகிறது. இதற்கு புராணங்களிலும், கதைகளிலும், சினிமாவிலும் நாம் கேட்டு, பார்த்துப் பழகிய தலைவன்- தலைவி, நாயகன்- நாயகி காதல்களே காரணம். நாம் விரும்பிக் கேட்ட, பார்த்த விஷயங்களையே நாமும் பின்பற்ற விரும்புகிறோம். இதுதான் ரசனையின் முக்கியமான அம்சமாக இருக்கிறது.
 
இதுபோன்ற காரணங்களாலேயே நாம் எந்த விஷயத்தையும் ரசனையுடனேயே பார்க்கிறோம். இவை நம் மனதில் ஆழப் பதிந்து, நம் ஆயுள் முழுவதும் கூடவே வருபவை. எனவே, அவற்றை இன்னும் அதிகமாக நேசித்து, ரசித்து, மகிழ்ந்து கடந்து செல்வோம். எதையும் அவசரம் அவசரமாக செய்யாமல் ரசனையோடு செய்து பழகுவோம். ரிலாக்ஸான மனநிலையில் இருப்பதும் ஒரு வகையில் தியானம்தான். இதனால், உங்கள் வாழ்க்கைப் பயணம் ரசனையோடு இன்னும் அழகாகும்..

- வெ.வித்யா காயத்ரி, (மாணவப் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement