Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பரவும் பன்றிக் காய்ச்சல்... வருமுன் காக்க இயற்கை வழிமுறைகள்! #MustRead

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சலால் ஏற்பட்ட மரணங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சுமார் நாற்பதைத் தொட்டுவிட்டன. `ஹெச்1என்1’ என்ற வைரஸால் ஏற்படக்கூடிய இந்தக் காய்ச்சலுக்கு குறிப்பிட்ட அறிகுறிகள் என்று எதுவும் இல்லை. காய்ச்சல், உடல்வலி, சளி என சாதாரண வைரஸ் காய்ச்சலைப் போலவே இதன் அறிகுறிகளும் இருக்கும். அதனால், 'சாதாரணக் காய்ச்சல்தானே...' என ஆரம்பத்தில் காட்டப்படும் அலட்சியமும், காய்ச்சலைக் குணப்படுத்திக்கொள்வதற்காக சுயமாக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளும்தான் நோயை முற்றச் செய்து, இறப்பு வரை அழைத்துச் சென்றுவிடுகின்றன. 

பன்றிக் காய்ச்சல்

பன்றிகாய்ச்சலின் முக்கிய அம்சமே, நோய்த் தாக்குதல் ஏற்பட்டவருக்கு அதற்கான அறிகுறிகள் வெளிப்படுவதற்கே மூன்று நாட்கள் ஆகும் என்பதுதான். ஆனால், அதற்கு முன்னரே இந்தக் கிருமி ஒருவரின் உடலில் நுழைந்த ஒரே நாளில் மற்றவருக்கும் அந்தத் தொற்றை ஏற்படுத்திவிடும் அபாயம் உண்டு. காற்றினாலும், நீர்த்துளிகளின் மூலமாகவும் அதிக அளவில் பரவக்கூடிய கிருமிகளின் தொற்றிலிருந்து எப்படி நம்மைப் பாதுகாத்துக்கொள்வது? விளக்குகிறார் சித்த மருத்துவர், நந்தினி சுப்ரமணியன்...

நந்தினி சுப்ரம்ணியன்

காய்ச்சல் அறிகுறிகள் தென்படும்போது...

* உடல்வலி, காய்ச்சல், தலைவலி, மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படும்போது நிலவேம்புக் கஷாயம் குடிக்கத் தொடங்கிவிடலாம். அரை டீஸ்பூன் நிலவேம்புப் பொடியை ஒரு டம்ளர் நீரில் கலந்து, அரை டம்ளராக ஆகும் வரை கொதிக்கவைத்து, தினமும் மூன்று வேளைக்கு மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து குடித்துவருவது நல்ல பலன் தரும். 

* கிராம்பு மற்றும் ஏலக்காய் ஆகியவற்றைப் பொடித்து வைத்துக்கொண்டு, கைக்குட்டையில் வைத்துக்கொள்ளலாம். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை இந்தக் கைக்குட்டையை முகரலாம். காலை எழுந்தவுடன் துளசி, ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து டீ குடிக்கலாம் அல்லது இவற்றை ஒன்றாக சேர்த்து ஆவி பிடிக்கலாம். கிராம்பிலுள்ள 'யூஜின்' என்ற வேதிப் பொருளுக்கு அதிக அளவில் வைரஸை எதிர்க்கும் பண்பு உண்டு. 

* மூன்று நாட்கள் தீராத காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பவர்களுக்கு மட்டும் சளியை எடுத்துப் பரிசோதிக்கலாம். பன்றிக்காய்ச்சல் கிருமித் தாக்குதல் உறுதி செய்யப்பட்டால், மாத்திரையை மருத்துவரின் பரிந்துரையோடு எடுத்துக்கொள்ளலாம். தினமும் காலையில் இத்துடன் 'திரிபுலா' கஷாயத்தையும் சேர்த்துப் பருகி வரலாம். இதன் மூலம் மாத்திரைகளால் வயிற்றில் ஏற்படும் புண்களைத் தடுக்கலாம். 

பன்றிக்காய்ச்சலைப் பொறுத்தவரை, நோய் வந்த பிறகு மருந்து எடுத்துக்கொள்ளலாம் என்ற அலட்சியம் வேண்டாம். ஆரம்பநிலையிலேயே முறையான உடல் சுத்தத்தைப் பராமரியுங்கள்; சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பாக, சுகாதாரமாக வைத்துக்கொள்ளுங்கள். பன்றிக்காய்ச்சலோடு, பல நோய்கள் பத்தடி தூரம் தள்ளியே நின்றுவிடும்.

சிக்கன்

காய்ச்சலின்போது சிக்கன் சாப்பிடலாமா?

எந்தக் காய்ச்சலாக இருந்தாலும், அந்த நேரத்தில் உடலின் சூடு அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் சிக்கன் மட்டுமல்ல, முடிந்தவரை கடல் உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. அசைவ உணவுகள் உடல்சூட்டை இன்னும் அதிகமாக்கும்; காய்ச்சலின்போது, உணவு செரிமானம் அடைவதிலும் பிரச்னைகள் ஏற்படக்கூடும். 

வராமல் தடுக்க... 

* வீட்டைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் திரவங்களில் சிறிது மஞ்சள் தூளைச் சேர்த்துக் கலந்து சுத்தம் செய்யவும். மஞ்சளுக்கு வைரஸைக் அழிக்கக்கூடிய தன்மை உண்டு. அதனால், தரையிலோ அல்லது மேசை, நாற்காலி போன்ற பொருள்களின் மீதிருந்தோ கிருமித்தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

* நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் சுத்தமான சாம்பிராணியுடன் நொச்சி இலை அல்லது வெண்கடுகு சேர்த்துப் புகை போடலாம். அப்படிச் செய்யும்போது, காற்றிலுள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு, காற்றால் ஏற்படும் தொற்றைத் தடுக்க முடியும்.

வேப்பிலை

* குளிக்கும் நீரில் வேப்பிலை இலைகளைச் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்குக் கொதிக்கவைத்து, பிறகு குளிக்கவும். இதன் மூலம், தோல் வழியாகக் கிருமிகள் உடலுக்குள் செல்வதைத் தடுக்கலாம். 

* இரவு படுக்கச் செல்லும்போது ஒரு டம்ளர் பால் அல்லது நீருடன் அரை டீஸ்பூன் அஷ்வகந்தா, கால் டீஸ்பூன் அதிமதுரம் மற்றும் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக் குடிக்கலாம். இவை அனைத்துக்கும் கிருமி எதிர்ப்பு சக்தி இருக்கிறது. அதோடு, இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகமாக்கி, நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தும்.

- க.தனலட்சுமி 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement