Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹார்ட் அட்டாக் வரப்போகிறதா..? கண்டுபிடிக்கும் 10-ம் வகுப்பு மாணவரின் அசத்தல் கருவி!

`மாரடைப்பு...’ உலகம் முழுக்க நிகழும் மரணங்களில் பெரும்பாலானவற்றுக்கு இதுதான் காரணம். யாருக்கு, எந்த வயதினருக்கு, எப்போது வரும் என்று சொல்ல முடியாத இந்த இதய வலி என்கிற எமன், அமைதியாக உயிரைப் பறித்துச் சென்றுவிடும். `இரவில் உறங்கப் போனவர், காலையில் எழுந்திருக்கவில்லை’ எனச் சொல்லப்படும் பெரும்பாலான இறப்புகள் நிகழ்வது ஹார்ட் அட்டாக்கால்தான் (Silent Heart Attack). உலகம் முழுக்க இருக்கும் மருத்துவ நிபுணர்கள், மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் என வலியுறுத்துபவை... இதயத்தில் வலி ஏற்படுதல், மூச்சுவிட சிரமப்படுவது, அதீத வியர்வை... உள்ளிட்டவை. 

ஹார்ட் அட்டாக்

சத்தமே இல்லாமல் உயிரைப் பறிக்கும் மாரடைப்பு மரணங்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருவது, உடனே நாம் கவனிக்கவேண்டிய, கவலைப்படவேண்டிய அபாயம். இந்த அபாயத்தைக் கண்டறிய ஒரு புதுமையான கருவியை உருவாக்கி, மருத்துவ உலகையே திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறார் ஆகாஷ் மனோஜ் என்ற மாணவர். இவர் படிப்பது 10-ம் வகுப்பு, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது நாம் பெருமைகொள்ளவேண்டிய தகவல்கள்.

ஹார்ட் அட்டாக்

ஆகாஷ் மனோஜ் ஒரு புதிய தொழில்நுட்பக் கருவியை வடிவமைத்திருக்கிறார். இதைக்கொண்டு மாரடைப்பு வருவதற்கான அபாயத்தைத் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடலாம். இந்த முறையில், உடலில் எங்கேயும் துளையிட வேண்டிய (Non-invasively) அவசியம் இல்லை என்பதுதான் இதன் சிறப்பே. இந்தக் கருவி முக்கியமாக கிராமப்புற மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். மாரடைப்பு வருவதைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு முன்கூட்டியே சிகிச்சை கொடுக்க உதவியாக இருக்கும். 
 
சரி... மாரடைப்பு எப்படி ஏற்படுகிறது? பொதுவாகச் சொல்லப்படும் காரணம், இதயத்தின் தசைகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் வெகுவாகக் குறைந்து போவது அல்லது முழுமையாக நின்றுபோவது. இதயநோய்களின் உச்சக்கட்டம்தான் மாரடைப்பு. இதைக் கண்டுபிடிக்க ஒரு கருவியை வடிவமைத்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் ஆகாஷ் மனோஜை மனதாரப் பாராட்டலாம். 

ஆகாஷ் மனோஜ் இப்போது இருப்பது நியூடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ராஷ்ட்ரபதி பவனில். ஆண்டுதோறும் புதிய திறமைசாலிகளை ஊக்குவிக்கும்விதமாக, 2013-ம் ஆண்டிலிருந்து இங்கே ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்குப் பெயர் `இன்னோவேஷன் ஸ்காலர்ஸ் இன்-ரெசிடென்ட்ஸ் புரோகிராம்’ (Innovation Scholors In-resident Programme). இந்தத் திட்டத்தின் கீழ் ஆகாஷ் மனோஜ், `மாரடைப்புக்கு துளையிடா முறையில் சுய பரிசோதனை செய்வது’ (Non Invasive self diagnosis of silent heart attack) என்ற புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்காக கௌரவிக்கப்பட்டிருக்கிறார். 

``இன்றைய நாட்களில் மாரடைப்பு என்பது இறப்பு வரை ஒருவரைக் கொண்டு போய்விடும் ஆபத்தான ஒன்று. பலபேருக்கு மாரடைப்பு வருவதற்கான அறிகுறியே தெரிவதில்லை. அவர்களைப் பார்த்தால் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பதாகவே நமக்குத் தோன்றும். என் தாத்தா அப்படித்தான் மிக ஆரோக்கியமாகவே இருந்தார். திடீரென்று ஒருநாள் அவருக்கு மாரடைப்பு வந்து நிலைகுலைந்து போனார்’’ என்கிற ஆகாஷுக்கு இந்த நிகழ்வுதான் மாரடைப்பைக் கண்டுபிடிக்க ஒரு மாதிரிக் கருவியை உருவாக்கி, அதை ராஷ்டிரபதி பவனில் காட்சிக்கு வைக்கும் அளவுக்கு தூண்டுதலாக இருந்திருக்கிறது. 

துளையிடா முறையில் சுய பரிசோதனை செய்யும் மாதிரிக் கருவி

ஆகாஷ் மனோஜின் மாதிரிக் கருவியின் மூலம் , ஒரு சிறு துளை கூடப்போடாமலேயே மாரடைப்பை ஏற்படுத்தும் ரத்தத்திலுள்ள  எஃப்.ஏ.பி.பி.3 (Fatty Acid Binding Protein -3 ) என்ற வேதிப்பொருளின் அளவினைக் கண்டறியலாம். எஃப்.ஏ.பி.பி.3 என்பது கொழுப்பு அமிலங்களுடன் சேர்ந்திருக்கும் ஒரு வகையான புரோட்டீன் ஆகும். இதன் அளவை வைத்து இதயத் தசைகளுக்கு செல்லக்கூடிய ரத்த ஓட்டத்தின் அளவையும் கண்டறிய முடியும். இந்த எஃப்.ஏ.பி.பி.3  மற்றும் அல்புமின் புரோட்டின் கரைசலோடு, சிலிக்கான் ஜவ்வையும் (Silicone Membrane)  உள்ளடக்கியதுதான்  மனோஜின் கருவி. சிலிக்கான் ஜவ்வு, தோலில் உள்ள ரத்த நுண்குழாய்களைக் (Capillaries) காண்பிக்கும். அல்ட்ரா வயலெட் (Ultra Violet) கதிர்களை தோலின் மீது செலுத்தும்போது ரத்தத்திலுள்ள எஃப்.ஏ.பி.பி.3  அளவை கருவியில் பொறுத்தப்பட்டுள்ள சென்சாரின் உதவியுடன் தெரிந்துகொள்ளலாம். 

எளியவர்கள், அதிகம் படிப்பில்லாதவர்கள்கூட இந்தக் கருவியைப் பயன்படுத்தலாம். தங்களுக்கு மாரடைப்பு அபாயம் இருக்கிறதா என்பதை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். தேவைப்பட்டால் மருத்துவர்களிடம் போய் சிகிச்சை பெறலாம். இதயநோய் நிபுணராக வேண்டும் என்பது மனோஜின் விருப்பம். விருப்பம் நிறைவேற ஆகாஷ் மனோஜை மனமார வாழ்த்தலாம்!

- பாலு சத்யா

படங்கள்:தே.அசோக்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement