அன்றாட உணவுப் பட்டியலில் இடம்பெறவேண்டிய 10 உணவுகள்! #HealthTips

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் சமையலுக்குப் பயன்படுத்தும் பொருள்கள் பலவிதமானவை. அதிலும் வீட்டுக்கு வெளியே நாம் சாப்பிடும் உணவுகளில் என்னென்ன கலந்திருக்கின்றன என்பது நமக்கு நிச்சயம் தெரியாது. இவற்றில் பெரும்பாலானவை கொஞ்சம் கொஞ்சமாக நம் உடலைக் கெடுக்கக்கூடியவை. சமயத்தில், மிக மோசமான உடல் கோளாறுகளை நமக்கு வரவழைக்கக்கூடியவை. பொதுவாக நாம் சாப்பிடும் உணவு, நம் உடலுக்கு ஊட்டம் தருகிற வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பைட்டோகெமிக்கல்கள் மற்றும் என்ஸைம்கள் அடங்கிய ஒரு கூட்டுக் கலவையாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட உணவுதான் நம் உடலை வலிமை அடையச் செய்யும்; நம்மை எப்போதும் துடிப்பாக வைத்திருக்க உதவும்; மிக முக்கியமாக, நோய்களில் இருந்து நம்மைக் காப்பாற்றும். அப்படி சத்துகள் நிறைந்த ஒன்றாவது, நம் அன்றாட உணவில் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்வது நம் ஆரோக்கியத்துக்கும் ஆயுளுக்கும் நல்லது. உடல்நலம் காக்கும், உடலுக்கு உறுதி தரும் 10 உணவுகள் இங்கே...  

உணவுகள் 

கிரீன் டீ

கிரீன் டீ 

பெயரிலேயே பசுமையைக்கொண்டிருக்கும் இந்தத் தேநீரைப் பருகினால், இளமைத் தோற்றத்தைத் தக்கவைக்கலாம். கிரீன் டீயால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் குறித்து எத்தனையோ ஆய்வு முடிவுகள் தெரிவித்திருக்கின்றன... அத்தனையும் பலே பலன்கள்! நோய்கள் நம்மை நெருங்கவிடாமல் பார்த்துக்கொள்வதில் பெரும் பங்கு வகிக்கிறது கிரீன் டீ. தேயிலை இலைகளில் உள்ள கேட்டசின்கள் (Catechins) சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்; நோய்களுக்கு எதிராகச் செயல்படுபவை. இதில் ஈ.ஜி.சி.ஜி (EGCG - Epigallocatechin Gallate) அடங்கியுள்ளதால், ஆரோக்கியத்துக்கு பக்கபலமாக இருக்கும். உடல் எடை குறைப்பதற்கும் கிரீன் டீ உதவும்.   

பாதாம் பருப்பு

பாதாம் 

ஆரோக்கியமாக இருக்க தினமும் என்னென்ன சாப்பிட வேண்டும் என்று ஒரு பட்டியல் போட்டால், கண்டிப்பாக அதில் பாதாம் இடம் பெற்றிருக்கும். பாதாமில் இதயத்துக்கு நன்மை செய்யும் ஒலீயிக் அமிலம் (Oleic Acid) அதிக அளவில் இருக்கிறது. இது, உடல் ஆரோக்கியத்துக்குப் பலவிதத்தில் உதவுவதோடு, நினைவாற்றலை அதிகரிக்கவும் துணைபுரிகிறது. பாதாமில் நார்ச்சத்து, கால்சியம், கொழுப்பு மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால், உடலுக்கு வலிமை கிடைக்கும். மற்ற பருப்புகளுடன் ஒப்பிட்டால், பிரமாதப் பலன்களில் பாதாம் பருப்பே நம்பர் ஒன். 

நாவல்பழம் 

நாவல்பழம் 

நாவல்பழம் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த உணவுகளில் ஒன்று. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன. இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடியது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்றது. இதில் இருக்கும் அதிக அளவிலான பாலிபினால்கள் உடலுக்குப் பல நன்மைகளை அள்ளித் தருபவை. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஆனாலும், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு நாவல்பழங்கள் மட்டுமே சாப்பிடுவது நல்லது. 

குடமிளகாய் 

பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு... எனப் பல்வேறு நிறங்களில் உள்ளது. உணவுக்கு சுவைகூட்டுவது. ஊட்டச்சத்துகள் நிறைந்த ஆரோக்கியத்தை கொடுப்பது இந்த குடமிளகாய்.. இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ உள்ளதால், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். உடலுக்கு வலிமை கிடைக்கும். அதோடு மக்னீசியம், இரும்புச்சத்தும் இதில் உள்ளன. 

யோகர்ட்

யோகர்ட் 

வழக்கமாக நாம் சாப்பிடும் தயிரைவிட யோகர்ட்டில் அதிகமான புரதச்சத்து நிறைந்துள்ளது. இதில் கால்சியம் மிகுதியாக இருக்கிறது. ஒரு கப் யோகர்ட்டில், நமக்கு ஒரு நாளைக்குத் தேவையான 25 சதவிகித கால்சியம் கிடைத்துவிடும். உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கும். இதில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் இருக்கின்றன; அவை செரிமானத்தைச் சீராக்கும்; நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். 

அவகேடோ

அவகேடோ 

நவீன வாழ்வியல் முறையில் உடலில் உள்ள கொழுப்புகளை நீக்க நிறையப் பேர் மேற்கொள்வது உடற்பயிற்சிகள். எடையைக் குறைப்பது மட்டுமே கொழுப்பைக் குறைப்பதாகாது உண்மையில் நம் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்புகளும் தேவை. அவகேடோ நம் உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான கொழுப்பைத் தரக்கூடியது. இது நம் மனநிலையை மேம்படுத்தவும் உதவும். அவகேடோவில் இருப்பது, ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு (Monounsaturated fat), நல்ல கொழுப்பை மேம்படுத்தவும் ரத்தத்தில் ட்ரைகிளிசரைடுகள் (கொழுப்பு) குறைவாகச் சுரக்கவும் உதவும். இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றுக்கான அபாயத்திலிருந்து காக்கும். `ஃபுட் கிரேவிங்ஸ்' எனப்படும் அதீதமாகச் சாப்பிடும் எண்ணத்தைப் போக்க உதவும்.

தினை

தினை 

சிறுதானிய உணவுகளில் அதிகப் புரதச்சத்துள்ள உணவு தினை மட்டுமே. இது அனைவருக்கும், குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கான முக்கியமான தகவல். இதில் பழுப்பு அரிசியைவிட அதிக நார்ச்சத்தும் இரு மடங்கு புரதச்சத்தும் இருக்கின்றன. தினையை அரிசியைப் போலவே பல்வேறுவிதமாகச் சமைக்கலாம். இதில் இருக்கும் முழுமையான ஆரோக்கிய சத்துக்களான நார்ச்சத்து, புரதச்சத்து ஆகியவை நம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சீராக வைத்திருக்க உதவும். உடலின் எடையைக் குறைக்கும்; ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஆப்பிள்

ஆப்பிள் 

அமெரிக்காவில் மற்ற பழங்களைவிட ஆப்பிள் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். காரணம், இதில் அதிக அளவில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ். ஆப்பிளின் தோலில்தான் அற்புதமான ஆன்டிஆக்ஸிடன்ஸ் நிறைந்துள்ளன. அதனால் தோலுடன் கூடிய ஆப்பிளைச் சாப்பிடுவதே ஆரோக்கியத்துக்கு நல்லது. ஆப்பிளில் நார்ச்சத்து சுமாரான அளவிலேயே இருந்தாலும், அதில் பழப்பசை சத்து (Pectin) நிறைவாக இருக்கிறது. இது, நம் உடலுக்கு சக்தியைத் தரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போதுமானது. இதய ஆரோக்கியம், சர்க்கரைநோய், புற்றுநோய், பக்கவாதம், மூளை வளர்ச்சிக் குறைபாடு போன்றவற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் ஆற்றல் ஆப்பிளுக்கு உண்டு.

கீரைகள்

கீரைகள் 

எல்லாக் கீரைகளிலுமே சக்திவாய்ந்த பீட்டா-கரோட்டின் (Beta-Carotene) உள்ளது. இது நோய்களுக்கு எதிராகப் போராடும் ஆன்டிஆக்ஸிடன்ட். எனவே, இதய நோய் மற்றும் புற்றுநோய்க்கு எதிராகப் போராடும். கீரைகளில் லுடீன் (Lutein) உட்பட பல முக்கியமான பைட்டோகெமிக்கல்கள் உள்ளன. இவை, கண்களைச் சுற்றி வரும் கருவளையத்தைத் தடுக்க உதவுகின்றன. கீரையில் லிபோயிக் அமிலம் (Lipoic Acid) இருக்கிறது. இந்த அமிலம், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ ஆகியவற்றின் உற்பத்திக்கு உதவும்; ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். கீரைகளில் ஒமேகா 3 கொழுப்புகள் நிறைந்த அளவில் இருக்கின்றன. ஆக, சைவப் பிரியர்களுக்கு கீரைகள் உடல் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடிய முக்கியமான உணவு. 

முட்டை

முட்டை 

முட்டை, கலோரிகள் குறைவாக உள்ள உணவு. ஆனால், புரதச்சத்து, ஊட்டச்சத்து, நல்ல கொழுப்புகள் நிறைந்தது. காலையில் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளுக்குப் பதிலாக, முட்டையைச் சாப்பிடுபவர்களுக்கு 65% எடை குறைகிறது என்பது சமீபத்தில் ஓர் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. முட்டையில் இருக்கும் அதீதமான புரதம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சீராக வைத்திருக்கும்; தசைகளுக்கு வலு சேர்க்கும்.

இந்த பத்து உணவுகளும் நாளுக்கு ஒன்றாக நம் அன்றாட உணவில் இணையட்டும். உடல்நலம் மேம்படட்டும்! 

- செந்தில்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!