வெளியிடப்பட்ட நேரம்: 21:18 (11/03/2017)

கடைசி தொடர்பு:09:10 (12/03/2017)

டானிக் முதல் குக்கீஸ் வரை... மருந்தாகும் இஞ்சி! #HealthTips 

ஜெர்மெனியில் ஜிஞ்சர் பிரட், ஜப்பானில் ஷோகா, கொரியனில் கிம்ச்சி எனும் சாலட், ஜமைக்காவில் சுவையூட்டியாக, பர்மாவில் மீன் உணவுகளில், இந்தியா மற்றும் தாய்லாந்தில் பெரும்பாலான சமையலுக்கு இஞ்சி சேர்க்கப்படுகிறது. இஞ்சியின் சமஸ்கிருத பெயர் 'விஷ்வா மெசாஜ்' , இதன் அர்த்தம் உலகம் முழுதும் பயன்படுத்தகூடிய மருந்து. நான்காயிரம் ஆண்டுகளாக உலகம் முழுவதும் பயன்படுத்தி வரும் மூலிகைகளில் ஒன்று, இஞ்சி. இந்தியா, சீனா, கொரியா, தாய்லாந்த், இண்டோனேஷியா, வியாட்னாம் போன்ற பல்வேறு நாடுகளில் இஞ்சி மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இப்போதெல்லாம் ஜிஞ்சர் குக்கீஸ்கூடக் கடைகளில் கிடைக்கின்றன. டானிக், சிரப் என சளி, இருமலுக்குகூட மருந்தாக பயன்படுகிறது.

மருந்தாகும் இஞ்சி 

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் இஞ்சியைச் சேர்த்துக்கொண்டால், அதன் பலன்கள் நம்மைக் காக்கும். இஞ்சியிலிருக்கும் மருத்துவக் குணங்கள் அளவிடமுடியாதவை. அதன் சிறப்பை உணர்ந்தே நம் முன்னோர்கள் இஞ்சியை நம் உணவில் அதிகம் சேர்த்து வந்தனர். இஞ்சியின் சிறப்பை உணர்ந்த நம் முன்னோர்கள் அதை ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகளில் பயன்படுத்திவந்தனர். நாமும் நம் உணவில் இஞ்சியைச் சேர்த்து வருகின்றோம். அப்படிப்பட்ட இஞ்சியின் பிரமாத பலன்களைத் தெரிந்துகொள்வோமா... 


ரத்த ஓட்டம் சீராகும்! 

இஞ்சியை நாம் தினமும் எடுத்துக்கொள்வதால் ரத்த அணுக்கள் உறைந்து கட்டியாவது தடுக்கப்படுகிறது. இதனால், நம் உடலில் ரத்த ஓட்டம் சீராகிறது. ரத்தக் குழாய்களில் எந்தவிதத் தடையுமின்றி ரத்தம் சீராகச் செல்கிறது. 

அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, ரத்த அழுத்தம் குறைகிறது. மருத்துவச் சோதனைகளின் வாயிலாகவும் இஞ்சியால் ரத்த அழுத்தம் குறைகிறதென்பது நிருபிக்கப்பட்டுள்ளது.

இஞ்சி 

விந்து அணுக்கள் அதிகரிக்கும்! 

இஞ்சியை எடுத்துக்கொள்வதன் மூலம் விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் இஞ்சியை ஆண்மைக்குறைவு சிகிச்சையில் வெகுகாலமாகவே பயன்படுத்தி வருகின்றனர். இரவில் அளவான உணவை உட்கொண்டவுடன் இஞ்சித் தேநீர் பருகுவதால் விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. 

மூட்டு வலிக்கும் பயன்படுத்தலாம்! 

வலி நிவாரணத் தன்மையும் அழற்சி நீக்கும் தன்மையும் பெற்றுள்ளது. மூட்டு வலிக்கும் தசை பிடிப்புக்கும் நல்லதொரு தீர்வாக அமைகிறது. 

குளிக்கும்போது, இஞ்சியைச் சாறாகப் பிழிந்து எண்ணெயுடன் சேர்த்து வலியுள்ள இடங்களில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்துக் குளித்தால், தசைப்பிடிப்பு, மூட்டு வலி போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம். வலி உள்ள இடத்தில் இதை உபயோகிக்கும்போது, வலியை குறைப்பதுடன், வீக்கத்தைத் தடுக்கிறது.

ஒற்றைத் தலைவலிக்குத் தீர்வு! 

இஞ்சி எடுத்துகொள்வதால் ஒற்றைத் தலைவலியில் இருந்து தீர்வு கிடைக்கிறது. இஞ்சியின் தனித்துவமான ஆற்றல், ரத்த நாளங்களில் வலி மற்றும் வீக்கம் இருந்தாலோ அவற்றின் வலியை நீக்கி, வீக்கத்தைக் குறைக்கிறது. 

சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விடுதலை! 

ஜலதோஷம், சளித் தொல்லை மற்றும் தொண்டைக்கட்டு போன்றவற்றுக்கு, இஞ்சி டீ சாப்பிடுவது நல்லது. நீரழிவு நோய் சிகிச்சைக்கும் இஞ்சியைப் பயன்படுத்தலாம்! 

இஞ்சி, சிறுநீரில் அதிகபடியாக வெளியேறும் புரதத்தைக் கட்டுப்படுத்தி, சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.

குமட்டல் மற்றும் வாந்தி வராமல் இருக்க! 
வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்ளும்போதும், பெண்கள் கர்ப்பிணியாய் இருக்கும்போதும், வாந்தி குமட்டல் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. 

நறுக்கிய இஞ்சி

ஜீரணத்தைச் சீராக்கும்! 

செரிமானக் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது. செரிமானம் சீராகி உட்கொள்ளும் உணவுகளிலிருந்து தேவையான சத்துகள் கிடைக்க வழிசெய்யும். சாப்பிட்ட உணவு உடனுக்குடன் செரிமானம் ஆவதால் வாயுத்தொல்லைகளில் இருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது. 
புற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும்! 

இஞ்சி உடலில் புற்றுநோய் பரவுவதைத் தடுக்கப் பெரிதும் உதவுகிறது. இது புற்றுநோய் அணுக்களால் ஏற்படும் திசுக்களின் சேதங்களைத் தடுக்கிறது. தொடர்ந்து இஞ்சி சேர்க்கப்பட்ட உணவை உண்பதால், புற்றுநோய் உயிரணுக்கள் உடலில் பரவுவதைத் தடுக்க முடிகிறது. மேலும், இஞ்சி ஆஸ்துமா, சைனஸ் போன்ற நோய்களின் தாக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. 

கல்லீரல் பாதிப்பைத் தடுக்கும்! 
வலி நிவாரணிகள் மற்றும் உடல் வெப்பத்தைக் குறைக்க, நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளில் உள்ள வேதிப்பொருட்கள், கல்லீரலை சேதப்படுத்த வாய்ப்பு உள்ளது. அவ்வாறு, கல்லீரல் சேதமடையாமல் காக்கும் காப்புக் கவசமாக இஞ்சி திகழ்கிறது.

இஞ்சி டீ 

தேவையானவை:
இஞ்சி - 1/2 இன்ச் (துருவியது)
தேன் / பனங்கற்கண்டு   - தேவையான அளவு
தண்ணீர்- 2 கப் 
தேயிலை- 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர், தேயிலைகளை சேர்த்து  அடுப்பில்வைத்து, கொதிக்கவிட வேண்டும். நீர் கொதிக்க ஆரம்பித்ததும், இஞ்சி  சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் சூடுபடுத்தவும். அதனுடன் போதுமான அளவு பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து குடிக்கலாம்.

இஞ்சி டீ 

இஞ்சி சிரப்

தேவையானவை:
சிறுதுண்டுகளாக நறுக்கிய இஞ்சி- சிறிதளவு 
தண்ணீர் - 1 கப்
எலுமிச்சைச் சாறு- 2 டேபிள்ஸ்பூன்
பனங்கற்கண்டு -2 டீஸ்பூன்

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர்,  பனங்கற்கண்டை எடுத்துக்கொண்டு அடுப்பில்வைத்து சூடுபடுத்தவேண்டும். பின்னர் அதனுடன் நறுக்கிய இஞ்சித் துண்டுகளை சேர்த்து, 15 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கி விடவும்.  ஆறவைத்து அதனுடன் எலுமிச்சைச் சாற்றைச் சேர்க்கவும். பின்னர் இதை வடிகட்டி  குடிக்கலாம்.

- முரளி.சு (மாணவப் பத்திரிகையாளர்)


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்