Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோடையில் வெயில், வெக்கை, வியர்வை... விரட்ட துணைநிற்கும் உணவுகள் #SummerTips

நம் முன்னோர்கள், ஒரு வருடத்தை உத்ராயணக் காலம் (தை முதல் ஆனி வரை) தட்சணாயன காலம் (ஆடி முதல் மார்கழி வரை) என இரண்டு பிரிவுகளாகப் பிரித்து வைத்துள்ளனர். தை மாதத்தில் சூரியன் தனது பாதையின் தெற்குப் பகுதியில் இருந்து வடக்குப் பகுதியில் நுழையும் காலத்தை உத்ராயணக் காலம் என்று அழைப்பார்கள். சூரிய வெப்பத்தின் தாக்கம் கொஞ்சம்கொஞ்சமாக அதிகமாகி, பங்குனி, சித்திரை மாதங்களில் மிகவும் அதிகமாக இருக்கும். 

வெயில்

சூரியன் தன் கதிர்க்கரங்களை நேரடியாக நீட்டும் காலம் வெயில் காலம். கோடையில் கொளுத்தும் அக்னி நட்சத்திர வெயிலின் வெப்பம் நம் தோல் மற்றும் உடல் உள்ளுறுப்புகளில் கூடப் பலவித மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. 

உடல் வெப்பத்தைக் குறைக்க, தோலின் வழியாக வியர்வையை வெளியேற்றுகின்றது. உடல் வெப்பம் என்பது ஒரு நோயல்ல. ஆனால், இதைக் கவனிக்காமல் போனால், தலைவலி, வாந்தி, தசைப்பிடிப்பு, அதீத வியர்வை போன்றவற்றால் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, வெயில் காலத்துக்கு ஏற்ற உணவுகளை நாம் தேர்வு செய்து சாப்பிட வேண்டும். 

உடலின் வெப்பம் அதிகரிக்கும்போது, உடலில் உள்ள நீர்த்தன்மைதான் முதலில் வற்றுகிறது. இதுதான் எல்லா அசௌகரியங்களுக்கும் நம்மை இட்டுச்செல்கின்றது. நமது உடலின் வெப்பத்தன்மையை நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் மூலம் சரிசெய்யலாம். 

 

உடல் வெப்பத்தைக் குறைக்கும் உணவுகள்... 

மண் பானை குடிநீர் : இதை அருந்தினால், உடல் வேகமாக நீரேற்றம் கொள்ளும். இதனால் ரத்தம் தடையின்றி ரத்தக்குழாய்களில் பாயும். நமக்குச் சோர்வு நீங்கி சுறுசுறுப்புப் பெருகும். 

இளநீர் : இளநீரைப் போன்று சிறந்த எலக்ட்ரோலைட் வேறேதுவுமில்லை. இதில் இருக்கும் குளுக்கோஸ் நமக்கு உடனடி எனர்ஜியை அளிக்கின்றது. 

லெமன் ஜூஸ் : தினமும் லெமன் ஜூஸ் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. வெப்பம் தொடர்பான அசௌகரியங்களைப் போக்கி நம் உடலைக் குளிர்வித்து உற்சாகமடையச் செய்கிறது. கூடவே சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்படுகின்றது. ஒருநாளைக்கு இரண்டு கிளாஸ் வரை அருந்தலாம். 

புதினா : சுத்தம் செய்த புதினாவை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் 15 முதல் 20 நிமிடம் கொதிக்கவைத்து குடித்தால், உடல் வெப்பம் நீங்குவதுடன் வாந்தி, மயக்கத்தையும் போக்கும். 

வெயில் - உணவு கட்டுப்பாடு

தர்பூசணி : அதிக நீர்த்தன்மை கொண்ட இந்தப் பழம் உடலின் நீர்ச்சத்தை அதிகரித்து, உடலின் நச்சத்தன்மையைப் போக்குகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்தது. இதை ஜூஸாகவோ சாலடாகவோ சாப்பிடலாம். 

சோற்றுக்கற்றாழை : அதிகக் குளிர்ச்சியான இந்தக் கற்றாழையின் சதைப் பகுதியை வீட்டிலேயே ஜூஸாக்கி அருந்தலாம். ஒரு நாளைக்கு 2 டேபிள் ஸ்பூன் வரை எடுத்துக்கொள்ளலாம். இந்த ஜெல்லை 20 நிமிடம் முகத்தில் பூசி, பின் குளிர்ந்த நீரீல் குளித்தால் உஷ்ணத்திலிருந்து தப்பிக்கலாம். முகத்தில், கழுத்துப்பகுதியில் தோன்றும் பரு, வியர்க்குரு ஆகியவற்றிலிருந்து தப்பிக்கலாம். 

நெல்லி : வைட்டமின் 'சி' நிறைந்துள்ள இதன் ஜூஸடன் 4 பங்கு நீர் சேர்த்து, உப்பு அல்லது தேன் சேர்த்து அருந்தலாம். வெறும் வயிற்றில் அருந்துவது இன்னும் சிறப்பு. 

நீர்மோர் : தயிரைக் கடைந்து நீர் சேர்த்து, சிறிதளவு லெமன் ஜூஸ் சேர்த்து அருந்தலாம். 

காய்கறிகள் : வெள்ளரி, தக்காளி, நுங்கு, பதனீர், ஆரஞ்சு, திராட்சைப் பழங்கள் போன்றவையும் வெப்பத்தைத் தடுக்கவல்லன. நீர்க்காய்கறிகளான பூசணி, பீர்க்கன், சுரைக்காய் , முள்ளங்கி, கேரட் ஆகியவற்றில் தயிர் பச்சடி தயாரித்துச் சாப்பிடலாம். 

வெயில் - சருமத்துக்கான ஸ்பெஷல் பேக்

சருமத்துக்கான ஸ்பெஷல் பேக் 

பாலில் குழைத்த சந்தனம் அல்லது கற்றாழை ஜெல் இவற்றை முகத்தில் பூசி, 10 முதல் 15 நிமிடம் வரை வைத்திருந்து, குளிர்ந்த நீரில் கழுவவும். 

விரல்களில் மருதாணி வைத்துக்கொள்வதால் உடல் வெப்பத்தைக் குறைக்கும். 

வெள்ளரி, தக்காளியை அரைத்து முகம், கை, கால்களில் பூசி இருபது நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். 

தர்பூசணி பழத்துண்டுகளோடு புதினா இலைகளைச் சேர்த்து அரைக்கவேண்டும். இந்தக் கலவையை முகம், கை, கால்களில் பூசி வர வெயிலால் பாதித்த சருமம் புத்துயிர் பெறும். 

வெயில் - ஆரஞ்சு ஸ்மூத்தி

சிம்பிள் ரெசிப்பிகள்... 

தக்காளி - வெள்ளரி சாலட் 

தேவையானவை: தக்காளி - 4, வெள்ளரி - 2, ஆலிவ் ஆயில் - சிறிதளவு, லெமன் ஜூஸ் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. 
செய்முறை: தக்காளியையும் வெள்ளரியையும் கழுவி சுத்தப்படுத்தியபின் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற பொருட்களை இதனுடன் கலந்துப் பரிமாறவும். இதைச் சாலடாகவும், சாண்ட்விச் ஸ்டஃபிங்காகவும் பயன்படுத்தலாம். 

ஆரஞ்சு – வாழை ஸ்மூத்தி 

தேவையானவை: வாழைப்பழம் - 2, ஆரஞ்சு ஜூஸ் - ஒரு கப், தோலுரித்த பாதாம் பருப்பு - 15, துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன். 
செய்முறை: பாதாமை முதலில் அரைத்துக்கொண்டு, பின் மற்ற எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். உடனே சாப்பிட ரெடி! 

- வைஷ்ணவி 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement