வெளியிடப்பட்ட நேரம்: 14:24 (13/03/2017)

கடைசி தொடர்பு:16:22 (13/03/2017)

புத்தக வாசிப்பு பரிசளிக்கும் 8 ஆரோக்கியப் பலன்கள்! #GoodHabits

`சமீபத்துல என்ன புத்தகம் படிச்சீங்க?’ இப்படி ஒரு கேள்வி வலம் வந்த காலம் உண்டு. 80-கள், 90-களில் இந்தக் கேள்விக்கு போட்டி போட்டுக்கொண்டு பதில் சொன்னவர்களும் இருந்தார்கள். அந்தப் பதிலில் சுஜாதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர்... போன்ற ஜனரஞ்சகமான எழுத்தாளர்களோ, சுந்தர ராமசாமி, தி.ஜானகிராமன், ராஜம் கிருஷ்ணன்... போன்ற இலக்கிய ஆளுமைகளோ எழுதிய புத்தகத்தின் பெயர் இருக்கும். நாவல், சிறுகதைகள் மட்டுமல்ல... கவிதை, கட்டுரைத் தொகுப்புகள், ஆய்வுகள் என விரிகிற பல நூல்களும் அந்தப் பதிலில் அடங்கியிருக்கும். உண்மையில் புத்தக வாசிப்பு அறிவியல்பூர்வமாக நமக்கு எத்தனையோ நன்மைகளை அள்ளித் தரும் ஒன்று என்பதை நம்மில் பலரும் அறிவதில்லை.   

புத்தக வாசிப்பு

இன்றைக்கு உள்ளங்கைக்குள் வந்துவிட்டது உலகம்; அதை சாத்தியமாக்கியிருக்கிறது ஸ்மார்ட்போன்... மறுப்பதற்கில்லை. ஃபேஸ்புக் அப்டேட்ஸ் பார்க்கிறோம், வாட்ஸ்அப்பில் வரும் குறுந்தகவல்களை வாசிக்கிறோம், செய்தித்தாளில் தலைப்புச் செய்திகளை லேசாக நோட்டமிடுகிறோம்... ஆனால், முழுமையாக ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பது எல்லோராலும் முடியாத காரியமாகவே இருக்கிறது. நம்மில் பெரும்பாலானவர்கள் இணைய தேடல்களுக்குள் சிக்கி, பொழுதைக் கழிக்கிறோம். சுருக்கமாக நேரத்தை விரயம் செய்கிறோம். அவ்வளவுதான். 

இருந்தாலும், தீவிரமாக புத்தகம் வாசிப்பவர்கள் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். பயணத்தின்போது மறக்காமல் கையோடு படிக்கவேண்டிய புத்தகங்களை எடுத்துச் சென்று படிப்பார்கள். மனம் சலனப்படும்போதும், இரவின் அமைதியிலும் அவர்களை ஈர்த்திழுப்பது புத்தகங்களே. இப்படித் தீவிரமாக வாசிப்பவர்களுக்கு புத்தகத்தின் மீது அளப்பரிய காதல் இருக்கும். எப்போதும் தெளிவான மனநிலையோடு இருப்பார்கள். புத்தக வாசிப்பு நமக்கு வழங்கும் பலன்கள் ஏராளம். அவற்றில் முக்கியமான அறிவியல்பூர்வமான, ஆரோக்கியமான 8 பலன்கள் இங்கே...
 
மனதைத் தூண்டும்!

புத்தக வாசிப்பு, நம் மனதை எழுச்சிகொள்ளச் செய்யும்; தூண்டும். முதுமையில் வரும் அல்சைமர் (Alzheimer) டிமென்ஷியா (Dementia) போன்ற மறதி நோய்களைத் தள்ளிப்போடும். மூளையை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்; நினைவாற்றல் குறையாமல் பார்த்துக்கொள்ளும். குழப்பமான மனநிலையில் சரியான முடிவெடுக்கும் ஆற்றலைக் கொடுக்கும். அறிவாற்றலைத் தூண்டும் புதிர் விளையாட்டு (Puzzles), சதுரங்க விளையாட்டு போன்றவை தரும் அதே நல்ல பலன்களை புத்தக வாசிப்பும் கொடுக்கும். 
 
மனஅழுத்தம் குறைக்கும்! 

வேலைச் சுமை, படிப்பு சுமை, வாழ்க்கை, தனிமனித உறவுகள் என எல்லாவற்றிலும் நமக்குப் பிரச்னைகள் காத்திருக்கின்றன. மனதின் ஓர் ஓரத்தில் அவை நம்மை சதா உறுத்திக்கொண்டே இருக்கும். அதிகமாகும்போது அது, மனஅழுத்தமாக மாறும். மனஅழுத்தத்தில் இருந்து நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள, மனஅழுத்தம் குறைக்க புத்தக வாசிப்பு உறுதுணையாக இருக்கும். ஒரு நல்ல நாவலைப் படிக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த நாவலோடு ஒன்றிப்போகும்போது, அது வேறோர் உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும். அது நம் மனஅழுத்தத்தைக் குறைக்கவும், ரிலாக்ஸாகவும் உதவும்.  

மன அழுத்தம் குறைக்கும்

 விரியும் அறிவு

நாம் வாசிக்கிற எல்லாமே தகவல்களாக நம் மனதில் பதிபவைதான். இது ஒரு வகை அறிவு. அந்த அறிவு நமக்கு எப்போது கை கொடுக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், நிச்சயம் கைகொடுக்கும். வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அது உதவலாம். பணம், இளமை, வேலை, ஆரோக்கியம்... எது நம் கையைவிட்டுப் போனாலும், அறிவு நம்மைவிட்டு இறுதி வரை போவதில்லை. அந்த அறிவை வாசிப்பு பழக்கம் நமக்குக் கொடுக்கும்.
 
சொல் வளம் பெருகும்!

இன்றைய போட்டிகள் நிறைந்த உலகில், எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், நம் அனைவருக்குமே தகவல் பரிமாற்றம் மிக முக்கியம். புதுப்புது எண்ணங்களை வெளிப்படுத்த புதுப்புதுச் சொற்கள் அவசியம். அத்தகைய சொற்களை புத்தக வாசிப்பு நமக்கு கற்றுக் கொடுக்கும். புதுப்புது வார்த்தைகளை கற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் நம் சொற்கள் அகராதியில் புதுப்புது சொற்கள் சேரும். சுருக்கமாக நம் சொல் வளம் பெருகும். தகவல் பரிமாற்றத்தில் தேர்ந்தவர்கள் எனப் பெயரும் கிடைக்கும்.
 
நினைவுத்திறனை மேம்படுத்தும்!

ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது, அதன் கதை, கதாபாத்திரங்கள், சம்பவங்கள், அதில் குறிப்பிட்டுள்ள மற்ற விஷயங்கள் அனைத்தும் நம் மனதில் ஆழப்பதிந்துவிடும். இதுவும் நம் நினைவுத்திறனை மேம்படுத்த வழி செய்யும். அதாவது, புதிய நினைவுகளை மூளையில் பதிவுசெய்து, புதிய பாதைகளைத் திறக்கச் செய்யும். இதன்மூலம் ஏற்கெனவே இருக்கும் நினைவுகள் பலம் பெறும்; குறுகியகால (Shortterm memories) நினைவுகளை மீட்டெடுக்க உதவி செய்யும். 

அறிவைக் கூர்மையாக்கும்

அறிவைக் கூர்மையாக்கும்!

ஒரு நாளில், ஒரு நிமிடத்தில் பல்வேறு வேலைகளை நாம் செய்கிறோம். தொடர்ந்து பல வேலைகளைச் செய்யும்போது நமது எண்ணங்கள் சிதறும். இதன் காரணமாக மன அழுத்தத்தின் அளவு அதிகரிக்கும். இது, வேலைத்திறனை பாதித்து, சரியாக முடிக்க முடியாமல் தடுக்கும். புத்தக வாசிப்பு, நம் மனம் ஒன்றில் குவிய உதவும். மனம் தடுமாறாமல், கவனமாக ஒரு வேலையைச் செய்ய புத்தகம் துணைபுரியும். நம் அறிவைக் கூர்மையாக்கும்.
 
மன அமைதிக்கு உதவும்!

இந்த இயந்திர வாழ்கையில், பல்வேறுவிதமான மனக் கஷ்டங்களையும், துயரங்களையும் நாம் சந்திக்க நேர்கிறது. அப்படி புண்பட்ட மனதுக்கு புத்தகங்கள் அமைதியைத் தருபவை. புத்தக வாசிப்பு பல்வேறுவிதமான மனநல குறைபாடுகளுக்கு (Mood Disorders) நல்ல மருந்து. நம்மை நாமே புதுப்பித்துக்கொள்ள வாசிப்பு உதவும்.
 
பொழுதை பயனுள்ளதாக்கலாம்!

நேரம் பொன் போன்றது என்பார்கள். அத்தகைய நேரத்தை இன்றைக்கு தொலைக்காட்சியிலும், சமூக வலைத்தளங்களிலும் வீணாக்கிக்கொண்டு இருக்கிறோம். புத்தக வாசிப்பு என்கிற பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால், இவற்றிலிருந்து எளிதாக விலகியிருக்கலாம். இதற்காக ஒரு நூலகத்தில் உறுப்பினராகலாம். அதில் உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை எடுத்துப் படிக்கலாம். பொழுதை ஆரோக்கியமான வழியில் செலவழிக்கலாம். 

தனிமையைத் தவிர்க்கலாம்

தனிமையின் பிடியில் சிக்கித் தவிப்பவர்களுக்கு புத்தகம் ஒரு நல்ல தோழன். புத்தகங்களை வாங்குங்கள், வாசியுங்கள். புத்தகம் வாசிக்கும் வண்ணத்துப்பூச்சியாக நீங்கள் மாறினால், புதுப்புது உலகங்களில், கனவுகளில், கற்பனைகளில் சிறகுகளை விரித்து ரசித்து பயணம் செய்யலாம். அந்தப் பயணம் நல்லதையே வழங்கும்! 

- வெ.வித்யா காயத்ரி, மாணவப் பத்திரிகையாளர் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்