பயம்... பதற்றம்... மனஅழுத்தம்... மனிதநேயம்! ஒரு ஆம்புலன்ஸ் டிரைவரின் வாழ்க்கை! | Life of an Ambulance driver

வெளியிடப்பட்ட நேரம்: 08:23 (14/03/2017)

கடைசி தொடர்பு:08:23 (14/03/2017)

பயம்... பதற்றம்... மனஅழுத்தம்... மனிதநேயம்! ஒரு ஆம்புலன்ஸ் டிரைவரின் வாழ்க்கை!

‘கொஞ்சம் முன்னாடி கொண்டு வந்திருந்தீங்கனா உயிரைக் காப்பாத்தியிருக்கலாம்!’ இது, ஒரு டாக்டர், சொல்லும் வெறும் சினிமா வசனம் அல்ல. அப்பட்டமான உண்மை. மருத்துவத்தில் `கோல்டன் ஹவர்’ என்கிற வழக்குத்தொடர் ஒன்று உண்டு. விபத்தில் காயமடைந்தவர்கள், அவசரமாக மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்காகச் சொல்லப்படும் கால அவகாசம். அதாவது, ஒரு மணி நேரம் அல்லது அதற்குக் குறைவான நேரத்துக்குள் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்குக் கொண்டு வந்து மருத்துவ சிகிச்சையை அளித்துவிட்டால், அவரைக் காப்பாற்றிவிடலாம். அந்த ஒப்பற்ற உயிர்காக்கும் சேவையைச் செய்பவர்கள் ஆம்புலன்ஸ் டிரைவர்கள். இவர்களை மையமாக வைத்து, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், எலெக்ட்ரானிக் மீடியா துறையில் படிக்கும் மாணவர் தினேஷ் குமார் இயக்கியிருக்கும் ஆவணப்படம், ‘ஒரு ஆம்புலன்ஸ் டிரைவரின் வாழ்க்கை’ (Life of an Ambulance Driver). பயம்... பதற்றம்... மனஅழுத்தம் ஆகியவற்றோடு வாழ்ந்தாலும், அதையும் தாண்டிய ஆம்புலன்ஸ் டிரைவர்களின் மனிதநேயத்தை எளிமையாக, அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது இந்த ஆவணப்படம். 

ஆம்புலன்ஸ்

16 நிமிடங்கள்... மட்டுமே ஓடக்கூடியது. மேலே வேகமாகச் சுழலும் விளக்கு, கதிகலங்கச் செய்யும் சைரன் ஒலி சகிதமாகக் கிளம்பும் ஆம்புலன்ஸ் பயணத்தில் அந்த 16 நிமிடங்களும் நாமும் அப்படியே ஒன்றிப்போகிறோம். ஆம்புலன்ஸ் டிரைவர் எதிர்கொள்கிற பிரச்னைகள் நம்மை கதிகலங்கவைக்கின்றன.

சென்னை போன்ற பெரு நகரத்தில், ஒரு நாளைக்கு ஒருவரிடமாவது திட்டு வாங்காத ஆம்புலன்ஸ் டிரைவர் நிச்சயம் இருக்க மாட்டார். மூச்சுமுட்டும் வாகன நெரிசலில், தேங்கித் தேங்கி நகரும் வாகனங்களைப் புறந்தள்ளிவிட்டு ஆம்புலன்ஸை முன்னே கொண்டு செல்வது ஆகப் பெரிய மந்திரவித்தை. வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் சத்தத்தோடு விரையும் ஆம்புலன்ஸ் மட்டும்தான் கண்ணில் தெரியுமே தவிர, உள்ளே உயிரைத் தக்கவைத்துக்கொள்வதற்காகப் போராடும் மனிதர்களைத் தெரியாது. அந்த உயிரைக் காப்பாற்றுவதற்காகத்தான் டிரைவர் விரைகிறார் என்பதும் அழுத்தமாகப் புரியாது. 

இந்த ஆவணப்படத்தில் இரு டிரைவர்கள் முன்னிறுத்தப்படுகிறார்கள். ஒருவர் சுரேஷ், வடபழனியில் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் டிரைவர். மற்றொருவர் ராபின். சுரேஷ், மனைவி ஒரே மகனுடன் சென்னையில் வசிக்கிறார். ராபின் வேலூர்க்காரர், அவருக்கு மூன்று குழந்தைகள். ராபின் சென்னையில் ஒரு ஹாஸ்டலில் தங்கியிருக்கிறார்.  

ராபின்சுரேஷ்

“முன்னாடி வண்டியில போறவங்களுக்கு பின்னாடி என்ன வருதுன்னு தெரியாது. அதுக்காகத்தான் ஆம்புலன்ஸ்ல சைரன் வச்சிருக்கோம். அந்தச் சத்தத்தைக் கேட்டுட்டு எந்தப் பக்கம் ஒதுங்கி நிக்கிறதுனு அவங்கதான் முடிவு பண்ணணும். ஆனா, நிறைய பேர் ஒதுங்கறதே இல்லை. ஹெட் செட் போட்டுட்டு வண்டி ஓட்டுறதை நிறுத்தினாதான் இதுக்கு ஒரு வழி கிடைக்கும்’’ என்கிறார் சுரேஷ். 

ஆம்புலன்ஸ் டிரைவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம். அதிக நேரம் வேலை பார்க்கவேண்டியிருக்கும். இரவும் பகலும் மாறி மாறி வரும் ஷிஃப்ட். பேஸிக் லைஃப் சப்போர்ட் (BLS - Basic Life Support) உள்ளிட்ட உயிர்காக்கும் சில பயிற்சிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். அது ஐந்தாவது மாடியோ, ஏழாவது மாடியோ பாதிக்கப்பட்ட நோயாளியை தூக்கிக்கொண்டு கீழே வர உதவ வேண்டும். விபத்து போன்ற நிகழ்வுகளில் ரத்தத்தைப் பார்த்து மிரண்டு போகாமல், எந்தச் சூழ்நிலையிலும் விபத்துக்குள்ளானவரை எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். இவையெல்லாம் இருக்கட்டும்... இவர்களுக்கான சம்பளம் மிக மிகக் குறைவு என்பதுதான் வேதனையான விஷயம்.

‘இந்தியாவில் ஆம்புலன்ஸ் டிரைவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. காரணம் குறைந்த ஊதியம், அதோடு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் எதிர்கொள்ளவேண்டிய சவால்களும் இவர்களுக்கு அதிகம்’ என்கிறது ஒரு குறிப்பு. 

“ஆம்புலன்ஸ் டிரைவருக்கு வேகமும் வேணும், விவேகமும் வேணும். வேகமா போறதுனால தன்னிலை இழந்துடக் கூடாது. பதற்றம் அடையக் கூடாது. அதனால மனஅழுத்தம் வர வாய்ப்பிருக்கு. பொதுவாகவே இந்த வேலையில் ஸ்ட்ரெஸ் அதிகம்தான்’’ என்கிறார் ஒரு மருத்துவர். 

 

 

‘ஒரு ஆம்புலன்ஸ் டிரைவரின் வாழ்க்கை’ ஆவணப்படத்தை இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், ஸ்கிரிப்ட், ஆய்வு அத்தனையும் செய்திருப்பவர் தினேஷ் குமார். விகடனின் முன்னாள் மாணவப் பத்திரிகையாளர், 11 வயதில் இருந்து குறும்படங்கள் எடுத்து வருபவர். வீடியோ ப்ராஜக்டுகளுக்காக பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றிருப்பவர். இந்த ஆவணப் படத்தை அர்த்தபூர்வமாக உணரும் தினேஷிடம் பேசினோம். 

தினேஷ்

“ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஆம்புலன்ஸ் டிரைவர்களைவெச்சு ஒரு படம் பண்றதுக்காக ஸ்கிரிப்ட் ஒண்ணு எழுதியிருந்தேன். அப்புறம் என் காலேஜ்ல ஒரு டாகுமென்டரி சப்மிட் பண்ண வேண்டியிருந்தது. அதுக்காக இந்தப் படத்தை எடுத்தேன். இதுல இருந்து ஒரு விஷயத்தைக் கத்துக்கிட்டேன். `வாழ்க்கைங்கிறது நிரந்தரமானது இல்லை. அந்த பயங்கரம் எப்போ வேணாலும் நடக்கலாம். வாழ்க்கையில எதை எதிர்கொள்றதுக்கும் நாம தயாரா இருக்கணும்.’ ஷூட்டிங்கப்போ டிரைவர்கள் சொல்லுவாங்க... `காலையில இருக்குறவன், ஈவினிங் இருக்க மாட்டான்’னு. அதுதான் உண்மை. 

 

தினேஷ்

 

எங்களுக்கு ஆரம்பத்துல இந்தப் படத்தை ஷூட் பண்றதுக்கு பெர்மிஷன் கிடைக்குமான்னே பயமா இருந்தது. பல மருத்துவமனைகள்ல எங்களுக்கு அனுமதி கிடைக்கலை. சில ஹாஸ்பிட்டல்ஸ்ல `என்ன... எமர்ஜென்ஸி கால் வர்றப்போ ஷூட்டிங் ஆரம்பிப்பீங்களா?’னு ஷாக் ஆகிட்டாங்க. அதே மாதிரி சென்னை ட்ராஃபிக்ல வேகமா போற ஒரு ஆம்புலன்ஸ் பின்னாடியே போய் ஷூட் பண்றதோ, உள்ளே நோயாளி இருக்கும்போது படம் பிடிக்கறதோ நடக்கக்கூடியதா இல்லை. ஏன்னா, நோயாளி கூட வர்றவங்க அதுக்கு அனுமதிக்கணுமே! 

தினேஷ்

ஒரு பெரிய கட்டடத்தின் கூரை மேல, அபாயமான இடத்துல நின்னுல்லாம் ஷூட்டிங் பண்ணினோம். ஷூட்டிங்ல எங்களுக்கு இருந்த ஒரே எதிரி சூரியன்தான். ஆம்புலன்ஸ் மேல கேமரா வச்சிருப்போம். வெயில்ல சூடாகிடும். அதுக்காக ஒரு குடையையோ, பெட்டியையோ போட்டு மூடிவெச்சிருப்போம். அதிக சூட்டுல சமயத்துல கேமரா வொர்க் ஆகாமப் போயிடும். ஆரம்பத்துல டி.எஸ்.எல்.ஆர் கேமராவைப் பயன்படுத்தினோம். அது வேலை செய்யலை. கீழே விழுந்துடுச்சு. ஆனா, ஒண்ணும் ஆகலை. அப்புறம் அதிக வேகத்துல போறப்போ எடுக்கப் பயன்படும் `ஹை பிரஷர் சக்ஸன் மவுன்ட்’ (High Pressure Suction Mount) கேமராவை கயிறு கட்டிப் பயன்படுத்தினோம். 

நாங்க பண்ணினது மல்டி கேமரா செட்டப். ஒரு கேமரா டயருக்குப் பின்னாடி இருக்கும்... ஒண்ணு ஆம்புலன்ஸுக்கு மேல... இன்னொரு கேமரா பேஷன்ட் கேபின்ல... இன்னொரு கேமரா டிரைவருக்குப் பின்னாடி... இன்னொண்ணு முன்பக்க ஜன்னல்கிட்ட... இதெல்லாம் இல்லாம நாங்க ஆம்புலன்ஸுக்கு பின்னாடி இன்னொரு கார்ல கேமராவோட ஃபாலோ பண்ணுவோம். இது எல்லாத்தையும் ஒண்ணு சேர்த்து எடிட் பண்றது ரொம்ப கஷ்டமா இருந்தது’’ என்கிற தினேஷ் இந்த ஆவணப்படத்துக்காக ஆம்புலன்ஸிலேயே தங்கியிருந்திருக்கிறார். எப்போது எமர்ஜென்ஸி கால் வரும் என்று காத்துக் கிடந்திருக்கிறார். ஒரு நாளைக்கு 5 அல்லது 6 மணி நேரம் மட்டுமே தூக்கம். 

தினேஷ் குமார்

``இதெல்லாம் எனக்குக் கஷ்டமா தெரியலை. மத்தியானம் லஞ்சுக்குன்னு 12:30ல இருந்து 1:00 மணினு ஒதுக்கி வச்சிருந்திருப்போம். அந்த நேரத்துலதான் எமர்ஜென்ஸி கால் வரும். ஒரு நாள் இல்லை... தொடர்ந்து நாலு நாளைக்கு இப்பிடித்தான் நடந்தது. டிரைவர்கள் சாப்பிடாமலேயே ஆம்புலன்ஸை எடுத்துட்டுப் புறப்பட்டுடுவாங்க. சரியா சாப்பிடக்கூட முடியாம என்ன இப்படி ஒரு வேலைனு எனக்கு சங்கடமா இருக்கும்...’’ என்கிறார் தினேஷ்

ரத்தம், முற்றிய வியாதிகள், உயிரை இறுக்கிப் பிடித்துக்கொண்டு வாழப் போராடும் முதியவர்கள், கண்முன்னே நிகழும் மரணம்... இதையெல்லாம் பார்த்து, மனஅழுத்தத்துக்கு ஆளாகி, ஆம்புலன்ஸ் ஓட்டுவதைவிட்டுவிட்டு, வேறு வேலை தேடிப்போன டிரைவர்கள் ஏராளம்.  

ஆனாலும், சுரேஷும் ராபினும் இந்த வேலையை ஆத்மார்த்தமாகச் செய்கிறார்கள். ``எனக்குப் புடிச்சுத்தான் இந்த வேலையைச் செய்யறேன். மத்தவங்களோட உயிரைக் காக்க உதவறோமேனு ஒரு சந்தோஷம் இருக்கு. மத்தவங்களோட வாழ்த்தும் கிடைக்கும்.’’ என்கிறார் சுரேஷ். 

ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சுரேஷ் மற்றும் ராபின்

``நாங்க கொண்டு போன நோயாளிங்க யாராவது இறந்து போயிட்டாங்கன்னா, மனசு ரொம்பக் கஷ்டமா இருக்கும். இன்னும் கொஞ்சம் முன்னாடியே வந்திருக்கலாமோனு வேதனைப்படுவேன்’’ என்கிறார் ராபின். 

பல பிரச்னைகளுக்கு மத்தியிலும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பலரும் இந்த வேலையில் நீடித்திருப்பதற்கு ஒரே காரணம், அவர்களிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் மனிதநேயம்தான்.  ஒரு மருத்துவர் இப்படிச் சொல்கிறார்... ``எல்லாரும் நோயாளி பிழைச்சதும் எங்ககிட்ட வந்து. `உங்களாலதான் அவர் பிழைச்சார்’னு எங்களுக்கு நன்றி சொல்வாங்க. ஆனா, சரியான நேரத்துக்குக் கொண்டு வந்து சேர்த்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு யாரும் நன்றி சொல்றது இல்லை.’’ உணரவேண்டிய உண்மை. 

- பாலு சத்யா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close