வெளியிடப்பட்ட நேரம்: 14:39 (14/03/2017)

கடைசி தொடர்பு:14:54 (14/03/2017)

ஆண்ட்ரோபாஸ்... ஆண்களை பாதிக்கும் ஹார்மோன் பிரச்னை... கவனம்! #MensHealthAlert

`ஹார்மோன் பிரச்னை' என்று சொன்னவுடன் பெரும்பாலானவர்களுக்கு பெண்கள்தாம் நினைவுக்கு வருவார்கள். ஆனால், பெண்களை பாதிக்கிற அதே அளவுக்கு ஹார்மோன் பிரச்னைகள் ஆண்களையும் பாதிக்கும் என்பது பலர் அறியாதது. குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பெண்களுக்கு மாதவிடாய் நின்றுவிடும். மெனோபாஸ் (Menopause) எனப்படும் அந்த நிலை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இதே மாதிரியான ஹார்மோன் மாற்றம் ஆண்களுக்கும் நிகழும். இதை, `ஆண்ட்ரோபாஸ்' (Andropause) என்கிறார்கள். இதை, `ஆண்களுக்கான மெனோபாஸ்' என்றும் சொல்லலாம்.

ஹார்மோன்

ஆண்களின் ஹார்மோன் மாற்றம், பெண்களின் மெனோபாஸ்போல அல்லாமல், மெதுவாகவும் படிப்படியாகவும் நடக்கும். வெளியில் தெரியாத நோய்கள், மனஅழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை போன்றவையும் ஹார்மோன் மாற்றங்களுக்கான காரணங்களே. ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டிருப்பதை சில அறிகுறிகளை வைத்து முன்னரே அறிந்துகொள்ள முடியும். அவை என்னென்னவென்று பார்ப்போம்... 

எடை அதிகரிக்கும்!

ஆண்களின் உடலில் டெஸ்ட்டோஸ்டீரான் (Testosterone) என்ற ஹார்மோன் உள்ளது. ஒருவரின் உடல் அமைப்பு ஆண் தன்மையோடு இருப்பதற்கு இந்த ஹார்மோன்தான் காரணம். இந்த டெஸ்ட்டோஸ்டீரான் அளவு குறையும்போது, உடலில் கொழுப்பும் எடையும் அதிகரிக்கும். அதிகமான மனஅழுத்தம் `கார்டிசால்’ (cortisol) என்கிற மனஅழுத்தத்தை ஏற்படுத்தும்; ஹார்மோனின் அளவை உயர்த்தும். இந்த ஹார்மோன் உயர்வால், உடலில் கொழுப்பு செல்கள் அதிகமாகி, எடை கூடும்.

உடல் எடை அதிகரிக்கும்

ஆண்மைக்குறைவு... உஷார்!

நாம் முன்னரே பார்த்த டெஸ்ட்டோஸ்டீரான் ஹார்மோன், ஆண்களின் இனப்பெருக்க ஆற்றலை மேம்படுத்த உதவுவது. இதன் அளவு குறைந்துவிடும்போது விந்தணுக்களின் உற்பத்தியும் அவை நகரும் தன்மையும் குறையும். இதனால் ஆண்மைக்குறைவு ஏற்படும். தொடர்ச்சியான மனஅழுத்தம், ஆரோக்கியக் குறைவு போன்றவற்றால் கார்டிசால் உயரும்போதும் ஆண்மைக்குறைவு ஏற்படும். 

உடல் சோர்வு!

இரவு முழுக்க நன்றாக ஓய்வெடுத்த பிறகும் உடல் சோர்வாக இருக்கிறதா? அப்படியென்றால், டெஸ்ட்டோஸ்டீரான் அளவு குறைந்திருக்கும். டெஸ்ட்டோஸ்டீரான் அளவு குறையும்போது சோர்வும் தூக்கமின்மையும் ஏற்படும். 

கார்டிசால் (Cortisol) ஹார்மோன் நமது தூக்கத்தைச் சீராக்க உதவுகிறது. தொடர்ச்சியான மனஅழுத்தம், கார்டிசாலின் அளவை அதிகரித்துவிடும். இதனால் சோர்வு, தளர்ச்சி உண்டாகும்.  கார்டிசாலின் அளவு குறையும்போதும் இதே மாதிரியான விளைவுகள் ஏற்படும். 

மனச்சோர்வு ஏற்படும்!

டெஸ்ட்டோஸ்டீரான் அளவு குறையும்போது மனச்சோர்வு ஏற்படும். தைராய்டு சுரப்பி சரியாக செயல்படாதபோதும் மனச்சோர்வு வரும். தைராய்டு ஹார்மோனில் ஏற்படும் குறைபாடு மனநிலை மாற்றம், மகிழ்ச்சியின்மை, ஊக்கமின்மைக்கு வழிவகுக்கும். 

மனச்சோர்வு ஏற்படும்

முடி கொட்டும்!

டெஸ்ட்டோஸ்டீரானுக்கு வேறு எந்த மூலக்கூறாகவும் மாறும் தன்மை உண்டு. முடியில் உள்ள ஒரு என்ஸைம் (Enzyme ) டெஸ்ட்டோஸ்டீரானை , டைஹைட்ரோ டெஸ்ட்டோஸ்டீரானாக (Dihydrotestosterone ) மாற்றிவிடுகிறது.  மிகவும் சக்திவாய்ந்த இந்த ஹார்மோன் , வழுக்கைக்கு முக்கியமான காரணம். இந்த ஹார்மோனால் முடி பலவீனமடையும். மிச்சமிருக்கிற முடியும் மெல்லியதாக மாறிவிடும்.

மார்பகம் மாறுதலுக்கு உள்ளாகும்!

பெண்களின் மார்பக அமைப்புக்கு காரணமான ஹார்மோன்,  ஈஸ்ட்ரோஜென். சாதாரணமாக, ஓர் ஆணின் உடல், ஈஸ்ட்ரோஜென்னைவிட, டெஸ்டோஸ்டீரானைத்தான் அதிகமாக உற்பத்தி செய்யும். அதனால்தான் ஆண்களுக்கு தட்டையான மார்பகம் இருக்கிறது. இந்த அமைப்புக்கு டெஸ்ட்டோஸ்டீரான் ஹார்மோன்தான் காரணம். ஆண்களின் ஹார்மோனில் சமநிலையின்மைத் தன்மை ஏற்பட்டால், உடலில் டெஸ்ட்டோஸ்டீரான் குறைவாகவும், ஈஸ்ட்ரோஜென் அதிகமாகவும் சுரக்கும். இதன் காரணமாக, ஆண்களின் மார்பகம் மாறுதலுக்கு உள்ளாகும். லேசாக வளர்ச்சி அடைந்ததுபோலக்கூடத் தெரியலாம்.

ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக, மேலே சொன்ன ஆறு அறிகுறிகளில் ஏதாவது ஓர் அறிகுறி ஆண்களுக்குத் தென்படலாம். ஹார்மோன் பிரச்னைகளுக்கு வயதாவதும் ஒரு காரணம். அது தவிர, கண்ணுக்குத் தெரியாத பல காரணங்களும் உள்ளன. இந்த அறிகுறிகள் தோன்றும்போதே மருத்துவரைச் சந்தித்து, உரிய சிகிச்சை பெறுவது மிக மிக முக்கியம். கவனம் மக்களே! 

- அகில் குமார்
 


டிரெண்டிங் @ விகடன்