வெளியிடப்பட்ட நேரம்: 07:48 (20/03/2017)

கடைசி தொடர்பு:12:55 (20/03/2017)

வெனிலா, சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்... பரவசம்! உண்மை நிலவரம் என்ன? #HealthAlert

“ஒரு போட்டியில் ஜெயித்ததும், அந்த வெற்றியை ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிட்டுக் கொண்டாடுவது என் வழக்கம்’’ - இப்படிச் சொல்பவர் பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க ஐஸ் க்ரீம் பிரியர்கள் அதிகம். ஒரு பஃபே விருந்தில் விதவிதமான உணவுகள் இருந்தாலும், ஆரம்பத்திலேயே ஐஸ் க்ரீம் கவுன்ட்டர் அருகே களைகட்டும் கூட்டம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் என விதிவிலக்கில்லாமல் அனைவரையும் ஈர்க்கும் அபார சுவை இதற்கு உண்டு. வெனிலா, சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி... என நீள்கிற ஐஸ்க்ரீம் வகைகள் தரும் பரவசம் ஒருபுறம் இருக்கட்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை இதன் உண்மை நிலவரம் என்ன... பார்க்கலாமா? 

ஐஸ்க்ரீம்

முப்பது வருடங்களுக்கு முன்னால் ‘குச்சி ஐஸ்’ என்று ஒன்று இருந்தது. ஒரு சிறிய மர வண்டியைத் தள்ளிக்கொண்டு வருவார் ஐஸ்காரர். உள்ளங்கை அளவுக்கே இருக்கும் சதுரமான மூடியைத் திறந்து, கையை உள்ளேவிட்டு அதை எடுத்துத் தருவார். பார்த்தவுடனேயே பிள்ளைகளுக்கு ஜொள்ளு வடியும். ஆரஞ்சு, மஞ்சள், ரோஸ், சிவப்பு, வெள்ளை, கறுப்பு என விரிகிற நிறங்கள் சொக்கவைக்கும். `அந்த கலர் ஐஸை எடுத்திருக்கலாமோ!’ என தன் கையில் இருப்பதோடு, மற்ற பிள்ளைகளின் கையில் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்து ஏங்கவைக்கும். சில நேரங்களில் ஐஸோடு ஜவ்வரிசி, சேமியா எல்லாம் கலந்து ஜில்லென்ற சுவை மிரட்டும். 

குச்சி ஐஸ், பால் ஐஸ், கப் ஐஸ், கோன் ஐஸ், ஃபலூடா எனப் பல வடிவங்கள்... வெனிலா, சாக்லேட், மேங்கோ, பட்டர்ஸ்காட்ச் என விதவிதமான ஃப்ளேவர்கள்... அத்தனையிலும் ருசித்து ரசிக்க ஐஸ் க்ரீம் போன்ற அட்டகாச உணவு வேறு இல்லை. இன்றைக்கும் தமிழ்நாட்டின் சில நகரங்களில் `குல்ஃபி ஐஸ்’ என்று ஒன்று உண்டு. பெரிய மண் பானையை வண்டியில் வைத்துத் தள்ளிக்கொண்டு வருவார் ஐஸ்காரர். உள்ளே மெட்டல் கிண்ணங்களில், உருண்டை வடிவில் இருக்கும் குல்ஃபியை கத்தியால் லாகவமாகப் பிரித்தெடுத்து, ஒரு குச்சியைச் செருகி நீட்டுவார். லேசாக உப்புச் சுவை கூடிய குல்ஃபி, ஆயிரக்கணக்கான மக்களின் ஃபேவரைட்! இரவு பத்து மணி தாண்டிய பிறகும், காத்திருந்து அதை வாங்கி, சுவைத்து மகிழ்பவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள்.  

ஐஸ்கிரீம்

ஆங்கிலத்தில் இதை `டெசர்ட்’ (Dessert) என்கிறார்கள். அதாவது, உணவுக்குப் பிறகு வழங்கப்படும் இனிப்பு. `ஐஸ் க்ரீமைக் கண்டுபிடித்தது நான்தான் என்று யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஆனால், அது கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம்’ என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள். ஆனாலும், எங்கே, எப்போது, யாரால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது புரியாத மர்மமே! மாவீரன் அலெக்ஸாண்டர் ஐஸ் கட்டிகளுடன் பழச்சாறு, தேன் கலந்து பருகியிருக்கிறான். பைபிளில் சாலமன் அரசன், அறுவடைக் காலங்களில் ஐஸ் கட்டி கலந்த பானத்தைப் பருகியதாகக் குறிப்பு இருக்கிறது. ரோம் நகரை ஆண்ட நீரோ மன்னன் (Nero Claudius Caesar) தன் வீரர்களை பனி மலைகளுக்கு அனுப்பி, அங்கிருந்து பனித்துகள்களைக் கொண்டு வந்து, பழங்களிலும் பழச்சாறிலும் கலந்து பருகியிருக்கிறான். 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யாத்ரீகர் மார்கோ போலோ இத்தாலிக்கு வந்தபோது, கையோடு கொண்டு வந்த ஒரு ரெசிப்பிதான் இன்றைய சர்பத் என்றும் சொல்கிறார்கள். ஐஸ் க்ரீம் என்கிற டெசர்ட் விரிவாக்கம் பெற்றது 16-ம் நூற்றாண்டில் இருக்கலாம் என்கிறார்கள் வரலாற்றாளர்கள். இங்கிலாந்தில் அது ஆரம்பத்தில் `க்ரீம் ஐஸ்’ என்று அழைக்கப்பட்டதாம். இன்னும் ஃபிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா என்று இது உருவான வரலாறு சுற்றிச் சுழன்றடித்து விரிந்துகொண்டே போகிறது. பாரீஸில் உள்ள `கேஃப் புரோகோப்’ (Cafe Procope) என்ற ரெஸ்டாரன்ட்தான் முதன்முதலில் பால், க்ரீம், வெண்ணெய், முட்டை எல்லாவற்றையும் கலந்து ஐஸ்க்ரீமை உருவாக்கி, ஐஸ் க்ரீம் விற்பனையை ஆரம்பித்து வைத்தது என்ற குறிப்பும் இருக்கிறது. இந்தியாவுக்குள் இது நுழைந்ததென்னவோ இந்து குஷ் மலையில் இருந்து டெல்லிக்கு வந்த முகலாயர்களால்தான். ஐஸை அவர்கள் சர்பத்துக்குப் பயன்படுத்தினார்கள்.

ஐஸ்க்ரீம் 

ஐஸ் க்ரீமைப் போலவே அதன் வரலாறும் திகட்டாத சுவை உடையது. `நான் மகான் அல்ல’ படத்தில் ஒரு காட்சி வரும். நடிகர் கார்த்தி, கல்யாண மண்டபத்தில் ஒரு குழந்தைக்கு ஐஸ் க்ரீம் கொடுப்பதற்காக பெட்டியைத் திறப்பார். உடனே மண்டபத்தில் குழுமியிருக்கும் மொத்த குழந்தைகளும் அங்கே படையெடுப்பார்கள். இது வெறும் திரைப்படக் காட்சி அல்ல. உண்மை நிலையும் இதுதான். குழந்தைகள் என்ன... சாப்பாட்டைக் குறைத்துக்கொண்டு ஐஸ் க்ரீமை வெட்டும் பெருசுகளும் இருக்கிறார்கள். அந்தப் பரவசம் ஒருபுறம் இருக்கட்டும்... ஐஸ் க்ரீம் நம் உடலுக்கு ஆரோக்கியம்தானா? டயட்டீஷியன் சௌமியாவிடம் கேட்டோம்... செளமியா

``ஐஸ் க்ரீம் நம் உடலுக்கு நன்மையும் தீமையும் கலந்து தரக்கூடியது... ஆனால், தீமைகளின் அளவு கொஞ்சம் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். அதிகக் கொழுப்புள்ள பால், க்ரீம் கலவையைக் கடைந்து, குளிரூட்டி தயாரிக்கப்படுவது ஐஸ்க்ரீம். `கார்ன் சிரப்’ என்ற வடிவில் ஃப்ரக்டோஸ் (Fructose) அல்லது குளூக்கோஸ் இனிப்புகள் இதில் சேர்க்கப்படுகின்றன. சுவை மற்றும் வாசனைக்காக வெனிலா, சாக்லேட் போன்ற ஃப்ளேவர்களும் கலக்கப்படுகின்றன. இந்தக் கலவை ஜில்லென்று ஆகும்போது குழைந்த க்ரீமாகிறது. 

விதவிதமான வகைகள், இதைத் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றின அடிப்படையில் இதில் உள்ள ஊட்டச்சத்தின் அளவு வேறுபட்டாலும், பொதுவாக ஐஸ் க்ரீம், நம் உடலுக்கு சக்தி தரும் ஒன்று. இதில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. அதாவது, ஒன்றரை கப் (சிறிய அளவு) ஐஸ் க்ரீமில், 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. அதோடு இதில் உள்ள 7 கிராம் கொழுப்பு, 2 கிராம் புரோட்டீன் ஆகியவையும் சேர்ந்து நம் உடலுக்கு சக்தி அளிக்கக்கூடியவை. 137 கலோரி இதில் இருக்கிறது. சுருக்கமாக, ஒன்றரை கப் பாலில் இருக்கும் கலோரியைப்போல இரு மடங்கு! ஆக, உடலில் சக்தி அதிகரிக்க, உடல் எடையைக் கூட்ட நினைப்பவர்களுக்கு இது சிறந்தது. 

இதில் பாஸ்பரஸும் கால்சியமும் நிறைந்துள்ளன. வைட்டமின்கள் ஏ, சி, இ, டி ஆகியவை உள்ளன. தையமின், ரிபோஃப்ளோவின், நியாசின், ஃபோலேட், வைட்டமின் பி-6, வைட்டமின் பி-12, மிகக் குறைந்த அளவில் வைட்டமின் கே ஆகியவையும் உள்ளன. 

ஐஸ்க்ரீம்

அதிகக் கொழுப்புள்ள உணவு ஐஸ் க்ரீம். இதில் பால் கொழுப்பு (Milk Fat) அதிக அளவில் உள்ளது. இது ஒரு நிறைவுற்ற (Saturated) கொழுப்பு. ஒருவருக்கு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள பட்சத்தில், ரத்த நாளங்களில் (Arteries) படியும் கொழுப்பு, ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும்; இதயக் கோளாறுகள், பக்கவாதம் ஆகியவை வருவதற்கும் வழிவகுக்கும். அதோடு சர்க்கரை, கார்போஹைட்ரேட் ஆகியவற்றின் அளவும் இதில் அதிகம். அடிக்கடி அல்லது அதிக அளவில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது உடல் எடையைக் கூட்டும்; பல உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்; பற்சிதைவை உண்டாக்கும். சர்க்கரைநோயாளிகளும், கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்களும் ஐஸ்க்ரீமைத் தவிர்ப்பதே நல்லது. 

ஐஸ் க்ரீமில் லேக்டோஸ் (Lactose) என்ற சர்க்கரைப் பொருள் இருக்கிறது. இது செரிமானம் ஆவதற்கு நம் உடலில் உள்ள லேக்டேஸ் (Lactase) என்ற என்ஸைம்தான் உதவும். உடலில் லேக்டேஸ் குறைவாக இருப்பவர்களுக்கு, `லேக்டோஸ் ஒவ்வாமை’ (Lactose Intolerance) எனும் பிரச்னை ஏற்பட்டு செரிமானத்தைப் பாதிக்கும். இந்தக் குறைபாடு உள்ளவர்கள் ஐஸ் க்ரீம் பக்கம் போகாமல் இருப்பதே சிறந்தது’’ என்கிறார் சௌமியா. 

குழந்தைகளுக்கு பற்சிதைவு, ஐஸ் இருப்பதால் இருமல், சளித் தொந்தரவு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அதிக ஐஸ், தொண்டையை பாதிக்கும். எனவே, ஐஸ் க்ரீமை அளவாக, எப்போதாவது சாப்பிடுவது என வைத்துக்கொள்வதே ஆரோக்கியம்!

- பாலு சத்யா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்