Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறுவனின் காலில் புற்றுநோய்... தலைதூக்கும் தடுப்பூசி சர்ச்சை... நடந்தது என்ன? #MustRead

தடுப்பூசி சர்ச்சைகள் அடங்கிய நிலையில்... ஒரு குழந்தைக்கு தடுப்பூசி போட்ட இடத்தில் புற்றுநோய்க் கட்டி உருவாகியிருக்கிறது. இதனால், அந்தக் குழந்தையின் எதிர்காலமே கேள்விக்குறியாக, பெற்றோர் மருத்துவ உதவிக்காக அரசாங்கத்தை நாட, மீண்டும் தலைத்தூக்கத் தொடங்கியிருக்கிறது தடுப்பூசி சர்ச்சை.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் - சுசிலா தம்பதியின் ஆறு வயது மகன் அன்பரசு. அவனுக்கு அம்மை நோய்க்காக தடுப்பூசி போடப்பட்ட காலில் புற்றுநோய்க் கட்டி உருவாகியிருக்கிறது. நடந்தது என்ன... தடுப்பூசியால்தான் புற்றுநோய்க் கட்டி ஏற்பட்டதா? சிறுவனின் பெற்றோரிடம் பேசினோம். அன்பரசுவின் தந்தை ராதாகிருஷ்ணன் சொல்கிறார்...

தடுப்பூசி

``ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் எங்க சொந்த ஊர். அன்பரசு எங்களுக்கு ஒரே பையன். அவன் பிறந்து ஆறு மாசம் இருக்கும்போது, பக்கத்துல இருக்கும் பள்ளிக்கூடத்துல அம்மை நோய்க்காக தடுப்பூசி முகாம் நடந்துச்சு. அங்கே அவனோட வலது கால்ல தடுப்பூசி போட்டோம். எல்லா தடுப்பூசி போடும்போதும் வர்ற காய்ச்சல் மாதிரி அவனுக்கு ரெண்டு நாள் லேசா காய்ச்சல் வந்துச்சு. நாங்களும் சாதாரணமா இருந்துட்டோம். அதுக்கப்புறம் அடிக்கடி அழுக ஆரம்பிச்சான். குழந்தைங்கிறதால அவனுக்கும் சொல்லத் தெரியலை... எங்களுக்கும் என்ன காரணம்னு தெரியலை. 

ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய் காட்டினா வலி, ஜுரத்துக்கு மாத்திரை மட்டும் தந்தாங்க. ஆனா, நாளாக ஆக புள்ளைக்கு ஊசி போட்ட கால் வீங்கிக்கிட்டே வந்துச்சு. பயந்துபோய் எலும்பு மருத்துவர்கிட்ட கூட்டிட்டுப் போனோம். அவரு `எலும்புல சீழ் பிடிச்சுருக்கு. மூணு மாசத்துல அதுவா குறைஞ்சிடும்’னு சொல்லி அனுப்பிட்டாரு. ஆனா, கட்டி பெருசாகிட்டே போச்சு. காலை நகர்த்த முடியாத அளவுக்கு குழந்தைக்கு வலி வந்துருச்சு. அப்புறம் ஈரோட்டுல இருக்குற தனியார் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனோம். அவங்கதான் `இது புற்றுநோயா இருக்கலாம்’னு சொல்லி, அடையாறு ஆஸ்பத்திரிக்கு எழுதிக் கொடுத்தாங்க. சாதாரண ரத்தக் கட்டியா இருக்கும்னு நினைச்சிட்டுப் போனா, அவங்க...’’ அதற்கு மேல் பேச முடியாமல், ராதாகிருஷ்ணனுக்கு துக்கம் தொண்டையை அடைத்து, அழுகை முட்டுகிறது. சுசிலா தொடர்ந்து பேசினார்...

``அன்பரசுவோட தாத்தாவுக்கு புற்றுநோய் இருந்துச்சு. அதனால‌ இவனுக்கும் வந்துடுமோனு எங்களுக்கு ஒரு பயம். `ஓடி ஆடி விளையாடவேண்டிய குழந்தையை ஒரே இடத்துல உட்கார வச்சிடாதே'னு எல்லா சாமியையும் வேண்டிகிட்டு அடையாறு ஆஸ்பத்திரிக்குப் போனோம். ஆனா, எந்த சாமிக்கும் எங்களோட வேண்டுதல் கேட்கலைபோல. அங்கேயும் `குழந்தைக்கு புற்றுநோய்க் கட்டிதான்’னு சொல்லிட்டாங்க. டாக்டர் எல்லாரும் இங்க்லீஷ்ல பேசினதால, இது என்ன மாதிரி புற்றுநோய்னு எங்களுக்குப் புரியலை. ஆனா, `புற்றுநோயா இருந்தாலும், அதை குணப்படுத்திடலாம்’னு ஆறுதல் சொன்னாங்க. 

என் வீட்டுக்காரர் கட்டட வேலைக்குப் போனாதான் வருமானம். அதனால அவரை ஊருக்கு அனுப்பிட்டு, நான் மட்டும் அவனோட இருந்தேன். அவனுக்கு முடியெல்லாம் கொட்டி போச்சு. புள்ளையோட வலி ஒரு பக்கம், சிகிச்சைக்கு என்ன பண்ணப் போறோம்னு பணத்தை நினைச்சு பயம் இன்னொரு பக்கம். கீமோதெரபிக்காக அங்கே இங்கேனு கடனை வாங்கி, ரெண்டு லட்ச ரூபாய் செலவு பண்ணிட்டோம். குழந்தைக்கு வீக்கமெல்லாம் குறைஞ்சு நல்லா தேறிட்டான். 

எல்லாம் முடிஞ்சிடுச்சுனு நினைச்சா, அடுத்த இடியை தலையில தூக்கிப் போட்டுட்டாங்க. 'குழந்தையோட காலை எடுத்துதான் ஆகணும்'னு சொன்னாங்க; அப்பிடியே உடைஞ்சு போயிட்டோம். காலில்லாத அன்பரசுவை எங்களால‌ நினைச்சுகூடப் பார்க்க முடியலை. `கரன்ட் கொடுக்க முடியுமா?'னு கேட்டப்போ, `கரன்ட் கொடுத்தா அந்தக் கால் வளராது’னு சொல்லிட்டாங்க. அதுக்குமேல எங்க கையிலயும் பணமில்லை; மனசுலயும் தெம்பில்லை. அதான் ஊருக்கு கிளம்பி வந்துட்டோம். ஒரே பையன்... அவனே இல்லைனா இதுக்கு மேல எங்களுக்கும் வாழ்க்கையே இல்லை’’- விரக்தியின் வலியை உணர்த்துகிறார் அன்பரசுவின் தாய்.

தடுப்பூசி

``இந்த மூணு வருஷத்துல அவனுக்கு நிறைய நாட்டு வைத்தியம் பண்ணிட்டோம். `மாட்டு கோமியத்தைக் கொடுத்தா, கேன்சர் குணமாகும்’னு ஒருத்தர் சொன்னார். அதையும் மூணு முறை குடிச்சான். ஆனாலும் இதோ இப்போ பழைய மாதிரி கால் வீங்கிடுச்சு. அந்த ஒரு கட்டி மட்டுமே நாலு கிலோ எடை இருக்கு. பத்தடி தூரம்கூட அவனால நடக்க முடியலை. ஊருல இருக்குற ஆஸ்பத்திரிக்கிக் கூட்டிட்டுப் போனா, `காலையும் எடுக்க முடியாது. எந்தச் சிகிச்சையும் கொடுக்க முடியாது. உயிரோட இருக்கற வரைக்கும் வலி வந்தா மட்டும் மாத்திரை கொடுத்து பார்த்துக்கோங்க’னு சொல்லி அனுப்பிட்டாங்க. 'எனக்கு எப்போம்மா கால் சரியாகும்? நானும் பக்கத்து வீட்டுப் பசங்க மாதிரி விளையாடுவேனா?’னு அவன் கேக்கறப்போல்லாம் செத்துட்டு இருக்கோம்'' - அன்பரசுவின் தாய் தழுதழுக்கிறார். செய்வதறியாமல் நிற்கிறது அந்தக் குடும்பம்.

``தடுப்பூசி போட்டவுடன் தேய்த்துவிடுவோம் இல்லையா... அப்போது ஏற்பட்ட ரத்தக் கட்டியை கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவுதான் புற்றுநோய்க் கட்டியாக மாறியிருக்கிறது. தடுப்பூசியில் எந்தப் பிரச்னையும் இல்லை’' என அரசுத் தரப்பு தெரிவித்தித்திருக்கிறது. இந்த நிலையில், `உண்மையிலேயே தடுப்பூசியால் புற்றுநோய் ஏற்படுமா?’ என்று சமூகநல ஆர்வலரும் மருத்துவருமான புகழேந்தியிடம் கேட்டோம்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி

``முதலில் அந்தக் குழந்தைக்கு என்ன மாதிரியான தடுப்பூசி போட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிய வேண்டும். `அம்மை ஊசி போட்டோம்’ என பெற்றோர் சொல்கிறார்கள். ஆனால், அம்மை ஊசி என்பது ஒன்பதாவது மாதத்தில் போடக்கூடியது. முதலில் கட்டியைப் பார்க்கும்போது அது எலும்பு புற்றுநோய்போல் இருக்கிறது. `தடுப்பூசிகள், புற்றுநோய் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளே இல்லை’ என அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்தியாவிலேயேகூட இதற்கான நிறைய ஆய்வுகள் உள்ளன. தயாரிப்பதற்காக வளர்க்கப்பட்ட கல்ச்சர் மீடியா சரியான பராமரிப்பில் இல்லையென்றாலோ, அந்தத் தடுப்பூசி தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட வைரஸ்கள் திடீர் மாற்றம் அடைந்தவையாக இருந்தாலோ அவை உடலுக்குள் சென்று புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. த‌டுப்பூசி த‌யாரிக்கும்போது சேர்க்க‌ப்படும் அலுமினிய‌ம்கூட‌ புற்றுநோயை ஏற்ப‌டுத்தலாம். இத்தகைய கார‌ண‌ங்க‌ளால் த‌டுப்பூசியே புற்றுநோய் கார‌ணியாக‌ மாற‌ வாய்ப்புள்ள‌து

ஆராய்ச்சி முடிவுகள் இருக்கும்போது, அரசு அதை மறுப்பது தவறு. இப்போதும்கூட கட்டியின் செல்களை பயாப்சி செய்து, செல் பரிசோதனை அல்லது குரோமோசோம் பரிசோதனை செய்தால், அது தடுப்பூசியால்தான் ஏற்பட்டதா என்பதைத் தெளிவுபடுத்த முடியும். அப்போதுதான் உண்மை என்ன என்பதும் தெரிய வரும். அதோடு, இந்த மாதிரியான பரிசோதனைகள் செய்தால், அது வருங்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும் பயன்படும்’’ என்கிறார் புகழேந்தி.

தடுப்பூசியால் பல நோய்களைத் தடுக்க முடியும் என்பது உண்மைதான். ஆனால், அதற்கான தெளிவான அறிவை மக்களிடம் ஏற்படுத்தவேண்டியது அரசின் கடமை. பிறந்தவுடன் தடுப்பூசி அட்டவணை கொடுப்பதுபோல, தடுப்பூசி போடும்போது என்ன செய்யலாம், என்னென்ன செய்யக் கூடாது என்பது குறித்தும் சரியான விழிப்புஉணர்வு ஏற்படுத்தவேண்டியதும் அவசியம்.

எது எப்படி இருந்தாலும், செய்தி வெளியான உடனேயே உயர் நீதிமன்றம் தலையிட்டு, குழந்தைக்கு அடையாறு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தது பாராட்டப்பட வேண்டியதே! 

- க.தனலட்சுமி 

படங்கள்: சரண் பிரசாத்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement