Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேழ்வரகு கூழ்... கம்பங்கூழ்... உண்மைத் தமிழரென்றால், இவற்றைச் சாப்பிடவும்!

சென்னை, தெருவோர உணவுக் கடைகளில் கவனிக்கத்தக்க ஒன்றாகிவிட்டது கூழ் கடை. சாதாரண தள்ளு வண்டி... அதில் சிறு பானைகள், சில பாத்திரங்கள், டம்ளர்கள், சிறு சொம்புகள்! வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்; கடைக்காரர் சொம்பில் ஊற்றிக்கொடுக்கும் கேழ்வரக்குக் கூழ் அல்லது கம்பங்கூழை ரசித்துக் குடிக்கிறார்கள். தொட்டுக்கொள்ள ஊறுகாய், பச்சைமிளகாய், மாங்காய்த்துண்டு, வெங்காயம்... சில இடங்களில் கருவாட்டுத் துண்டு! பைக்குகளில், சைக்கிளில், நடந்து வரும் வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல... காரில் வந்துகூட கூழ் குடித்துவிட்டுப் போகிறவர்களும் இருக்கிறார்கள். சென்னையில், தாம்பரம் தொடங்கி ஆவடி வரை கூழ் கடைகளைப் பரவலாகப் பார்க்கலாம். காலையில் மெரினா கடற்கரையில் இந்தக் கடைகளுக்கு நிரந்தர வாடிக்கையாளர்கள் எல்லாம் உண்டு. அத்தனை அபூர்வமானது கூழ்!  இது, நம் பாரம்பர்ய கம்பங்கூழ் மற்றும் கேழ்வரகுக் கூழின் அருமையை, அதன் மகத்துவத்தை மனிதர்கள் நன்கு உணர்ந்துவிட்ட காலம்!

கேழ்வரகு கூழ்

தமிழர்களின் உணவுப் பாரம்பர்யத்தில் சிறுதானியங்களுக்கு எப்போதுமே முக்கியமான இடம் உண்டு. அதிலும், கேழ்வரகும் கம்பும் தமிழர் வாழ்வியலில் முக்கியமான இடம் பிடித்திருப்பவை. கிராமங்களில் வயல் வேலைக்குப் போகிறவர்களின் பொழுது அதிகாலையிலேயே தொடங்கிவிடும். இருட்டுப் பிரியும் நேரத்தில், சூரியன் உதிக்காத காலையில் ஊரைத் தாண்டி இருக்கும் வயலுக்குப் போக வேண்டும். அப்போதுதான், சூரியன் உச்சிக்கு வந்து சுட்டெரிக்கும் முன்னர் வீடு திரும்ப முடியும். உச்சி வெயிலில் கடினமாக உழைக்க முடியாது என்பதாலேயே இந்த ஷிஃப்ட்! அதற்காக நம் மக்கள் காலையில் ஒரு சொம்பு குடித்துவிட்டு, தூக்கு போணியில் எடுத்துப் போவது கூழ்தான். பெரும்பாலும் கம்பங்கூழ் அல்லது கேப்பை எனப்படும் கேழ்வரகுக் கூழ். இவை நாள் முழுவதற்குமான சக்தியை வழங்கக்கூடியவை. உழவர்கள், உழைக்கும் மக்களின் உடல் உரத்துக்குக் காரணமாக இருப்பவை இந்தத் தானியங்களே! 

கம்பங்கூழ்

எளிய, ஏழை மக்களுக்கு ஊட்டச்சத்து வழங்கக்கூடிய அற்புதமான உணவு கூழ். அதை ஆட்சியில் இருந்தவர்களும் செல்வாக்குப் படைத்தவர்களும்கூட புரிந்துவைத்திருந்தார்கள். அதனால்தான் தமிழகத்தில் பெரும்பாலான சிறுதெய்வ வழிபாட்டிலும், அம்மன் கோயில்களிலும் `கூழ் வார்த்தல்’ ஒரு விழாவாகவே நடத்தப்படுகிறது. கூழ் வார்த்தால் அம்மனின் மனம் குளிரும்; எளியவர்களின் வயிறும் நிறையும் என்பது பலரின் நம்பிக்கை. பஞ்ச காலத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்க இது ஓர் ஏற்பாடு. கஞ்சித்தொட்டியின் ஆதாரமே இந்தக் கூழ்தான். பல அரசியல் கட்சிகளும் செல்வந்தர்களும் வறுமைக் காலங்களில் தொழிலாளர்கள், விவசாயிகள், வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் பசி போக்க கஞ்சித்தொட்டிகளைத் திறந்த வரலாற்றை நாம் அறிந்திருப்போம்.   

கேழ்வரகு கூழ்

பணம் படைத்தவர்களையும், அரசையும், அரசியல்வாதிகளையும் விடுவோம். ஒரு ஆங்கிலேயரே கஞ்சித்தொட்டி திறந்த வரலாறு இந்தியாவில் உண்டு. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் உறுப்பினர், தாமஸ் எட்வர்டு ரேவென்ஷா (Thomas Edward Ravenshaw). 1865 - 1878-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அன்றைய ஒரிஸ்ஸாவில் (இன்றைக்கு ஒடிசா) இருக்கும் கட்டாக்கில் வருமானத் துறை ஆணையராக இருந்தார். அது கடுமையான பஞ்ச காலம். ரேவென்ஷா பொறுப்பான, நல்ல, மக்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட அதிகாரி. பசிக்கொடுமையில் மக்கள் இறந்துபோவதை அவரால் சகிக்க முடியவில்லை. தன் கீழ் இருக்கும் அதிகாரி ஒருவரை அழைத்தார். ஊருக்குப் பொதுவன ஓர் இடத்தில் ஒரு கஞ்சித்தொட்டியை வடிவமைக்கச் சொன்னார். அதில் கஞ்சி தயாரித்து ஊற்றி வைக்கும்படியும் ஆணையிட்டார். அவர் சொன்னது நடந்தது. 

அடுத்த நாள் காலையில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக கஞ்சித்தொட்டி இருந்த இடத்துக்குப் போனார் ரேவென்ஷா. கஞ்சித் தொட்டி இருந்தது; கஞ்சியும் இருந்தது. ஆனால், ஒருவரும் கஞ்சி வாங்கிச்செல்ல வரவில்லை. ஆச்சர்யமடைந்த ரேவென்ஷா, தன் கீழ் பணியாற்றும் அதிகாரியை அழைத்துக் காரணம் கேட்டார். `எஜமான்... இந்த மக்கள் இலவசமாக எதையும் வாங்க மாட்டார்கள். அதனால்தான் கஞ்சி குடிக்க வரவில்லை. வேலை ஏதாவது கொடுத்தால், அதற்குப் பதிலாக ஊதியமாக பணமோ, தானியத்தையோ பெற்றுக்கொள்வார்கள்’ என்றார் அந்த அதிகாரி. 

`வேலைதானே...’ என்று யோசித்த ரேவென்ஷா, ஒரு திறந்த வெளியில் கட்டடம் கட்டச் சொன்னார். ஊர் மக்கள் வந்தார்கள், பெரிய பெரிய அறைகளுடன் கூடிய பிரமாண்டமான கட்டடத்தை எழுப்பினார்கள். ஊதியமாக கம்பு, கேழ்வரகு, கோதுமை, சிறு பணம் என வாங்கிக்கொண்டு போனார்கள். கட்டடம் முழுமையடைந்தது. அதை என்ன செய்வது என்று யோசித்த ரேவென்ஷா அதை கல்விக்கூடமாக மாற்றினார். இது ஒருவேளை கட்டுக்கதையாகக்கூட இருக்கலாம். ஆனால், அவர் கட்டிய கல்விக்கூடம் இன்றைக்கும் ஒடிசாவில் இருக்கிறது, `ரேவென்ஷா பல்கலைக்கழகம்’ என்று அவர் பெயரிலேயே!  

கம்பங்கூழ்

இன்றைக்கு சென்னையில் கூழ் கடை வைத்திருப்பவர்களில் பலரும் கிராமத்தில் இருந்து வந்தவர்களே! அதிலும் வறுமை காரணமாக வட தமிழகத்தில் இருந்து வந்தவர்கள். விலை குறைவு என்பதால், மிகக் குறைவான வருமானமுள்ள தொழிலாளர்களின் பசியைப் போக்குகிறது கேழ்வரகு கூழ் மற்றும் கம்பங்கூழ்! டயட்டீஷியன் பத்மினி இவை இரண்டும் நம் ஆரோக்கியத்துக்கு வழங்கும் நன்மைகளைப் பட்டியலிடுகிறார் இங்கே... 

கேழ்வரகு கூழ் தரும் நன்மைகள்! 

கேழ்வரகில் உடலுக்கு நன்மை தரும் அமினோ அமிலங்களும், கால்சியம், இரும்புச்சத்து, நியாசின், தையமின், ரிபோஃப்ளோவின் ஆகியவையும் உள்ளன. இதில் உள்ள கால்சியம், நம் எலும்பு, பற்கள் உறுதிக்கு உதவும். மோருடன் கலந்து இந்தக் கூழை அருந்தும்போது, உடலைக் குளிர்ச்சியாக்கும்; உடலுக்கு வலுவையும் தரும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு அரு மருந்து. அரிசி சாதத்துக்குப் பதிலாக இந்தக் கூழைக் குடித்துவந்தால், விரைவாக எடை குறையும். இதில் இருக்கும் நார்ச்சத்து நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். எனவே, சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். ஆனால், கூழுக்கு பதிலாக களியாகவோ, ரொட்டியாகவோ சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். இதயநோய்கள் வராமல் காக்கும். மைக்ரேன் தலைவலியைப் போக்கும். அதோடு மனஅழுத்தத்துக்குக் காரணமாகும் பதற்றம், டென்ஷன், மன உளைச்சல், மனச்சோர்வு ஆகியவற்றையும் குறைக்கும். `இன்சோம்னியா’ எனப்படும் தூக்கம் வராத குறைபாட்டை நீக்கும். ஹார்மோன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ரத்தச்சோகை உள்ளவர்கள், ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு இது அற்புதமான மருந்து. செரிமானத்துக்கு உதவும். பாலூட்டும் தாய்மார்கள் இதைக் குடித்துவந்தால், பால் சுரப்பு அதிகரிக்கும். கூழாக மட்டுமல்லாமல், கேழ்வரகை தோசை, அடை, கஞ்சி... என விதவிதமாகச் செய்து சாப்பிடலாம். 

கம்பங்கூழ் தரும் நன்மைகள்! 

நார்ச்சத்து, புரோட்டீன், பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து என நம் உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் நிரம்பியது கம்பு. எனவே, கம்பங்கூழ் தரும் ஆரோக்கியப் பலன்களும் அபாரமானவை. ஆனால், கம்பு செரிமானம் ஆக சற்று நேரம் எடுத்துக்கொள்ளும் அடர்த்தியான தானியம். எனவே, கோடை காலத்தில் இதை அளவாகச் சாப்பிட வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். இதில் நிறைந்திருக்கும் அமினோ அமிலங்களும், வைட்டமின்களும் உடலுக்கு வலுவூட்டக்கூடியவை. கடினமான உடல் உழைப்பு செய்பவர்களுக்கு அதிக சக்தியை அளிக்கக்கூடியது கம்பங்கூழ். அதோடு, சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் இதில் இருக்கும் நார்ச்சத்துக்கு உண்டு. வயிற்றில் இருந்து செரிமானமாகி குடலுக்குச் செல்ல அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால், உடனே பசிக்காது. எனவே, உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு நல்லது. கம்பில் இருக்கும் பைட்டோ கெமிக்கல் (Phyto Chemical), உடலில் கொலஸ்ட்ரால் அளவு சீராக இருக்குமாறு பார்த்துக்கொள்ளும். கம்பில் இருக்கும் நார்ச்சத்து பித்தப்பை கற்கள் உருவாகாமல் காக்கும். தொடர்ந்து கம்பு உணவுகளைச் சாப்பிட்டுவரும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் வெகுவாகக் குறையும். 

- பாலு சத்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement