Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மக்கள் உளவியலால் எகிறும் டி.ஆர்.பி... கேலிக்குள்ளாகும் பெண்கள்!

ஆண், பெண் என்கிற பாலினங்களை இணைச்சொற்களாக இல்லாமல், எதிர்ச்சொற்களாக்கிப் படித்துக்கொண்டிருக்கும் இன்றையக் கல்வி முறையும், பணத்தை மட்டுமே வளர்ச்சியாக நினைத்துவாழப் பழகிவிட்ட வாழ்க்கைமுறையும், இன்றைய இளைய தலைமுறைக்குள் குறிப்பாக பெண்களுக்குள் எப்படிப்பட்ட மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிய சமீபத்திய டாக் ஷோ நிகழ்ச்சி ஒரு முன்னுதாரணம்.

பெண்கள் உளவியல்

நிகழ்ச்சிக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட மனநிலைகொண்ட பெண்கள் வழியாகவும், தன்னுடைய சாதுர்யமான கேள்விகள் வழியாகவும், நிச்சயமாக எடிட்டிங் வழியாகவும் ஒரே கோணத்தில் நிகழ்ச்சி முன்வைக்கப்பட்டிருந்தது. 

இதில் வரதட்சணை கேட்கும் பெண்கள், வரதட்சணை வேண்டாம் எனச் சொல்லும் பெண்கள் என இருந்திருந்தால், இந்தச் சர்ச்சை ஒட்டுமொத்தமாக பெண்கள் மீது திரும்பியிருக்காது. இது, கிட்டத்தட்ட பெண்கள் மீது நடத்தப்படும் தனிப்பட்ட தாக்குதலாக சமூக வளைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது. ஆண்-பெண் ஆதிக்கமோ, அடக்குமுறையோ பெரும்பாலும் சுயம் சார்ந்தது என்பதைவிட, சுற்றத்தாராலும் சமுதாயத்தாலும் முடக்கிவிடப்படும் அரசியலாகவே இருக்கிறது. ஆண் இல்லாத பெண்ணும், பெண் இல்லாத ஆணும் பிரபஞ்ச விதிகளின் கீழ்கூட விளக்கப்பட்டதில்லை. எனவே, இதை ஆண், பெண் எனும் பாலினம் சார்ந்து தாக்கிக்கொள்ளுதல் என்பது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது.

அந்த நிகழ்வில், பெண்கள், பெற்றோர்களிடம் தங்கள் திருமணத்துக்கு எதிர்பார்ப்பது என முன்வைத்ததில் சில... `50 லட்ச ரூபாயில் திருமணம்’, `டைமண்ட் கலெக்‌ஷன்ஸ்’, `அப்பா தங்கியிருக்கும் வீட்டை அவர் இருக்கும்போதே தன் பெயரில் மாற்றித்தருவது’, `365 நாட்களுக்குமான உடைகள்’, `ஆண் வீட்டில் கேட்கும் வரதட்சணையைவிட, இரு மடங்கு அதிக நகைகள்’,` சொகுசு வில்லா’, `தனிக்குடித்தனத்துக்குத் தேவையான வீட்டுசாதனப் பொருட்கள்’, `50-ல் இருந்து 100 சவரன் நகைகள்’, `10 லட்சம் கேஷ்’, `தனக்கும், மாப்பிள்ளைக்கும் விலை உயர்ந்த பைக்’, `ஹெலிகாப்டர் கல்யாணம்’... இப்படி தங்கள் கல்யாணக் கனவுகளை வரதட்சணையாக முன்வைத்திருக்கிறார்கள். இதில் குடும்ப அமைப்பில் பிரதானமாக இருக்கவேண்டிய அன்பை விட்டுவிட்டு, மெட்டீரியலிஸ்டிக்கான வாழ்வை அவர்கள் முன்வைத்திருப்பது வாழ்க்கை பற்றிய அவர்களின் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. ஆனால், இதற்கான விளைவாக அந்தப் பெண்களைக் கிண்டல் செய்து மீம்ஸ்கள் குவிகின்றன.

பெண் உளவியல்

கூட்டுக் குடும்ப வாழ்க்கை சிதறிப் போக ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆனாலும், எனக்குத் தெரிந்து, வேலைக்குச் செல்லும் எத்தனையோ பெண்கள் தன் தந்தையின் ஸ்தானத்திலிருந்து குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்துகின்றனர். பல வீடுகளில் அக்காக்கள் எல்லாம் இன்னோர் அம்மாவாக மாறி தம்பி, தங்கைகளுக்காக வாழ்கின்றனர். `தியாகம் செய்தால்தான் ஒரு பெண்ணை இந்த உலகம் பெண் என ஒப்புக்கொள்ளுமா?’ என்ற கேள்வி வேண்டாம். அப்பாக்களை யாரும் ஆணின் பிரதிநிதியாகப் பார்ப்பதில்லை. குடும்ப அமைப்பில் ஒருவரையொருவர் காப்பது இன்றளவும் தமிழர்களின் கலாசாரத்தில் ஊறிப்போன பண்பாடு. ஆனால், நாமெல்லோரும் குடும்ப அமைப்பில் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்ட வாழ்வை வாழ்ந்துவருவதாக தவறாகவே சித்தரிக்கும் ஊடகத் திணிப்புகளை நாமும் உண்மையென நம்ப ஆரம்பித்துவிடுவோமோ என்கிற அச்சம் அந்த நிகழ்ச்சியைப் பார்த்ததும் எனக்கும் தொற்றிக்கொண்டது.

எங்கோ குறிப்பிட்ட எண்ண அலைகளின் கீழ் முடக்கப்பட்ட ஒரு சாராரின் கருத்துகளை முன்வைத்து, அதை இன்றைய ஒட்டுமொத்தப் பெண்களின் மன ஓட்டமாக, அந்த நிகழ்ச்சி அந்த எபிசோடை முன்வைத்திருக்கிறது. இதனால் வாட்ஸ்அப் வழியாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் நிகழும் பெண்கள் மீதான கிண்டல்களும், வன்மங்களும் ஒரு பக்கம் இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. இன்னொரு பக்கம் நம் மூத்த தலைமுறையினருக்கு பெரும் அச்சத்தையும் கொடுத்திருக்கிறது.

ஆர்வக் கோளாறிலோ அல்லது ஃபேன்டஸி எலிமென்ட்டாகவோ இந்தக் கருத்துகளை அந்தப் பெண்கள் முன்வைத்திருந்தாலும், ஆண்-பெண் பேதமின்றி இது அவர்களின் முதிர்ச்சியின்மையையே முன்வைக்கிறது.

`சொம்பு கொடுத்தாதான் மாப்பிள்ளை தாலி கட்டுவாராம்’ என்று வடிவேலுக்கு நிகழ்ந்ததைப்போல, கருத்துகள் திரித்துக் கூறப்பட்டதாக அவர்கள் சொன்னாலும், நிகழ்வு ஒளிபரப்பப்பட்ட பின்னர் அவர்களது கருத்தாக அவர்கள் பேசியது ஒன்றும், வெளிவந்தது ஒன்றுமாக இருக்கிறது என்று வருத்தப்படுவதும் பயனற்றதே. ஏனென்றால், நிகழ்ச்சி ஒளிபரப்பான சில மணி நேரத்தில், பெண்களைக் கிண்டலடித்துக் கிளம்பிய மீம்ஸ்கள் உச்சத்தைத் தொட்டுவிட்டன. இது அந்தப் பெண்களின் ஒருமித்த கண்டனத்தை முன்வைத்திருக்க வாய்ப்பில்லாத நிலையில், அவர்கள் மீதான தனிப்பட்ட கிண்டல்கள் எல்லையற்றுப் போகின்றன.

பெண்கள் உளவியல்

ஒருவேளை தங்களின் அதீத ஆசைகளாக என்னவெல்லாம் இருக்கின்றன என்கிற கேள்விக்குப் பதிலாக அவர்கள், அம்மாவிடம் எப்போதும் விளையாடும் விளையாட்டாக நினைத்து இதைப் பேசியிருந்தாலும், அந்தப் பெண்கள், `சமுதாயத்தின் முன் தாங்கள் ஒரு பெண்ணின் பிரதிநிதி. இது பெண் சமுதாயத்தின் மீதான மன பிம்பத்தை மாற்றிவிடும்’ என்பதை உணராமல் அல்லது உணர்த்தப்படாமல் கடந்திருப்பதைக் காட்டிவிடுகிறது என்பதையும் உணர வேண்டும். 

`இத்தனை நாட்கள் ஆண்கள் முன்வைத்ததைத்தானே நாங்களும் முன்வைத்தோம், கேட்டுப் பெறுவதில் பெண்களுக்கு உரிமை இல்லையா?’ எனக் கேட்டால், `இன்றைய நாளில் இதே கருத்தை ஓர் ஆண் வெளியிட்டிருந்தால், இந்தச் சமுதாயம் அதற்கு எத்தகைய எதிர்வினை ஆற்றுமோ அதையேதான் இன்று பெண்களும் பாரபட்சமின்றி பெற்றுக்கொள்கிறோம்’ என வைத்துக்கொள்ளலாம். காரணம், இன்று வரை சொத்திலும் அதிகாரத்திலும் பெண் சமஉரிமை உடையவளாகவே உணரப்படுகிறாள். 

எப்படியோ நிகழ்ச்சியின் வெற்றிகரமான டி.ஆர்.பி (TRP), மீம்ஸின் வியாபாரம், சந்தாதாரரின் டேட்டா... எனச் சமுதாயத்தின் அனைத்துகட்டத் தேவைகளையும் உண்மையான பெண்ணியத்தின் மீது சேற்றை வாரி இறைத்து ஈட்டிக்கொண்டிருக்கிறோம். உரிமையைக் கோருவது மட்டுமல்ல, பொறுப்பிலிருந்தும் விலகாமையே பெண்ணியம் என்பதை இந்தச் சமுதாயமும் ஒப்புக்கொள்ளும்.

சமூகப் பார்வை

ஏதோ ஒரு பொதுச்செய்திபோல நாளைய செய்தியில் இது கரைந்து போகும் எனச் சொல்வதற்கில்லை. காரணம், சமுதாயத்தை நோக்கி இனி வரும் சில நியாயமான போராட்டங்களின்போதும் பெண்களின் மீதான கேலிக்கும் ஏளனத்துக்கும் வழிவகை செய்யும் அரசியல் செயலாக இந்த நிகழ்வு மாற்றம் பெற்றுள்ளது.

எங்காவது பாலியல் தொல்லை நிகழ்ந்தால், ஒட்டுமொத்த ஆண்கள் மீதும் எழும் எதிர் அலை தன் நேரம் பார்த்து இன்று பெண்களையும் அதே அளவில் தாக்கிக்கொண்டிருப்பதை உணர முடிகிறது. ஆனால், எந்தவொரு நிகழ்வும் ஒட்டுமொத்த பாலினத்தின் மீதான கருத்தல்ல என்பதை ஒவ்வொரு சூழலில் இருபாலரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

மாறாக மனிதர்களின் மன ஓட்டம் என்பதை ஒட்டுமொத்தமாகவோ, ஒரு நிகழ்ச்சி சார்ந்தோ பிரதிபலிக்கும் இந்த நிகழ்வுகள், மாஸ் சைக்காலஜியை மிக நேர்த்தியாகப் புரிந்துகொண்ட ஊடகங்களின் வெற்றியாகவே இருக்கும். சமூக ஊடகத்தில் தம்மை ஆர்வலராக நினைக்கிறவர்கள் இதைப் புரிந்துகொண்டு செயல்பட்டால், குறைந்தபட்சம் அவர்களுக்காவது ரத்தக் கொதிப்பு கன்ட்ரோலில் இருக்கும்.

- மதுமிதா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement