வெளியிடப்பட்ட நேரம்: 17:18 (29/03/2017)

கடைசி தொடர்பு:17:17 (29/03/2017)

ஐஸ் கட்டிகளைக் கொண்டே முக, சருமப் பொலிவு பெற 8 வழிமுறைகள்!

வந்துவிட்டது கோடைகாலம்! சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தப்பிக்க, மண்பானை, தர்பூசணி, ஜிகர்தண்டா, நன்னாரி சர்பத், வெள்ளரி... எனக் குளிர்ச்சியான உணவுகளைத் தேடித் தேடிச் சாப்பிடுகிறோம்; அரை மணி நேரம் முன்னதாகவே வேலைக்குக் கிளம்பிவிடுகிறோம்; வீட்டில் இருப்பவர்களோ வெயிலுக்குத் தலைக்காட்டாமல், வீட்டுக்குளேயே குளு குளுவென ஏ.சி-யில் அடைந்துகிடக்க விரும்புகிறார்கள்.

ஐஸ் கட்டிகள்

சரி... இப்படி இந்த வெயிலில் நம் சருமத்தையும் அழகாக வைத்திருக்க ஓர் எளிமையான வழி இருந்தால் எப்படி இருக்கும்... அதற்காக என்ன செய்யலாம்? அதிகம் சிரமப்படத் தேவையில்லை. நம் வீட்டில் ஃப்ரிட்ஜில் இருக்கும் ஐஸ் கட்டிகளே நம் அழகைப் பாதுகாக்கப் போதுமானவை. ஐஸ் கட்டிகள், சருமப் பிரச்னைகளைக் குறைக்கக்கூடிய தன்மைகொண்டவை; நம் சருமத்துக்கு அற்புதமானப் பலன்களையும் தரக்கூடியவை.  

முகம், சருமப் பொலிவுக்கு ஐஸ் கட்டிகள் கொண்டு செய்யும் முத்தான 8 வழிமுறைகள் இங்கே...


* ஐஸ் கட்டி, மிக முக்கியமாக முகப்பருக்களுக்கு நன்மை தரக்கூடியது. முகப்பரு சிவந்து போவதையும், வீக்கமடைவதையும், அதன் வலியையும் குறைக்கும். முகப்பருவால் ஏற்படும் காயங்களையும் குணமாக்கும். பருக்களில் பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும். அதனால், ஒரு சுத்தமான காகிதத் துண்டில் ஐஸ் கட்டியை வைத்து சுருட்டித்தான் பருவின் மீது வைக்க வேண்டும்.

ஐஸ் கட்டிகள்


* இது, பொலிவிழந்த சருமத்துக்குப் புத்துணர்வு தரும். வறண்ட சருமம் உடையவர்கள், ஐஸ் கட்டிகளை முகத்தில் தேய்த்தால், சீரான ரத்த ஓட்டம் முகத்துக்குக் கிடைக்கும். இதனால் முகம் சிவப்பாகவும் பளபளப்பாகவும் தோற்றம் தரும். காலையில் எழுந்ததும் ஐஸ் கட்டிகளை முகத்தில் தொடர்ந்து தேய்த்துவந்தால்,  முகப் பொலிவு  இரட்டிப்பாகும்.


*  கண்களுக்குக் கீழ் வீக்கம் இருக்கிறதா? அதைச் சரி செய்வதற்கு ஓர் ஆரோக்கியமான வழி உண்டு. இரவு  உறங்கச் செல்வதற்கு முன்னர் ஐஸ் க்யூப் ட்ரேயில் கிரீன் டீயை ஊற்றி, ஃப்ரீஸரில் வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து, அந்த கிரீன் டீயால் ஆன ஐஸ் கட்டிகளை எடுத்து, கண்களில் ஒற்றியெடுக்கலாம். வீக்கமும் பறந்துவிடும்; கண்களும் அழகாகப் பிரகாசிக்கும்.


* ஐஸ் க்யூப் ட்ரேயில் காய்ச்சாத பாலை ஊற்றி, ஃபிரீஸரில் வைத்துவிட வேண்டும்.  மாலை வீட்டுக்கு வந்ததும், முகத்தைக் கழுவிய பின்னர், இந்த ஐஸ் கட்டியால் முகத்தை லேசாக ஸ்க்ரப் செய்தால், இறந்த செல்கள் நீங்கி ஃபேஷியல் செய்ததுபோல முகம் பிரகாசிக்கும்.


* முகத்திலோ, சருமத்திலோ ஏற்படும் சுருக்கங்களைப் பற்றிக் கவலைப்படாத பெண்களே இருக்க முடியாது. சுருக்கங்களை அகற்றுவதற்கும், அவை வராமல் தடுப்பதற்கும் பல விலை உயர்ந்த க்ரீம்களை எத்தனையோ பேர் உபயோகிக்கிறார்கள். ஆனால், செலவே இல்லாமல் இவற்றைக் குறைப்பதற்கு ஒரே வழி ஐஸ் கட்டிகள்தான். தினமும் ஐஸ் கட்டிகளால் முகத்துக்கு ஒத்தடம் தந்தால், தோல் இறுக்கமடையும். இது, சுருக்கங்கள் உருவாவதைத் தடுக்கும்.


* முகத்தில் அரிப்பு ஏற்பட்டால், அலர்ஜி உண்டானால்  ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்துப் பாருங்கள். மேலும் அரிப்பு ஏற்படாமல் இருக்கும்; அலர்ஜி பரவாமல் தடுக்கும்.


* வெயிலில் அலைந்து திரிந்துவிட்டு, வீட்டுக்கு வந்ததும் கற்றாழைச் சதைப் பகுதி மற்றும் ஐஸ் கட்யால் உடல் முழுவதும் தடவலாம். உடல் கருமை நீங்கி உடல் குளுமையாகும். கற்றாழைக்குப் பதிலாக வெள்ளரிச் சாற்றையும் தடவலாம்.

கற்றாழை


* முகத்தின் தோலில் துவாரங்கள் இருந்தால் அவை குறைவாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, பியூட்டி பார்லரில் மேக்கப் போடுவதற்கு முன்னர் ப்ரைமர் போடுவார்கள். சிலர் ப்ரைமரின் விலை அதிகம் என்பதால், அதை வாங்கிப் பயன்படுத்த மாட்டார்கள். ப்ரைமருக்கு பதிலாக ஐஸ் கட்டிகளை உபயோகிக்கலாம். இது, தற்காலிகமாக, துளைகளைக் குறைக்கும்.


எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லாத ஐஸ் கட்டிகளை உபயோகித்துப் பாருங்கள்... சருமப் பொலிவுக்கும், முகப் பளபளப்புக்கும் உத்தரவாதம் தரும் வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய வழிமுறைகள் இவை!


- கி.சிந்தூரி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்